Sliderவேளாண்மை

விவசாயிகளுக்கு வழிகாட்டும் உழவன் செயலி- முதல்வர் துவக்கி வைத்தார்!

Rate this post

மானிய திட்டங்கள், விதை, உரம் இருப்பு விவரங்கள், வானிலை நிலவரம், விளை பொருட்களுக்கு சந்தை விலை நிலவரம், உதவி வேளாண் அதிகாரிகள் வருகை உட்பட 9 சேவைகளை விவசாயிகளுக்கு கிடைக்கச் செய்திடும் வகையில் ‘‘உழவன் ஆப்ஸ்’’ என்ற செல்போன் ஆப்பை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

மின்னணு வேளாண்மையில் அகில இந்திய அளவில் முன்னோடி மாநிலமாக தமிழகம் உள்ளது. 70 லட்சம் விவசாயிகளின் தகவல் தொகுப்புகள், நில விவரங்கள், மண் வளம், முகவரி மற்றும் வங்கி விவரங்கள் வேளாண் துறை தன்னகத்தே கொண்டுள்ளது. அடுத்த கட்டமாக விவசாயிகளின் தேவையை பூர்த்தி செய்திடும் வகையில் ‘‘உழவன் ஆப்ஸ்’’ என்ற செல்போன் செயிலியை தமிழக வேளாண் துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

மானியங்கள்/

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் செயல்படுத்தப்படும் இந்த செல்போன் ஆப்சை பயன்படுத்தி நெல், சோளம், கம்பு, பருத்தி, துவரை, நிலக்கடலை என அனைத்து பயிர் இனங்களிலும், வேளாண் திட்டங்களிலும் இனம் வாரியாக வழங்கப்படும் மானிய சதவீத விவரங்கள் மற்றும் பயனாளிகள் தகுதிகள் குறித்து விவசாயிகள் அறிந்து கொள்ளலாம்.

பயனாளிகள் வேளாண் துறை சார்ந்த திட்ட பயன்களை பெறுவதற்கு இந்த சேவை மூலம் முன்பதிவு செய்யலாம். பயிர் காப்பீடு செய்த அனைத்து விவசாயிகளும் தாங்கள் பயிர் காப்பீடு செய்தது முதல் இழப்பீடு பெறும் நிலை வரை உள்ள தகவல்களை பதிவு செய்த செல்போன் எண் அல்லது பாஸ்வேர்டை பதிவு செய்து பெற முடியும்.

சந்தை விலை/

தமிழகத்தில் கூட்டுறவு மற்றும் தனியார் உரக்கடைகளில் உள்ள முக்கிய உரங்களின் இருப்பு விவரங்கள் நிகழ் நிழல் முறையில் உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடியும்.தங்கள் வட்டாரத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் கடைகளில் உள்ள சரியான விதை இருப்பு விவரங்களை தெரிந்து கொள்ள முடியும்.

வேளாண் இயந்திரங்களை வாடகைக்கு பயன்படுத்திக் கொள்ள அரசு மற்றும் தனியார் மையங்களை இச்சேவை மூலம் பெற முடியும். தமிழகம் முழுவதும் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் அன்றைய தேதியில் ஏலத்தில் விற்பனையான வேளாண் விளை பெருாட்களின் விலை விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

வானிலை விவரம்/

அடுத்த 4 நாட்களுக்கு தங்களது பகுதியில் வானிலையை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ள வேண்டிய பயிர் சாகுபடி குறித்து அறிவுரையை பெற முடியும். கிராம அளவிலான வேளாண் விரிவாக்க அலுவலர்களின் நிரந்தர பயண திட்டத்தில் சம்பந்தப்பட்ட உதவி வேளாண் அலுவலரின் பெயர், செல்போன் நம்பர், அலுவரின் அடுத்த கிராம வருகை, இடம் மற்றும் தேதி ஆகியவற்றை இந்த ஆப்ஸ் (செயலி) மூலம் எளிதாக தெரிந்து கொள்ள முடியும்.

இதற்கு கூகுள் பிளே ஸ்டோர் மூலம் தங்களது ஆன்ட்ராய்டு செல்போனில் ‘‘உழவன் ஆப்ஸ்’’ என்ற செயிலியை பதிவிறக்கம் செய்து விவசாயிகள் பயன் பெறலாம்.

இந்த சேவையை தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்துள்ளார்

உழவன் ஆப்ஸ்’’ சேவைகள் :

1. மானிய திட்டங்கள்

2. இடுபொருள் முன்பதிவு

3. பயிர் காப்பீடு விவரம்

4. உரங்கள் இருப்பு நிலை

5. விதை இருப்பு நிலை

6. வேளாண் இயந்திரம் வாடகை மையம்

7. சந்தை விலை நிலவரம்

8. வானிலை முன்னறிவிப்பு

9. உதவி வேளாண் அதிகாரி வருகை

Comment here