உலகம்

வெனிசூலா நாட்டின் இடைக்கால அதிபராக தன்னை தானே அறிவித்தார் எதிர்க்கட்சி தலைவர் அமெரிக்கா அங்கீகாரம்

Rate this post

கராக்கஸ் : தென் அமெரிக்க நாடுகளில் ஒன்று வெனிசூலா. எண்ணெய் வளம் மிகுந்த இந்த நாட்டில் அதிபராக இருந்த சாவேஸ் கடந்த 2013-ம் ஆண்டு காலமானார். அதனை தொடர்ந்து நிகோலஸ் மதுரோ வெனிசூலாவின் அதிபர் ஆனார்.

நிகோலஸ் மதுரோவின் ஆட்சியில் அந்நாடு கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்தது. அதிபருக்கு எதிராக போராட்டங்கள் வெடித்தன. அதிபரை வீழ்த்த அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றாக கைகோர்த்தன.

எனினும் நிகோலஸ் மதுரோ இரும்பு கரம் கொண்டு போராட்டங்களை ஒடுக்கினார். எதிர்க்கட்சி தலைவர்களை சிறையில் தள்ளினார். கடும் எதிர்ப்புக்கு மத்தியில் கடந்த ஆண்டு மே மாதம் அதிபர் தேர்தலை அவர் நடத்தினார்.

இதில் நிகோலஸ் மதுரோ வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். ஆனால் தேர்தலில் முறைகேடு நடந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

மேலும், நாடாளுமன்றத்தில் முழுவதுமாக ஆதிக்கம் செலுத்தி வரும் எதிர்க்கட்சியினர், நிகோலஸ் மதுரோ அதிபர் பதவி ஏற்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும், கடந்த 10-ந் தேதி 2-வது முறையாக அந்நாட்டின் அதிபராக நிகோலஸ் மதுரோ பதவி ஏற்றுக்கொண்டார்.

இதற்கிடையில் எதிர்க்கட்சி தலைவரான நாடாளுமன்ற சபாநாயகர் ஜூவான் குவைடோ (வயது 35), தான் அதிபர் ஆவதற்கு தயாராகி வருவதாக அறிவித்தார். ஒரு கட்டத்தில் அவரை பாதுகாப்பு படை வீரர்கள் கைது செய்து, பின்னர் விடுவித்தனர்.

இந்த விவகாரம் சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்தது. ஜூவான் குவைடோ கைது செய்யப்பட்டதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்தன. அதே வேளையில், நிகோலஸ் மதுரோவை பதவி விலக வலியுறுத்தி போராட்டங்கள் வெடித்தன.

இந்த நிலையில், நிகோலஸ் மதுரோவுக்கு எதிராக தலைநகர் கராக்கசில் பிரமாண்ட பேரணியை நடத்த ஜூவான் குவைடோ அழைப்பு விடுத்தார். இந்த போராட்டத்துக்கு அமெரிக்கா நேரடியாக தனது ஆதரவை தெரிவித்தது.

வெனிசூலாவில் சர்வாதிகார அதிபரை வீழ்த்தி, ஜனநாயகத்தை மீட்டெடுக்க எப்போதும் துணை நிற்கும் என அமெரிக்கா உறுதி அளித்தது.

இந்த நிலையில், திட்டமிட்டப்படி நேற்று முன்தினம் கராக்கசில் பிரமாண்ட பேரணி நடந்தது. அதே போல் நாட்டின் பிற நகரங்களிலும் அதிபருக்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெற்றன.

இந்த போராட்டத்தின் போது கராக்கஸ், பரினாஸ், தச்சிரா, பொலிவர் ஆகிய நகரங்களில் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது. போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் போராட்டக்காரர்கள் 16 பேர் பலியாகினர்.

இதற்கிடையில் கராக்கசில் நடந்த பேரணியின் போது, ஜூவான் குவைடோ தன்னை தானே வெனிசூலாவின் இடைக்கால அதிபராக அறிவித்துக்கொண்டார். இது வெனிசூலா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையே ஜூவான் குவைடோவை வெனிசூலாவின் இடைக்கால அதிபராக அமெரிக்கா அங்கீகரித்துள்ளது. வெனிசூலாவின் ஜனநாயகத்தைக் காக்க அமெரிக்கா தனது பொருளாதாரம் மற்றும் தூதரக அதிகாரத்தின் முழு பலத்தையும் பயன்படுத்தும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.

மேலும், அமெரிக்காவை போல பிற நாடுகளும் ஜூவான் குவைடோவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தி உள்ளார். அந்த வகையில் ஜூவான் குவைடோவுக்கு கனடா தனது ஆதரவை தெரிவித்துள்ளது.

அதேசமயம் ரஷியா மற்றும் துருக்கி ஆகிய 2 நாடுகளும் நிகோலஸ் மதுரோவுக்கு தங்களுடைய ஆதரவை தெரிவித்துள்ளன.

இதற்கிடையில், ஜூவான் குவைடோவுக்கு ஆதரவு அளித்ததால் அமெரிக்கா உடனான அனைத்து உறவுகளையும் முறித்துக்கொள்வதாக அதிபர் நிகோலஸ் மதுரோ அறிவித்தார்.

Comment here