Sliderவரலாறு

வ.உ.சி-யிடம் காந்தியடிகள் வேண்டியிருக்கிறார். 

காந்தி அடிகளுக்கும் வ.உ.சி அவர்களுக்கும் இடையே இருந்த தொடர்பு பற்றி பலரும் கேட்டிருந்தார்கள்

இந்தியாவின் விடுதலைக்கு வித்திட்டவ.உ.சிக்கு ஆங்கிலேய அரசு கொடுத்த துயரங்கள் கொஞ்சம்நஞ்சமல்ல. மனதாலும், உடலாலும் பாதிக்கப்பட்ட அவரை, வறுமையும் வேறு வாட்டிக் கொண்டிருந்தது. அதுபோன்ற காலகட்டத்தில் அவர், காந்தியடிகளுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அதில், “கடந்த இரண்டாண்டுக் காலமாக தென் ஆப்பிரிக்கா நண்பர்கள் தயவே என் குடும்பத்தைக் காத்து வருகிறது. எனக்குத் தரப்பட்ட பணத்தை நான் வேண்டாம் என்று சொல்ல எக்காரணமும் இல்லை. இப்போதிருக்கும் நிலையில், அந்தப் பணம் வேண்டாம் என்று சொல்வேனானால், அது எனக்கும் என் குடும்பத்துக்கும் நான் இழைத்த தவறாகும்” என்று எழுதியுள்ளார்.

வ.உ.சி-க்கு உதவுவதற்காகத் தென் ஆப்பிரிக்காவில் வசித்த வேதியப்பார் என்பவர், 5,000 ரூபாய் வசூலித்து காந்தியடிகள் மூலம் கொடுத்துயனுப்பியிருக்கிறார். அதை காந்திஜி,பல்வேறு அரசியல் காரணங்களால் அவரிடம் கொடுக்க மறந்துபோய்விட்டார். பின்னர், கடும் அலைச்சல்களுக்கிடையே எட்டு வருடங்கள் கழித்து வட்டியுடன் அந்தப் பணத்தைப் பெற்றுக்கொள்ளுமாறு வ.உ.சி-யிடம் காந்தியடிகள் வேண்டியிருக்கிறார்.
அதற்கு அவர், “அவர்கள் அனுப்பிய பணத்தை மட்டும் கொடுத்தால் போதும்… அதற்கு வட்டி எல்லாம் வேண்டாம்” என்றாராம்.

இப்படித் தன் கஷ்டத்தைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், இந்தியாவின் விடுதலைக்காகக் கடைசிவரை உழைத்துத் தன்னுயிரையே நீத்த வ.உ.சி., “என்னைச் சிறையிலடைத்துத் துன்புறுத்தியவர்கள் முன்னால் நான் சுதந்திர இந்தியாவில் வாழ முடியவில்லையே” என்று கூறி வருத்தப்பட்டாராம்.

வ.உ.சி.4 நூல்களை மொழிபெயர்த்துள்ளார். அவையனைத்தும் ஜேம்ஸ் ஆலன் என்பவரால் எழுதப்பட்டது. மொழிபெயர்ப்புப் பணி அவ்வளவு எளிதானதல்ல.வ.உ.சி.யின் மொழிபெயர்ப்பு நிறைவானதாகவும் மதிப்பு மிக்கதாகவும் அவரது திறமையை வெளிப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது. அவை அனைத்துமே அறத்திற்கும் நேர்மறை எண்ணங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கக் கூடிய நூல்களாகும்.ஜேம்ஸ் ஆலன்னின் இந்தப்புத்தகங்கள் ஒப்பற்றவை .முதல்தரமானவை இன்னமும் கூட அத்தகையபுத்தகங்கள்வெளியாகவில்லைஎனக்கூறலாம் இத்தனை நூல்களில் ஆழ்ந்து புரிந்திருந்த
அவரின் வாழ்க்கை ஏன் இத்தனை துயரமாகஇருந்தது .அவரின் குடும்பம் கல்வி , அறிவு செய்திறன் ,அர்ப்பணிப்பு அத்தனையும் இத்தனை உயர்தரமான இருந்தபோதும்
அவரின் வாழ்வு இத்தனை துயரமாக மாறியதுஎப்படி?..
வள்ளுவருக்கு 200 வருடங்களுக்கு முன் வந்த அதே சந்தேகமே நமக்கும் எழுகிறது .
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்.
பதில் தெரியாத வினாவில் இதுவும் ஒன்று இன்றளவும் இதுவேத் தொடர்கிறது .

