அரசியல்இந்தியாதமிழகம்மாவட்டம்

துப்பாக்கிச் சூடு சம்பவம்-தேசிய மனித உரிமை ஆணையம் தூத்துக்குடியில் விசாரணை

Rate this post

தூத்துக்குடியில் கடந்த 22-ம் தேதி நடைபெற்ற ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின்போது கலவரம் வெடித்ததை அடுத்து போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காய மடைந்தனர்.

இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் நேரடியாக விசாரணை நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஏ.ராஜராஜன் கோரிக்கை விடுத்தார். இதனை தேசிய மனித உரிமை ஆணையம் ஏற்றுக்கொண்டது.

இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதற்காக தேசிய மனித உரிமை ஆணையத்தின் மூத்த காவல் கண்காணிப்பாளர் புபுல் தத்தா பிரசாத் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இக்குழுவில் டிஎஸ்பி ராஜ்பிர் சிங், ஆய்வாளர்கள் லால் பகர், நித் தின் குமார், அருண் தியாகி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இக்குழுவினர் நேற்று முன்தினம் மாலை தூத்துக்குடி வந்தனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ராம்பா ஆகியோருடன் அவர்கள் ஆலோசனை நடத்தினர். சம்பவம் தொடர்பான விவரங்களை கேட்டறிந்தனர். பின்னர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கலவரத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை அவர்கள் பார்வையிட்டனர்.

இதன் தொடர்ச்சியாக துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பத்தினரிடம் நேற்று காலை தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில், இக்குழுவினர் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.

முதலில் வழக்கறிஞர் ஏ.ராஜராஜனிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக புகார் மனுவில் இல்லாத விவரங்கள் ஏதே னும் இருந்தால் தெரிவிக்கும்படி குழுவினர் கேட்டுக் கொண்டனர்.

“பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் சாதாரண ஏழை மக்கள். அவர்களுக்கு ஆங்கிலம் தெரியாது. மொழி பெயர்ப்பாளர்கள் மூலமே விசாரணை நடத்தப்படுகிறது. அரசு சார்பில்தான் மொழி பெயர்ப்பாளர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர். அதில் தவறுகள் நடக்க வாய்ப்புள்ளது. எனவே, பாதிக்கப்பட்ட மக்கள் தமிழில் எழுத்துப்பூர்வமாக புகார் மனுக்கள் அளித்தால், அதனை ஆணையம் ஏற்றுக் கொள்ள வேண்டும்” என வழக்கறிஞர் ராஜராஜன் வலியுறுத்தினார். இதை அவர்கள் ஏற்றுக் கொண்டனர்.

இதைத் தொடர்ந்து, மூத்த எஸ்.பி. புபுல் தத்தா பிரசாத், டி.எஸ்.பி. ராஜ்பிர் சிங் ஆகியோர் துப்பாக்கிச் சூட் டில் பலியானவர்களின் குடும்பத்தினரை தனித்தனியாக அழைத்து, நடந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தினர். பெரும்பாலான குடும்பத்தினர் ஆணையம் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

இதேபோல் ஆய்வாளர்கள் லால் பகர், நித்தின் குமார், அருண் தியாகி ஆகியோர், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சென்று காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து விசாரணை நடத்தினர்.

வரும் ஜூன் 7-ம் தேதிவரை 5 நாட் கள் இக்குழுவினர் தூத்துக்குடியில் முகாமிட்டு பல்வேறு தரப்பினரிடம் தொடர்ந்து விசாரணை நடத்த உள்ளனர். இதன் முடிவில் விசாரணை அறிக்கையை அவர்கள் தேசிய மனித உரிமை ஆணையத்திடம் சமர்ப்பிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comment here