இயல்தமிழ்

ஆண்டாள்அருளிய திருப்பாவை

1 (20%) 1 vote

 


ஶ்ரீ கோதை என்றும் சூடிக்கொடுத்த நாச்சியார் என்றும் போற்றப்படும் “ஆண்டாள்”அருளிய திருப்பாவைப் பற்றி காண்போம். இதன் அர்த்தங்கள் பலவாறு காணக்கிடைக்கலாம்.வைணவ பெரியோர்கள் இதைப்பற்றி அற்புதமாக பேசி வருகின்றனர்.
அவ்வாறு கேட்டதையும் படித்ததையும் கொண்டு சில வார்த்தைகள் பகிர முனைந்துள்ளேன் ,ஆண்டாளின் திருவடிகளை ப் பற்றிய படி.
ஆண்டாள் 30 பாசுரங்களாக திருப்பாவையை அமைக்கிறாள்.அதில் முதல் 5 பாசுரங்கள் , பாவை நோன்பிற்கான காலநேரம் பற்றியும் , யாரைக்குறித்து நோற்கும் நோன்பு என்பதைப்பற்றியும் ,அதனுடைய பலனாக நமக்கு கிடைக்க இருப்பதைப் பற்றியும் குறிப்பிடுகிறாள்.
மார்கழி த்திங்கள்..முதல் பாடல்..
மாதங்களிலே நான் மார்கழி ஆகிறேன் என்ற கண்ணனின் திருவாக்கின்படி , மார்கழி மாதத்தில் பூர்ணசந்திரன் பிரகாசிக்கும் அதிகாலை நன்னாளில் , அவனையடைய நாம் நோற்க விரும்பும் நோன்பிற்காக நீராட வாருங்கள் என்கிறாள்.பெரிய விஷயத்தையடைய பெரிதான முயற்சி தேவையில்லை , ஆசை மட்டுமே போதுமென்கிறாள்.அவன் , காண வேண்டும் என்று , அழகிய ஆபரணங்கள் அணிந்தவர்களே! பசுச்செல்வமும் , பால் செல்வமும் வெள்ளமிடும் இவ்வாயர்பாடியில் , அவனையே பெற்றுள்ளதனால் , செல்வச்சிறுமீர்காள் என்கிறாள்.
புல்பூண்டிற்கும் தீங்கு செய்யாத நந்தகோபர் , கண்ணனை இமைக்காப்பது போல , சிறு எறும்பு நெருங்கினாலும் தன் கூரான அம்பினால் அதை நீக்குகிறார் என்கிறாள்.அவனை பார்ப்பதாலேயே விரிந்த அழகிய கண்களைப் பெற்ற யசோதை யின் இளஞ்சிங்கம் போன்ற , கார்மேகம் போன்று நம்மிடம் எதையும் எதிர்பார்காமல் வர்ஷிக்கும் குணமுடைய கண்ணன் , ஒளி பொருந்திய சூரியன் போன்று மின்னும் அழகிய முகத்தனனாய் , நாராயணான அவனே , மழை வேண்டி நாம் நோற்க போகும் இந்நோபை இவ்வுலகத்தவர் நம்மை பார்த்து வியக்கும் படி நமக்கு செய்து கொடுப்பான் பாருங்கள் பெண்களே ! என்கிறாள்.

Comment here