7 பேரை விடுதலை செய்ய முதல்வர் பழனிச்சாமி, அமைச்சர் சண்முகம் தீவிர முயற்சி

Rate this post

ராஜீவ் கொலை வழக்கில் சிக்கி சுமார் 27 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வரும் 7 பேரை ஆளுநர் விடுதலை செய்ய தமிழக முதல்வர் பழனிச்சாமி, அமைச்சர் சண்முகம் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முருகன், சாந்தன், நளினி, பேரறிவாளன், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேர் 27 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் உள்ளனர்.

இவர்களை விடுதலைக் குறித்த மனு மீதான விசாரணையில் அண்மையில் தீர்ப்பளித்த ரஞ்சன் கோகாய், நவீன் சின்கா, கே.என்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு 7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக முடிவை எடுத்து, ஆளுநரின் முடிவுக்கு அனுப்பி வைக்கலாம் என்று அறிவுறுத்தினார்கள். அத்துடன், சிறையில் இருக்கும் 7 பேரையும் விடுதலை செய்வதற்கு எதிராக மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மனுவை ஏற்றுக் கொள்வதற்கு முகாந்திரம் ஏதும் இல்லை என்று கூறி அந்த மனு மீதான விசாரணையை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

இந்த நிலையில், ராஜீவ்காந்தி கொலைக் குற்றவாளிகள் 7 பேரை விடுதலைக் குறித்து முடிவு எடுத்து ஆளுநருக்குப் பரிந்துரை செய்வது தொடர்பாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவையின் அவசர கூட்டம் தலைமைச் செயலகத்தில் உடனடியாக கூட்டப்பட்டது. முன்னதாக, சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் செய்தியாளர்களிடையே பேசுகையில், ராஜீவ் கொலை வழக்கில் சிக்கியவர்களை உடனடியாக விடுதலை செய்ய முதல்வர் பழனிச்சாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் கூட்டி, உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அதன்படி, தமிழக முதல்வர் பழனிச்சாமி தலைமையில் ஏறக்குறைய 2 மணிநேரம் வரை அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தில் 4 முக்கியத் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. அதில்,

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைவழக்கில் தண்டிக்கப்பட்டு ஆயுள் தண்டனைக் கைதிகளாக சிறையில் இருக்கும் முருகன், சாந்தன், நளினி, பேரறிவாளன், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேரையும் விடுவித்து சட்டப்பிரிவு 161 பிரிவின் கீழ் ஆளுநருக்குப் பரிந்துரை செய்ய வேண்டும் என்ற முக்கிய முடிவு எடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, 7 பேருக்கும் தொடர்புடைய அனைத்து கோப்புகளையும் தயார் செய்யு பணி மும்முரமாக நடைபெற்றது. சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் வழிகாட்டுதல்படி, 7 பேருக்கும் தலா 4 கோப்புகள் வீதம் தயார் செய்து, தெளிவான விபரங்களுடன், 7 பேரை விடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரை அளித்தனர். இதனையடுத்து, ஆளுநர் அந்த தீர்மானத்துக்கு ஒப்புக்கொள்வதே இறுதியானது. அதன் பின்னரே, 7 பேர் விடுதலையாவது உறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி, ஆளுநரை தமிழக அரசின் தீர்மானம் கட்டுப்படுத்தாது. அவர் 7 பேரின் விடுதலை பரிந்துரையை ஏற்க மாட்டார் என்றார். அதனுடன், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், புதுவை முதல்வர் நாராயணசாமி ஆகியோர் 7 பேரை விடுதலை செய்ய எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால், ஆளுநர் 7 பேரை விடுதலை செய்வாரா ? என்ற சந்தேகம் பலரிடம் எழுந்தது. இருந்தாலும், முதல்வர் பழனிச்சாமி, சட்டத்துறை அமைச்சர் சண்முகநாதன் ஆகியோர் அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்று சட்டவிதி 161-ஐ பயன்படுத்தி 7 பேரையும் விடுதலை செய்ய ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது என்றனர். அத்துடன், சட்ட வல்லுநர்களின் கருத்துகளின்படி, ஆளுநர் தமிழக அரசின் தீர்மானத்தை நிராகரிக்க முடியாது. வேண்டுமானால், கால தாமதம் செய்யலாம் என்ற நிலை உள்ளது. அதனால், 7 பேர் விடுதலையாவது, வேண்டுமென்றே கால தாமதம் செய்யப்படலாமே தவிர, நிராகரிக்க முடியாது என்கின்றனர். இருந்தாலும், முதல்வர் பழனிச்சாமி, சட்டத்துறை அமைச்சர் சண்முகம் ஆகியோர் 7 பேரையும் உடனடியாக விடுதலை செய்யும் வகையில் முயற்சிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*