வ.உ.சி.அவர்கள் ஒரு சிறந்த பதிப்பாளர்
தமிழறிஞர் வ.உ.சியின் .நூல்கள்
வ.உ.சி. இயற்றிய நான்கு நூல்களுமே கவிதைகளால் ஆனவைதான். அவை 1.மெய்யறம் 2.மெய்யறிவு 3.பாடல் திரட்டு 4.சுயசரிதை

மெய்யறம்-1914

மெய்யறம் 125 அதிகாரங்களை உடையது. ஒவ்வொரு அதிகாரமும் 10 பாடல்களைக் கொண்டது. ஒரு பாடல் என்பது ஒரு வரி மட்டுமே உடையது. மெய்யறம் 5 பகுதிகளை உடையது. முதல் பகுதி மாணவர்களுக்கானது. அதில் 30 அதிகாரங்கள் உள்ளன. இரண்டாவது பகுதி இல்லறத்தார்களுக்கானது. அதுவும் 30 அதிகாரங்கள் உடையது. மூன்றாவது பகுதியில் ஓர் அரசன் எவ்வாறு இருக்க வேண்டும் என்று 50 அதிகாரங்களில் வ.உ.சி. விளக்குகிறார். நான்காவது பகுதி 10 அதிகாரங்களுடன் நன்னெறி குறித்து விளக்குகிறது. கடைசிப் பகுதியில் உண்மையை அடைவது எப்படி என்று 5 அதிகாரங்களில் வ.உ.சி. விளக்குகிறார்.

மெய்யறிவு-1915

வ.உ.சி. கண்ணணூர் சிறையில் இருக்கும் போது மற்ற கைதிகளுக்கு நீதி, நெறிகளை விளக்குவார். அக்கைதிகள் இந்த அறிவுரைகள் செய்யுள் வடிவில் இருந்தால் மனனம் செய்ய எளிதாக இருக்கும் என்று வ.உ.சி. யிடம் கூறினார்கள். அவ்வாறு இயற்றப்பட்ட செய்யுள்களே மெய்யறிவு என்ற நூலாகும். அது 10 அதிகாரங்கள் உடையது. ஒவ்வொரு அதிகாரமும் 10 செய்யுள்கள் உடையது. ஒவ்வொருசெய்யுளும் 4 வரிகள் உடையது. இந்த நூலில் வ.உ.சி தன்னை அறிந்து கொள்வது எப்படி, நம் விதியைத் தீர்மானிப்பது எவ்வாறு, ஆரோக்கியத்தைப் பேணும் முறைகள், மனதை ஆளுவது எங்ஙனம், நம் மனத்தில் தீய எண்ணங்களை விலக்கி நல்ல எண்ணங்களை ஏற்படுத்துவது எப்படி, உண்மை நிலையை என்ன செய்ய வேண்டும் என்று விளக்குகிறார்.

பாடல் திரட்டு-1915

இந்நூல் பல சந்தர்ப்பங்களில் வ.உ.சி. எழுதிய பாடல்களின் தொகுப்பாகும். இது அவரது தலை சிறந்த படைப்பாகும்.

சுயசரிதை-1946

இது இரு பகுதிகளை உடையது. முதல் பகுதி 1916-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதில் அவர் தனது குழந்தைப் பருவம், ஆசிரியர்கள், குடும்பம், சட்டக்கல்வி இவற்றைப் பற்றிக் குறிப்பிடுகிறார். இரண்டாவது பகுதி 1930-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதில் கோயம்பத்தூர் சிறை வாழ்க்கை, சிறை அதிகாரி மீது தாக்குதல், சிறையில் ஏற்பட்ட கலவரம், கண்ணணூர் சிறை வாழ்க்கை, ஆஷ் கொலை, விடுதலை இவை குறித்து விளக்குகிறார். அவர் இறந்து 10 ஆண்டுகளுக்குப் பிறகு 1946- ஆம் ஆண்டு இரண்டு பகுதிகளும் சேர்ந்து ஒரே நூலாக வெளி வந்தது.

உரை எழுதிய நூல்கள்
வ.உ.சி. இன்னிலை, சிவஞான போதம், திருக்குறள் ஆகிய நூல்களுக்கு உரை எழுதி உள்ளார்.

இன்னிலை-1917

வ.உ.சி. ரத்தினக் கவிராயர் எழுதிய இன்னிலை என்ற நூலுக்கு விளக்க உரை எழுதினார். அந்த நூலைப் படிக்கும் போது அவரது இலக்கணப் புலமையை நாம் அறிந்து கொள்ளலாம்.

