ஆன்மிகம்

ஸ்ரீ படே சாஹிப் சுவாமிகளின் ஜீவ சமாதி கண்டமங்கலம் ….

5 (100%) 1 vote
மகான் படே சாஹிப் சுவாமிகள் ஒரு இஸ்லாமிய
ஆத்ம ஞானி.புதுவை, சின்ன பாபு சமுத்திரம் என்ற
ஊருக்கு அருகில் வாழ்ந்து சமாதியடைந்ததாக வரலாறு
கூறுகிறது.
அவரது பூர்வீகம் என்ன- தாய் தந்தை யார், அவர்
எங்கிருந்து, எப்படி புதுவை வந்தார் என்ற விபரம்
ஏதும் இல்லை.உண்மைப் பெயர் என்ன என்பதும்
தெரியவில்லை.மிகப் பெரிய ஞானி என்பதை-உருதுவில்
மஹான் படே சாஹிப் என்று மக்கள் இவரை
அழைக்கிறார்கள்.
 
இவர் யாரிடமும் பேச மாட்டார்.மௌனமாகவே இருப்பார்.
சதா இறை சிந்தனையில் மௌனமாக இருப்பார்.
புதுவையிலுள்ள திருக்கனூர் என்னும் சிற்றூரில் சில
காலம் தங்கியிருந்துள்ளார். திருக்கனூருக்கும்,
சின்ன பாபு சமுத்திரத்திற்கும் இடையிடையே
சென்று வருவதுண்டு.
 
இறைவனின் கருணையால்,சித்துக்கள் கைவரப்பெற்றார்.
ஆற்றல் பெருகியது.
மக்கள் இவரது ஆற்றலை உணர்ந்து இவரை தஞ்சமடைந்தார்கள்.
பாமர மக்கள் மகானுக்கு மரியாதை செலுத்தினார்கள்.
தாங்க முடியாத நோய் உள்ளவர்கள் தங்கள் குறைகளை
மகானிடம் கூறுவார்கள்.சற்று நேரம் கழித்து தலையசைப்பார்.
நோய் குணமாகிவிடும். அங்குள்ள ஒரு மரத்தைச் சுற்றும்படி
ஜாடை காட்டுவார்.சுற்றுவார்கள். நோய் குணமாகும்.
 
விளையாடிக் கொண்டிருக்கும் சிறு குழந்தைகளிடம் செல்வார்.
ஒவ்வொரு குழந்தையின் கையிலும் ஒரு பிடி மண்ணை
அள்ளிக் கொடுத்துக் கையை மூடச் சொல்வார்.
பின் தாம் அங்குள்ள குழியில் உட்கார்ந்துக் கொண்டு
மேலுள்ள மண்ணைப் போட்டு தம்மை மூடச் சொல்வார்.
குழந்தைகளும் அவ்வாறே செய்து விட்டு கையை திறந்து
பார்க்க -கையிலுள்ள மண் சர்க்கரையாக மாறியிருக்கும்.
இந்த அதிசயத்தை-தங்கள் பெற்றோரிடம் சொல்வார்கள்.
ஊர் மக்கள், திரண்டு வந்து மண்ணால் மூடப்பட்ட மகானை
-காப்பாற்ற மண்ணை எடுத்துவிட்டு பார்ப்பார்கள்.மகான்
இருக்க மாட்டார். ஒரு சிலர் மகானை வேறு இடத்தில்
பார்த்ததாக சொல்வார்கள்.அங்கு சென்று தேடினால் அங்கும்
இருக்க மாட்டார். ஊர்மக்கள்,வருத்தமுற்று இருக்கையில்
கூட்டத்தினின்று திடீரென்று வெளிவந்து காட்சி கொடுப்பார்.
 
