அரசியல்

71-வது பிறந்தநாள்: ஜெயலலிதா சிலைக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மரியாதை ‘கேக்’ வெட்டி கொண்டாட்டம்

Rate this post

சென்னை, மறைந்த முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் 71-வது பிறந்தநாள் விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நேற்று கொண்டாடப்பட்டது.

அங்கு அமைந்துள்ள ஜெயலலிதா உருவச்சிலைக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர். அதைத்தொடர்ந்து அ.தி.மு.க. அவைத் தலைவர் இ.மதுசூதனன், நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி உள்பட அமைச்சர்களும், கட்சி நிர்வாகிகளும் மரியாதை செலுத்தினார்கள்.

பின்னர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா சிறப்பு மலரை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். அதனை துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் அவைத்தலைவர் இ.மதுசூதனன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி அ.தி.மு.க. இலக்கிய அணி சார்பில் தயாரிக்கப்பட்ட கட்சியின் கொள்கை பிரசார பாடல்கள் அடங்கிய சி.டி.யையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். அதனை இலக்கிய அணி செயலாளர் பா.வளர்மதி பெற்றுக் கொண்டார்.

பின்னர் கட்சி அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இலவச மருத்துவ முகாம், அ.தி.மு.க. சாதனை விளக்க பிரசார வாகனம் மற்றும் 1,000 பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியையும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

ஜெயலலிதாவின் வயதை குறிக்கும் வகையில் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றத்தின் செயலாளர் தமிழ் மகன் உசேன் ஏற்பாட்டில் 71 கிலோ எடை கொண்ட ‘கேக்’ கொண்டு வரப்பட்டது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ‘கேக்’கை வெட்டி ஒருவருக்கொருவர் ஊட்டி கொண்டனர். பின்னர் அவர்கள் நிர்வாகிகளுக்கு ஊட்டி விட்டனர்.

ஜெயலலிதா தனது பிறந்தநாளின் போது பத்திரிகையாளர்களுக்கு முதலில் இனிப்புகள் வழங்குவார். அதே போன்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பத்திரிகையாளர்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி அ.தி.மு.க. அலுவலகம் நேற்று விழாகோலம் பூண்டிருந்தது.

Comment here