சிவஞான போதம்-1935

சிவஞான போதம் ஒரு பக்தி நூலாகும். வ.உ.சி. இந்நூலுக்கு மிகச் சிறந்த விளக்க உரை எழுதியுள்ளார். இந்நூலினை ஆழமாக ஆராய்ச்சி செய்ததில் தத்துவம் மற்றும் பக்தியில் சிறந்தவர் ஆனார். மத வேற்றுமை காண்பவர்கள் “யான், எனது” என்னும் மத வெறி பிடித்தவர்களென்றும் நாடு இருக்கும் ஒற்றுமையற்ற நிலையில் மதவேற்றுமை காண்பது நாட்டு ஒற்றுமைக்குத் தீங்கு ஏற்படுத்தக் கூடியது என்றும் வ.உ.சி. இந்நூலில் கூறுகிறார். அவர் இந்நூலில் மதங்களின் பொய்யான உயர்வு, தாழ்வு குறித்து ஒன்றும் எழுதவில்லை.

திருக்குறள்-1935

பழந்தமிழ் இலக்கியங்களான திருக்குறள், தொல்காப்பியம் இவற்றின் மீது வ.உ.சி.க்கு அளவு கடந்த பற்று உண்டு. அவரது உரை அவரது ஆழ்ந்த இலக்கண அறிவை வெளிப்படுத்துகிறது. அவர் பொருள் கூறும் விதம், பல் வேறு உரைகளை ஒப்பிடும் விதம், அவர் தரும் இலக்கணக் குறிப்புகள் இவற்றின் மூலம் அவர் எவ்வளவு பெரிய மேதை என நாம் அறியலாம்.

வ.உ.சி. யால் பதிப்பிக்கப்பட்ட நூல்கள்

1.திருக்குறள் (மணக்குடவர் உரையுடன்)-1917
2.தொல்காப்பியம் (இளம்பூரனார் உரையுடன்)-1928
கட்டுரைகள்
வ.உ.சி பல்வேறு விஷயங்களைப் பற்றி வெவ்வேறு பத்திரிக்கைகளில் நிறைய கட்டுரைகள் எழுதியுள்ளார். வ.உ.சி. எழுதிய நூல்கள் பல போதிய நிதி வசதி இல்லாததால் பதிப்பிக்கபடவில்லை. ஆனால் இப்பொழுது அக்கையெழுத்துப் பிரதிகள் கிடைக்கவில்லை. அவை காணாமல் போய்விட்டன. அவற்றுள் சில நமக்குக் கிடைத்துள்ளன.

கடவுளும் பக்தியும்
கடவுள் ஒருவரே
மனிதனும் அறிவும்
மனமும் உடம்பும்
வினையும் விதியும்
விதி அல்லது ஊழ்
வ.உ.சி.யின் அரசியல் சொற்பொழிவு

வ.உ.சி.தலை சிறந்த மேடைப் பேச்சாளர்.சேலத்தில் நடந்த மூன்றாவது காங்கரஸ் மாநாட்டில் அவர் நிகழ்த்திய தலைமையுரை “எனது அரசியல் பெருஞ்சொல்” என்ற தலைப்பில் வெளி வந்துள்ளது.

வ.உ.சி. விவேகபானு, இந்து நேசன், தி நேஷனல் போன்ற பத்திரக்கைகளுக்கு ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார்.

ஏனோ வ.உ.சிஅவர்களின் இத்தனை பெருமையும் வெளியில் அதிகம் அறியப்படாமல் இருக்கிறது .!

சிதம்பரனார் செய்த தியாகங்களை உலகறிய செய்தவர் ம.பொ.சி. வ.உ.சியின் வரலாற்றை பற்றி, ம.பொ.சி எழுதிய ‘கப்பலோட்டிய தமிழன்’ என்னும் நூல் பெருமை வாய்ந்தது. இதன் காரணமாக பின்னாளில் வ.உ.சி, ‘கப்பலோட்டிய தமிழன்’ என்றே தமிழ்நாடு முழுவதும் போற்றப்பட்டார். பி. ஆர். பந்துலு ம.பொ.சியின் நூலை தழுவி கப்பலோட்டிய தமிழன் என்னும் திரைப்படத்தை இயக்கினார். சிதம்பரனார் பற்றி ம.பொ.சி. எழுதிய நூல்கள்:
கப்பலோட்டிய தமிழன் [1944]
தளபதி சிதம்பரனார் [1950]
கப்பலோட்டிய சிதம்பரனார் (விரிவான பதிப்பு) [1972]
கப்பலோட்டிய சிதம்பரனார் நிறுவிய கப்பல் நிறுவனம்
வெள்ளையரால் எவ்வாறு சிதைக்கப்பட்டது என்று முன்பு பார்த்தோம் .அவர் அந்த நிறுவனந்த்தை நிறுவ பட்ட
பா ட்டையும் கொஞ்சம் காணலாம் .

ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு வணிகம் செய்யவே வந்தனர். ஆனால் இந்திய ஆட்சியைக் கைப்பற்றி இந்திய நாட்டின் செல்வங்களை கொள்ளையடித்துக் கொண்டிருந்தனர். வ.உ.சி.யை இது கடுமையாகப் பாதித்தது. அவர் தனது எதிர்ப்பைத் தெரிவிக்க ஆங்கிலேயர்களின் வணிகத்தையே முதலில் எதிர்த்தார். “பிரிட்டிஷ் இந்திய ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி”, இந்தியா, இலங்கை இடையே கப்பல்களை இயக்கிக் கொண்டு இருந்தது. அது ஆங்கிலேயர்களின் வணிகத்துக்கே முக்கியத்துவம் கொடுத்தது. ஆதலால் வ.உ.சி. இந்தியர்களுக்காக ஒரு கப்பல் நிறுவனம் துவங்க தீர்மானித்தார்
வ.உ.சி.,1906-ஆம் ஆண்டு அக்டோபர் 16-ஆம் நாள் “சுதேசி நாவாய்ச் சங்கம்” என்ற கப்பல் நிறுவனத்தைப் பதிவு செய்தார். (அதன் தலைவர் மதுரை தமிழ்ச்சங்கத் தலைவர், வள்ளல் பாண்டித்துரைதேவர்; சட்ட ஆலோசகர் சேலம் சி.விஜயராகவாச்சாரியார்). நிறுவனத்தின் மூலதனம் ரூ.10,00,000. ரூ.25 மதிப்புள்ள 40,000 பங்குகள் கொண்டது. ஆசியர்கள் அனைவரும் இதில் பங்குதாரர்கள் ஆகலாம். 4 வக்கீல்களும் 13 வங்கியரும் இருந்தனர். கப்பல் நிறுவனத்தைப் பதிவு செய்தவுடன் புதிய பங்குதாரர்களைச் சேர்க்கும் முயற்சியில் வ.உ.சி. இறங்கினார். ஆனால் நிறுவனத்திற்குச் சொந்தமாகக் கப்பல் இல்லை. “ஷாலேன் ஸ்டீமர்ஸ் கம்பெனி”யிடமிருந்து கப்பல்களை வாடகைக்கு எடுக்க வேண்டியதாக இருந்தது. “பிரிட்டிஷ் இந்திய ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி” இந்தப் புதிய போட்டியை விரும்பாததால் அது “ஷாலேன் ஸ்டீமர்ஸ் கம்பெனி” யை அச்சுறுத்தியது. அதனால் இது கப்பல்களை வாடகைக்குக் கொடுக்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்தது. இந்திய கப்பல் நிறுவனத்திற்கென்று சொந்தமாகக் கப்பல் இல்லாததால் இந்திய வணிகர்கள் திகைத்துப் போயினர். ஆனால் வ.உ.சி. அஞ்சவில்லை. உடனடியாக கொழும்பு சென்று ஒரு கப்பல் வாடகைக்கு எடுத்து வந்து கப்பல் போக்குவரத்து தொடர்ந்து நடக்கும்படி செய்தார்.

ஆனால் சொந்த கப்பல்கள் இல்லாமல் கப்பல் நிறுவனத்தைத் தொடர்ந்து நடத்த இயலாது என்பதை அறிந்து கொண்டார். அதனால் சொந்த கப்பல்கள் வாங்க முடிவு செய்தார். தூத்துக்குடி வணிகர்கள் உதவி செய்தனர். ஆனால் அது போதுமானதாக இல்லை. அதனால் புதிய பங்குதாரர்களைச் சேர்க்க மும்பை, கொல்கத்தா ஆகிய இடங்களுக்குச் சென்றார். அங்குள்ள வணிகர்கள் அவரது பேச்சாற்றலால் கவரப்பட்டு கப்பல் நிறுவனத்தின் பங்குதாரர்கள் ஆனார்கள். வ.உ.சி. வட இந்தியாவிற்குக் கிளம்பும் போது “திரும்பினால் கப்பலுடன் திரும்புவேன், இல்லையெனில் கடலில் விழுந்து மாண்டு போவேன்”, என்று சூளுரைத்துச் சென்றார். வ.உ.சி. தனது சபதத்தை நிறைவேற்றினார். “எஸ்.எஸ். காலியோ” என்ற கப்பலுடன் திரும்பினார்.

