/ இந்தியா / ஆந்திர படகு விபத்து – 18 பேர் உயிரிழப்பு!

ஆந்திர படகு விபத்து – 18 பேர் உயிரிழப்பு!

tamilmalar on 13/11/2017 - 9:36 AM in இந்தியா
5 (100%) 1 vote

ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தின் விஜயவாடா அருகிலுள்ள பவானி தீவில் இருந்து பவித்ர சங்கமம் என்ற இடத்துக்குப் படகு மூலம் சிலர் நேற்று (நவம்பர் 12) சுற்றுலா சென்றனர். அந்தப் படகில் சுமார் 38க்கு மேற்பட்டோர் பயணம் செய்தனர். அவர்கள் சென்ற படகு அதிக பாரம் தாங்காமல் ஆற்றில் கவிழ்ந்தது. இதில், சுற்றுலாப் பயணிகள் அனைவரும் நீரில் தத்தளித்தனர். இதில், 15 பேரை உள்ளூர் மக்கள் மீட்டனர். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் நீரில் தத்தளித்துக் கொண்டிருந்தவர்களை உடனடியாக மீட்கும் பணியில் ஈடுபட்டனர். நீச்சல் தெரியாத பலர் இந்தச் சம்பவத்தில் நீரில் மூழ்கி இறந்தனர்.

இந்த விபத்தில் சிக்கிய 14 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக ஆந்திர மாநில டி.ஜி.பி. சாம்பசிவ ராவ் தெரிவித்தார். நீரில் மூழ்கியவர்களைத் தேடும் பணியிலும், அந்தப் பகுதியில் சிக்கியவர்களை மீட்கும் பணியிலும் பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

இதுதொடர்பாக பேசிய ஆந்திர மாநில உள்துறை அமைச்சர் என்.சின்னப்பராஜு, “கிருஷ்ணா நதிக்கரைக்கு அருகில் இந்த விபத்து நடந்துள்ளது. படகு கவிழ்வதை கரையில் இருந்த மக்கள் பார்த்து அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர். அந்தப் படகில் எத்தனைப் பேர் இருந்தார்கள் என்பது குறித்து தெரியவரவில்லை. ஆனால், மீட்கப்பட்டவர்கள் கூற்றுப்படி படகில் 38 பேர் பயணித்ததாகத் தெரியவருகிறது. அவர்கள் அனைவரும் ஓங்கோல் வாக்கர்ஸ் கிளப் எனும் அமைப்பின் உறுப்பினர்கள். அந்த அமைப்பைச் சேர்ந்த 8 குடும்பத்தினர் ஒன்றாக அந்தப் படகை வாடகைக்கு எடுத்துள்ளனர். இதில், 20 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் பவானி தீவிலிருந்து விஜயவாடா அருகிலுள்ள பவித்ர சங்கமத்துக்குச் சென்றுள்ளபோது, இந்த விபத்து நடந்துள்ளது. விபத்தின்போது பயணிகள் யாரும் உயிர் காக்கும் கவசம் அணியவில்லை என்று தெரியவந்துள்ளது. விதிமுறைகளை மீறி உயிர்காக்கும் கவசம் இல்லாமல் பயணிகளை படகில் ஏற்றப்பட்டுள்ளனர்” என்றார்.

மேலும், சிலர் நீரில் மூழ்கியிருக்கலாம் என்று கருதப்படுவதால் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. படகில் அதிகமான சுற்றுலா பயணிகளை ஏற்றியதே இந்த விபத்துக்குக் காரணம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

0 POST COMMENT
Rate this article
5 (100%) 1 vote

Send Us A Message Here

Your email address will not be published. Required fields are marked *