விளையாட்டு

38-வது பிறந்த நாள்:டோனிக்கு ஐ.சி.சி., இந்திய கிரிக்கெட் வாரியம் வாழ்த்து

லீட்ஸ்,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி தற்போது இங்கிலாந்தில் நடைபெறும் உலக கோப்பை போட்டியில் விளையாடி வருகிறார். வெற்றிகரமான கேப்டன் என்ற பெயருக்கு சொந்தக்காரரான டோனிக்கு நேற்று 38-வது வயது பிறந்தது. அவர் தனது பிறந்த நாளை மனைவி சாக்‌ஷி, மகள் ஜிவா ஆகியோருடன் எளிமையாக கொண்டாடினார். டோனிக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளது. அதில், ‘ஒரு மனிதன், 100 கோடி உணர்வுகள், ஒரு ஆயுட்கால நினைவுகள். டோனிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியம் தனது டுவிட்டர் பக்கத்தில் 4 உலக கோப்பை போட்டியில் டோனி பங்கேற்ற படத்தை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்து இருக்கிறது. அதில், ‘4 உலக கோப்பை போட்டிகள், 4 மாறுபட்ட தோற்றங்கள் இதில் எதை அதிகம் விரும்புகிறீர்கள். அதனை தேர்ந்தெடுங்கள். டோனிக்கு பிறந்த நாள் வாழ்த்து என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டோனி இந்திய அணியினருடனும் தனது பிறந்த நாளை கொண்டாடினார். டோனிக்கு, இந்திய முன்னாள் வீரர்கள் தெண்டுல்கர், ஷேவாக், லட்சுமண், கேப்டன் விராட்கோலி, துணை கேப்டன் ரோகித் சர்மா உள்பட பலரும் டுவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்கள்.

Comment here