இந்தியர்கள் அனைவரும் பெருமகிழ்ச்சி அடைந்தனர். கப்பல் 42 முதல் வகுப்பு இருக்கைகள், 24 இரண்டாம் வகுப்பு இருக்கைகள் மற்றும் 1300 சாதாரண இருக்கைகள் இவற்றைக் கொண்டிருந்தது. மேலும் 4000 சாக்கு மூட்டைகளை ஏற்றிச் செல்ல இயலும். திரு. எஸ் வேதமூர்த்தி பிரான்ஸ் தேசம் சென்று “எஸ். எஸ். லாவோ” என்ற கப்பலை வாங்கி வந்தார். நீராவி இயந்திரம் பொருத்தப்பட்ட இரு படகுகளும் வாங்கினர்.

இந்திய செய்தித் தாள்கள் அனைத்தும் இது குறித்து கட்டுரைகள் வெளியிட்டு வ.உ.சி. அவர்களைப் பாராட்டின. கப்பல் நிறுவனம் மெதுவாக வளர்ந்தது. மக்கள் சுதேசிக் கப்பலிலேயே பயணம் செய்தனர். வணிகர்கள் தங்கள் சரக்குகளை சுதேசிக் கப்பலிலேயே அனுப்பினர். பிரிட்டிஷ் கப்பல் நிறுவனம் இந்தப் போட்டியைச் சமாளிக்க முடியாமல் கட்டணத்தைக் குறைக்க முடிவு செய்தது. கடைசியில் இலவசமாக அழைத்துச் செல்வதாகக் கூறியது. பிரிட்டிஷ் கப்பல் நிறுவனத்தின் தந்திரம் குறித்து வ.உ.சி. மக்களிடையே விளக்கினார். சுதேசி கப்பல் நிறுவனத்தை அழித்த பிறகு அவர்கள் தங்கள் கட்டணத்தை விருப்பம் போல் ஏற்றிவிடுவார்கள். அப்போது இந்தியர்களால் ஒன்றும் செய்ய இயலாமல் போகும். அதனால் இந்தியர்கள் இலவசப் பயணத்தை மறுத்துவிட்டனர். உடனே வ.உ.சி.க்கு கையூட்டு கொடுக்க முயற்சி செய்தனர். சுதேசி கப்பல் நிறுவனத்தை விட்டு விலகினால் ரூ.1,00,000 கொடுப்பதாகக் கூறினர். வ.உ.சி. மறுத்துவிட்டார்.

ஆங்கில அரசு பிரிட்டிஷ் கப்பல் நிறுவனத்திற்கு பலவிதங்களிலும் உதவி செய்தது. அது ஆங்கிலேயர்களின் கப்பலில் மட்டுமே பயணம் செய்ய வேண்டும் என்று இந்திய அரசு அதிகாரிகளுக்கு இரகசிய கடிதம் அனுப்பியது. சுங்க அதிகாரிகள், மருத்துவர்கள், அரசு அலுவலர்கள் என பலரும் பல விதமான தொல்லைகள் ஏற்படுத்தினர். இந்திய கப்பல் ஆங்கிலேயர்களின் கப்பலுடன் மோத வந்தது என்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. வ.உ.சி. அது பொய்க் குற்றச்சாட்டு என்று நிரூபித்து இந்திய கப்பல் செல்ல அனுமதி பெற்றார். ஆனால் சுதேசி கப்பல் நிறுவனத்தின் வளர்ச்சியை அவர்களால் தடுக்க இயலவில்லை.எனவே வணிக ரீதியாக எதிர்கொள்ள இயலாமல் அவரை அரசியல் காரணங்களால் கடும் சிறையில் இட்டு சித்திரவதை செய்த்தனர் .
இத்தனையும் இப்பொதுக்கூறக்காரணம் அவர் பாளயங்க்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டது மார்ச் 26
26.03.1908ல் பாளையங்கோட்டை சிறையில் அடைத்தது.

இன்னமும் சில செய்திகளைக்கூறி அடுத்த பகுதியில் நிச்சயம் நிறைவுறும்
#அண்ணாமலைசுகுமாரன்

Comment here