புதுமுகங்கள் நடிக்கும் ’10 செகண்ட் முத்தம்’ திரைப்படம்..!

Rate this post

பிரபல இயக்குநர் வின்சென்ட் செல்வா இயக்கியிருக்கும் புதிய திரைப்படம் ‘பத்து செகண்ட் முத்தம்’.

படத்தில் ஒரு முக்கியமான கதாபத்திரத்தில் தேசிய விருது பெற்ற நடிகர் தம்பி ராமையா நடித்திருக்கிறார். படத்தில் பெரும்பாலான நடிகர், நடிகையர் அனைவருமே புதுமுகங்கள்தானாம்.

புதுமுகங்கள் கீதா மற்றும் சரிஷ் சேர்ந்து நடிக்க, மிஸ்டர் இந்தியா ஸ்ரீனிவாசன் வில்லனாக நடிக்க, பவர் ஸ்டார் சீனிவாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கதை, வசனத்தை ரூபன் எழுத, சான் லோகேஷ் எடிட்டிங்கில், வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்ய.. ல‌ஷ்மி டாக்கீஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.

படத்தின் தலைப்பு தமிழ் சினிமாவில் அனைவரையும் கவர்ந்திழுத்துள்ளது. புத்தகத்தின் அட்டையை மட்டும் வைத்து, அதை மதிப்பிடக் கூடாது. அதுபோலத்தான் படத்தின் தலைப்பை வைத்தும் மதிப்பிடக் கூடாது. அதற்குள் பல்வேறு கோணங்கள் இருக்கும்.

‘பத்து செகண்ட் முத்தம்’ என்ற தலைப்பு நம்மை பலவாறு யோசிக்க வைத்து, ஒரு முன்முடிவுக்கு கொண்டு வரும். எழுத்தாளர் சுஜாதா எழுதிய நாவல்களை தீவிரமாக படித்து வந்த ரசிகர்கள் இந்த தலைப்பை மிக நெருக்கமாக உணர்வார்கள்.

இந்தப் படம் பற்றி இயக்குநர் வின்செண்ட் செல்வா பேசும்போது, “சுஜாதா சாரின் ‘பத்து செகண்ட் முத்தம்’ நாவலும் ஒரு குறிப்பிட்ட நேரத்துக்குள் ஒரு சவாலான, மர்மங்களை கண்டுபிடிப்பதை சொல்வதுதான். அந்த தலைப்பு என்னை ஈர்த்தது.

என் படத்தின் நாயகியும் குறிப்பிட்ட நேரத்துக்குள் ஒரு சில மர்மங்களை கண்டுபிடிப்பார், அதனால் இந்த தலைப்பை தேர்ந்தெடுத்தேன். இதை தவிர வேறு எந்த ஒற்றுமையும் கிடையாது. இது என்னுடைய புது ஸ்கிரிப்ட்.

இந்தக் கதையை எழுதி முடித்தவுடனேயே புதுமுகங்கள்தான் இதற்குப் பொருத்தமாக இருப்பார்கள் என்று முடிவு செய்தேன். அதனால் புதுமுகங்களையே நடிக்க வைத்திருக்கிறேன்.

ஒரு பெண் சாதிக்க நினைத்த விஷயம் எப்படி வன்முறைக்கு வழி வகுக்கிறது என்ற விஷயத்தை பற்றி இத்திரைப்படம் பேசுகிறது. படம் அதிவேகமாக இருக்கும், இதற்கேற்றாற்போல்தான் படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. படத்தில் பாடல்கள் இல்லை. பின்னணி இசை மட்டுமே உள்ளது.

வாகமான், ஹைதராபாத், கொடைக்கானலில் ஆகிய பகுதிகளில் இந்தப் படத்தின் ஷூட்டிங் நடைபெற்றுள்ளது..” என்றார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*