Sliderசினிமா

‘விண் ஸ்டார்’ விஜய் நடிக்கும் மக்கள் தொடர்பாளன் திரைப்படம்..!

தற்போது தமிழ்ச் சினிமாவில் மக்கள் தொடர்பாளராகப் பணியாற்றி வரும் பி.ஆர்.ஓ. விஜய், கிரீன் சேனல் மூவிஸ் சார்பில் தானே தயாரித்து, நாயகனாக நடித்து, இயக்கும் படம்தான் ‘மக்கள் தொடர்பாளன்’.

படத்தில் நாயகன் விண் ஸ்டார் விஜய்யுடன் ஹீரோயின்களாக சஹானா, மம்தா, ரித்திகா, ரேஸ்மி நால்வரும் நாயகிகளாக நடிக்கின்றனர். வில்லனாக அருமை நாயகம் நடிக்கிறார். இவர்களுடன் இயக்குநர் T.P.கஜேந்திரன், சீனியர் நடிகைகள் அம்பிகா, நளினி, வடிவுக்கரசி, மயில்சாமி மற்றும் பலர் நடிக்கின்றனர்.

இசை – ராஜ் கிஷோர் ராவ், ஒளிப்பதிவு – பகவதி பாலா & ராஜபாண்டி, படத் தொகுப்பு – மூர்த்தி & ஆனந்த், சண்டை பயிற்சி – ஜாக்குவார் தங்கம், பவர் பாண்டியன், நடனம் – ராபர்ட் சுரேஷ், ரமேஷ் ரெட்டி, பாடல்கள் – செல்வராஜ், மூக்கையா, நெல்லை பாரதி, ஜெயச்சந்திரன், பிரம்மா, கலை இயக்கம் – கதிர், மக்கள் தொடர்பு – கிளாமர் சத்யா.

இத்திரைப்படம் தொடர்பாக இயக்குநரும், தயாரிப்பாளருமான விஜய் பேசும்போது, “மக்கள் தொடர்பாளன் என்றால் பலருக்கு தெரியும்.. சிலருக்கு தெரியாது.. அரசியல், காவல் துறை, மாநகராட்சி, மருத்துவத் துறை, கல்வித் துறை, உள்ளாட்சித் துறை, விளையாட்டுத் துறை, தொழில் துறை, ஊடகத் துறை என பல்வேறு துறைகளிலும் PRO-க்கள் பணியாற்றி வருவது நாம் அறிந்ததே..

அதுபோல் கிராமத்தில் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்த நமது நாயகன் விவசாயம் பார்க்கப் பிடிக்காமல் சினிமா மீது உள்ள ஆசையினால் எப்படியாவது ஹீரோவாக நடித்தே ஆகவேண்டும் என்கிற ஆர்வத்தினால் சென்னைக்கு வர நினைக்கிறார்.

பஸ், டிரெயின் பிடித்துப் போவதைவிட லாரியில் போனால் எப்படியும் ஜெயித்துவிடலாம் என்கிற மங்குனி சென்டிமென்ட்டுடன் நம்ம ஹீரோ ஆவேசமாக கிளம்பி சென்னைக்கு வந்து சேர்கிறார்.

வந்த இடத்தில் பல சினிமா கம்பெனிகளில் வாய்ப்பு தேடி படிகளில் ஏறி இறங்குகிறார்.

இதன் இடையில் ஹீரோ இருக்குமிடத்தில் ஒரு கொலை நடந்துவிட.. போலீஸார் சந்தேகத்தின் பேரில் ஹீரோவை கைது செய்து விடுகின்றனர்.

அப்போது வக்கீலாக இருக்கும் நாயகி சஹானா தனது வாதத் திறமையினால் ஹீரோவை போலீஸ் ஸ்டேஷனில் இருந்து மீட்டு வருகிறார். அதனைத் தொடர்ந்து ஒரு பத்திரிகையாளரின் ஆலோசனைப்படி ஹீரோ மக்கள் தொடர்பாளர் ஆகிறார்.

இதற்குப் பிறகு இவர் சந்திக்கும் பிரச்சனைகளும், போதைப் பொருள் மற்றும் பெண்கள் கடத்தல் போன்ற குற்றங்களை செய்துவரும் டான் அருமை நாயகத்திற்கும் ஹீரோ சூர்யாவிற்கும் இடையே மோதல் ஏற்படுகிறது.

ஹீரோ தனது மக்கள் தொடர்பாளன் பணியைத் தொடர்ந்தாரா..? சினிமாவில் நடித்து தனது லட்சியத்தில் வெற்றி அடைந்தாரா..? அல்லது திரும்பவும் விவசாயம் செய்ய தனது சொந்த ஊருக்கே சென்றாரா..? என்பதுதான் படத்தின் கதை. படம் மிக விரைவில் திரைக்கு வரவிருக்கிறது…” என்றார்.

சமீபத்தில் இப்படத்தின் டீசர் சமூக வலைத் தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Comment here