Sliderஆன்மிகம்

வைரத்தில் திருவோடு — வயிறாரச் சோறேது?

Rate this postதேன் தித்திப்பு, என சுவைத்தவர்கள் உரைத்தார்கள்…
நாமும் சுவைத்தோம் — உண்மைதான் தெளிந்தோம்.
எந்தத் தேனைப் பருகினாய்? எகத்தாளமாய் சிலபேர்…

ஆன்மீகம் அதுபோல…ஆயிரம் முரண்பாடு…

கண்ணப்ப நாயனார்க்கும், காட்சி தந்த நம்பெருமான்…
எண்ணங்கள் தூயதாகின், எத்தவமும் தேவையில்லை.

வழிபாடு என்பது, முடிவில்லா விசயம்…
முடிவாகச் சொல்வதற்கு…முயல்பவர்கள் முட்டாள்கள்…

அடம்பிடிக்கும் குழந்தைக்கு, அம்மா சொல்வதெல்லாம்…
அன்னமின்றித் தூங்கினால் — சாமி கண்ணைக் குத்தும்.
ஆண்டவனுக்கு அர்ச்சனை செய்…அதைவிடுத்து சிலபேர்.
நம் அடியார்க்கு அர்ச்சனைகள்…வசவு மொழியில்…

எம்பெருமானைத் தரிசிக்க, எல்லோர்க்கும் உரிமையுண்டு…
சிவனடியார்கள் அனைவருமே, அவன் அமைத்த தளபதிகள்.

கட்டளைகள் இடுகின்றான், கரம் கூப்பி முடிக்கின்றோம்…

“” பல்லாண்டு காலங்கள், சிவத்தை தேடுவது…
பலநூறு மேடைகளில், படித்தவற்றைத் தெளிப்பது…
அன்பே சிவம் என்று… அழகாகச் சொல்வது…
ஆயிரம் பேர்களுக்கு, ஆசான்நான் என்பது “”

ருத்திராக்கம் அணிந்த பூனைகளாய்ச் சிலர்.

அடியாரில் துளிவிஷமாய்க் கலந்திட்ட சிலபேரால்…
துக்கம் கண்டு, தூக்கம் காணாது பலபேர்…

கண்காணியைக் கரம்கூப்ப — காப்புரிமை யாரிடத்தில்?

அச்சம் கொள்ளாதே! ஆன்மீகப் பற்றுக்கொள்…
பிச்சைக்காரன் போல், பிதற்றாது வாழ்…

எத்தொழிலைச் செய்தாலும், யதார்த்தமாய் செய்திடு…
ஆற்றில் குதிப்பவர்க்கு, நீச்சல் தான் மூலதனம்.

அணுவிலும் அவனுண்டு — உன்னுள் ஏன் இல்லை?

பார்க்கின்ற அனைத்திலும், பரமனையே காண்பாராம்…
வியர்க்கின்ற பணி இல்லை…அரண்மனையில் வாழ்வாராம்.

அடியாரைச் சீண்டும், அன்புள்ளம் கொண்டோரே…
மெய்ப்பொருள் நாயனாரை, மீண்டும் படியுங்கள்…
முடிவில்லா அய்யம்… முத்தநாதன் யாரென்று?

தித்திக்கும் வார்த்தைக்குத் தமிழில் பஞ்சமில்லை…
மும்மலத்தில் முதலில்… அழித்திடுவீர் ஆணவத்தை…

அடியார்கள் தவறிழைத்தால், அன்பாகத் திருத்துங்கள்…

அன்போடு வாழ, அனைவர்க்கும் அருள்புரிவார்…
நம்மோடு வாழ்வோரை — நயந்து போற்றினால்…

யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே

திருச்சிற்றம்பலம்.

மகான் திருமூலர் அருட்குடில்,
ஈச்சனாரி (விநாயகர் கோவில் அருகில்),
கோவை – பொள்ளாச்சி பிரதான சாலை,
கோயம்புத்தூர் – 641021

அலைபேசி: 96 88 56 86 55 மற்றும் 97 88 11 9224.

Comment here