பொது

ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா ஸ்பெஷல் :

ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து பெறப்படும் பசும்பால் மூலமாக மட்டுமே இதனை தயாரிக்கின்றனர். இயற்கையாகவே இங்கு கறக்கப் படும் பால் இனிப்புச் சுவையுடன் இருப்பதால், பால்கோவா செய்வதற்கு சிறிதளவு சர்க்கரையே தேவைப்படும் எனவும்,  இந்த பால்கோவா 10 – 15 நாள் வரை  கெட்டு போகாது இருக்கும் எனவும் உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

10 லிட்டர் பாலில் இருந்து 3.250 முதல் 3.500 கிலோ கிராம் வரை பால்கோவா தயாரிக்க படுகிறது. இதற்கு 1.25 கிலோ கிராம் சர்க்கரை தேவைப்படும் என கூறினார்கள். இதை தயாரிக்க பிரத்யேகியமாக  புளிய மரத்தின் விறகை பயன் படுத்துகிறார்கள். இதன் மிதமான வெப்பம் பால்கோவா தயாரிப்பதற்கு எதுவாக இருப்பதாக கூறப்படுகிறது.

தினமும் 1000 லிட்டர் பால் வரை கூட்டுறவு சங்கங்கள், விற்பனையாளர்கள் மூலம் பெறப்பட்டு பால்கோவா தயாரிக்கப் படுகிறது. திருவிழாக்கள் மற்றும் பண்டிகை நாட்களில் 2000 முதல் 3000 லிட்டர் பால் தேவைப்படும் என்கிறார்கள். 3000 அதிகமான மக்கள் இந்த தொழில் ஈடுபட்டு வருகின்றனர். சுத்தமான ஒரு கிலோ பால்கோவாவின் விலை ரூ 260 வரை விற்கப்படும் என அத்தொழில் ஈடுபட்டவர்கள் கூறினார்கள்.

தமிழகத்திற்கு  இதுவரை 31 பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. தற்போது ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவிற்கு புவிசார் குறியீடு கிடைத்ததன் மூலம் தமிழகத்தின் புவிசார் குறியீடு எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் சர்வதேச அளவில் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவிற்கான சந்தை விரிவடைந்துள்ளது எனலாம்.

Comment here