விஷால் மனு ஏன் தள்ளுபடி ஆனது! – தேர்தல் அதிகாரி முழுத் தகவல்!

5 (100%) 1 vote

ஆர்.கே.நகரில் வரும் டிசம்பர் 21ஆம் தேதி நடைபெறும் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக, கடந்த டிசம்பர் 4ஆம் தேதியன்று வேட்புமனு தாக்கல் செய்தார் நடிகர் விஷால். சுயேச்சையாகப் போட்டியிட விருப்பம் தெரிவித்த இவரது வேட்புமனு, நேற்று மாலை நிராகரிக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியானது.

விஷாலை முன்மொழிந்த இரண்டு பேரின் கையெழுத்து போலியானது என்று கூறி, அவரது மனு நிராகரிக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. அந்த இரண்டு பேரில் ஒருவரது குடும்பத்தினரை சிலர் மிரட்டியதால் இவ்வாறு நிகழ்ந்ததாக, தேர்தல் அலுவலரிடம் முறையிட்டார் விஷால். இதனையடுத்து, அவரது மனு ஏற்றுக்கொள்ளப்பட்டதாகச் சொல்லப்பட்டது. ஆனால், இரவு 11 மணிவாக்கில் மீண்டும் விஷாலின் மனு நிராகரிக்கப்பட்டதாக, தேர்தல் அலுவலர் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

தனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது நியாயமற்றது என்று கூறி, இன்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் முறையிட்டார் நடிகர் விஷால். இதனைத் தொடர்ந்து, ஆர்.கே.நகர் தேர்தல் அலுவலர் வேலுச்சாமியும் லக்கானியைச் சந்தித்து விளக்கமளித்தார்.

இந்த நிலையில், இன்று மாலை வேலுச்சாமி ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளார். அதில்

”ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட மனு செய்த விஷால் கிருஷ்ணாவை முன்மொழிந்துள்ள 10 பேரில் சிலரது நம்பகத்தன்மை பற்றி எதிர்ப்பு எழுந்தது. பிறகு நான் விஷால் கிருஷ்ணா சார்பில் ஆஜரானவரை அழைத்து பேசினேன். அவரைத் தொடர்ந்து விஷால் கிருஷ்ணாவின் வேட்புமனுவை ஏற்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தவர்களின் கருத்தை கேட்டேன்.

சுமதி, தீபன் என்ற 2 பேரை என் முன்பு கொண்டுவந்து ஆஜர்படுத்தினார்கள் விஷால் கிருஷ்ணாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள். இதில் சுமதி என்பவர் பெயர், விஷாலின் வேட்பு மனுவை முன்மொழிந்த 10 பேரில் முதல் நபராக இடம்பெற்றிருந்தது. தீபன் என்பவர் பெயர் விஷாலை முன்மொழிந்தவர்களில் 9வது பெயராக இடம்பெற்றிருந்தது.

‘‘நாங்கள் நடிகர் விஷாலை முன்மொழியவில்லை. விஷாலின் வேட்பு மனுவில் எங்கள் இருவரது பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. அதில் உள்ள கையெழுத்து எங்களது கையெழுத்து இல்லை’’ என்று சுமதி, தீபன் இருவரும் கூறினர். இதை என்னிடம் எழுத்துப்பூர்வமாகவும் கொடுத்தனர். அது வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சுமதி, தீபன் இருவரிடமும் தனிப்பட்ட முறையிலும் விசாரணை நடத்தினேன். இந்த நிலையில் பிற்பகலில் விஷால் கிருஷ்ணாவும், அவரது பிரதிநிதிகளும் என் முன் ஆஜரானார்கள். அப்போது விஷால் என்னிடம் ஒரு ‘ஆடியோ கிளிப்’பை ஓடவிட்டார்.

அந்த ‘ஆடியோ கிளிப்’பில், விஷால் கிருஷ்ணாவும், சுமதியின் உறவினர் என்று கூறிக்கொள்ளும் ஒருவரும் பேசிக்கொண்ட உரையாடல் இடம்பெற்றிருந்தது. அதில், ‘‘தேர்தல் அதிகாரி முன்பு சுமதி தாமாக முன்வந்து ஆஜராகவில்லை. சிலர் அவரை மிரட்டி கடத்திச் சென்று ஆஜர்படுத்திவிட்டனர்’’ என்று இருந்தது.

இதையடுத்து விஷால் தரப்பையும், அவரது எதிர்ப்பாளர் தரப்பையும் மீண்டும் அழைத்து பேசினேன். இரு தரப்பினரிடமும் விசாரணை நடத்தினேன். நான் விசாரித்தவரை சுமதி, தீபன் இருவரும் தாமாகவே என் முன் வந்து ஆஜராகி இருப்பது தெளிவாக தெரிந்தது.

தங்களது கையெழுத்து போலியாக போடப்பட்டு இருப்பதாக அவர்கள் கூறியதிலும் நியாயம் உள்ளது. மேலும் விஷால் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ‘ஆடியோ கிளிப்’பில் உள்ள உரையாடலில் பேசுபவர் பற்றிய நம்பகத்தன்மையை உறுதிபடுத்த இயலவில்லை.

இதன் காரணமாக விஷாலுக்கு போதுமான நபர்கள் முன்மொழியவில்லை என்ற முடிவுக்கு வந்தேன். எனவே விஷால் தனது வேட்பு மனுவை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை என்று முடிவு செய்தேன். ஆகையால் விஷால் கிருஷ்ணா வேட்பு மனுவை நான் நடத்திய விசாரணையின் அடிப்படையில் தள்ளுபடி செய்து உத்தரவிட்டேன்” என்று இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*