 
ஒரு நாள் இறைவனிடமிருந்து தனது ஆத்ம சாதனை
முடிந்த குறிப்பு கிடைத்தது.இறைவனோடு கலப்பதற்காக
தன்னை தயார்படுத்திக் கொண்டார்.
குழந்தைகளை குழி தோண்டச் சொன்னார்.குழந்தைகள் கையில்
மண்ணை அள்ளிக் கொடுத்துவிட்டு கையை மூடிக் கொள்ளச்
சொல்லிக் குழியில் இறங்கினார். தன் மேல் மண்ணைப் போட்டு
மூடச் சொல்லிவிட்டு கையை திறந்துப் பார்க்கச் சொன்னார்.
குழந்தைகள் கையை திறந்துப் பார்த்தனர்.கையில் மிட்டாய்
இருந்தது.
 
இம்முறை,உண்மையிலேயே மகான் சமாதியடைந்ததை
மக்கள் உணர்ந்து கொண்டனர்.
 
சில நாள் கழித்து பம்பாய் சுவாமி என்னும் மகானின் சீடர்
மகானின் சமாதி மேல் கட்டிடம் எழுப்பி-மக்கள் வந்து
வழிபட வசதி ஏற்படுத்திக் கொடுத்தார்.
 
மகானின் மகத்துவத்தை உணர்ந்த மக்கள் தினமும் சமாதியில்
வழிபாடு நடத்துகின்றனர்.பிரதி செவ்வாய் மற்றும்
ஞாயிற்றுக்கிழமைகளில் சமாதிக்கு சிறப்பு பூஜை செய்யப்படுகிறது.
 
மகான் படே சாஹிப்- ஒரு இஸ்லாமிய ஞானியானாலும்,
அனைத்து மத மக்களும் வழிபாடு செய்வது-ஞானபூமியாகிய

 

நமது புதுவையின் பெருமையாகும்.
 
சமாதி முன் அணையா விளக்கு எப்போதும் ஒளிவிட்டு எரிந்துக்
கொண்டிருக்கிறது. காற்றிலும், மழையிலும் கூட அணைவதே இல்லை.
ஒரு சமயம் விளக்கில் எண்ணெய் தீர்ந்து விட்டது.விளக்கு
அணையப் போகும் சமயம்,அப்போது அங்கு படுத்திருந்த
ஒருவரின் கனவில் சொல்லி எண்ணெய் ஊற்றச் செய்தார்.
 
மக்கள் தங்கள் குறைகளை சமாதிமுன் நின்று மனம் விட்டுசொல்லி
அழுகின்றனர்.அவர்களின் பெருந்துயர் தீர்கிறது.
சிலர்,அத்திருக்கோயிலிலேயே இரவு தங்கியிருந்து வேண்டிக் கொள்கின்றனர்.சிலர் நேர்த்திக் கடனாக பிஸ்கட்டும்,

அன்னதானமும் வழங்குகின்றனர்.
 
 
ஆண்டுதோறும் மகான் படே சாஹிபிற்கு குருபூஜை மிகச்
சிறப்பாக செய்யப்படுகின்றது.
குருபூஜையன்று ஒரு பெரிய அண்டாவை வைத்து விடுகின்றனர்.
மக்கள், தங்கள் வசதிகேற்ப, தங்கள் வீட்டிலேயே சாதம் கிண்டி
அந்த அண்டாவில் கொண்டு வந்து கொட்டி விடுகின்றனர்.
அச்சாதத்தை எல்லோருக்கும் அன்னதானமாக கோவிலார்
கொடுக்கின்றனர்.
 
மகான் படேசாகிப் சின்ன பாபுசமுத்திரத்தில் வெட்ட வெளியில்
கி.பி.1868 பிப்ரவரி மாதம் 12-ம் தேதி செவ்வாய்க்கிழமை
சமாதியடைந்தார்.
 
 
 
 
உடலாய் உயிராய் உலகமதாகிக்
கடலாய் கார்முகில் நீர்பொழிவானாய்
இடையாய் உவப்பிலி எங்கும்தான் ஆகி
அடையார் பெருவழி அண்ணல் நின்றானே
-திருமந்திரம்

Comment here