வரலாறு

ஆரிய மன்னன் யாழ்ப்பிரமதத்தன் – குறுந்தொகை

3.2/5 - (12 votes)

சங்க இலக்கியங்களில் ஒன்றான குறுந்தொகையில் ஆரிய மன்னன் யாழ்ப்பிரமதத்தன் என்பவர் இயற்றியதாக ஒரு பாடல் இருப்பதை பார்த்தது வியப்பாக இருந்தது அதிலும் இந்நூலே முதலில் தொகுக்கப்பட்ட தொகை நூலாகக் கருதப்படுகிறது.

குறுந்தொகை எட்டுத்தொகையில் உள்ள நூல்களுள் ஒன்று.. இந்நூல் குறைந்த அடிகள் கொண்ட பாடல்களின் தொகுப்பாக இருப்பதால் குறுந்தொகை எனப் பெயர் பெற்றது.இத்தொகுப்பில் அமைந்துள்ள 401 பாடல்களை 206 புலவர்கள் பாடியுள்ளனர் இதில் ஆரிய மன்னன் யாழ்ப்பிரமதத்தன் என்ற பெயரும் உள்ளது

இதில்இருந்து ஆரிய மன்னர்களில் சிலரும் தமிழ் நாடு நாடி வந்து தமிழ் கற்றிருக்கிறார்கள்என்பதும் அதில் அவர்கள் பாடல்இயற்றும் விதத்தில் சிறந்து இருந்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது

தமது மதத்தை பரப்ப தமிழ் நாட்டிற்கு வந்த மேலைநாட்டின் வீரமாமுனிவர். போப்பு போன்றார் இங்கே வந்ததும் தமிழ் கற்று அதில் பாடல் பாடும்நூல் இயற்றும் வல்லமை பெற்றதை நாம்
படித்திருக்கிறோம் .வீரமாமுனிவர் தமிழர் மருத்துவம் பற்றி நல்ல சில நூல்கள் செய்திருக்கிறார் .

இப்போது குறுந்தொகைபாடலைப்பார்க்கலாம்

அறிகரி பொய்த்தல் ஆன்றோர்க்கு இல்லை;
குறுகல் ஓம்புமின் சிறுகுடிச் செலவே,
இதற்குஇது மாண்டது என்னாஅ, அதற்பட்டு
ஆண்டொழிக் தன்றே மாண்டகை நெஞ்சம்;
மயிற்கண் அன்ன மாண்முடிப் பாவை
நுண்வலைப் பரதவர் மடமகள்
கண்வலைப் படுஉம் காண லானே.’ (குறுந். 184)

“அறிகரி பொய்த்தல் ஆன்றோர்க்கு இல்லை;
குறுகல் ஓம்புமின் சிறுகுடிச் செலவே”

தாம் அறிந்த ஒன்றை இல்லை என்று பொய்ச்சான்று கூறும் வழக்கம் அறிவறிந்த சான்றோரிடம் இல்லை.எனவே, நான் கூறுவதை உண்மை என்று உணர்ந்து, அவள் வாழும் சிற்றூருக்குச் செல்லுவதைத் தவிர்க.!

“மயிற்கண் அன்ன மாண்முடிப் பாவை
நுண்வலைப் பரதவர் மடமகள்
கண்வலைப் படுஉம் காண லானே”

மயிலின் தோகையில் உள்ள கண்ணைப் போன்ற அழகிய முடியையுடைய பாவை போன்றவளாகிய அந்த இளம்பெண் நுண்ணிய வலையையுடையப ரவரின் மகள். அவள் வாழ்கின்ற கடற்கரைச் சோலைக்குச் செல்லுபவர்கள் அவள் கண்ணால் வீசும் வலையில் சிக்கிக்கொள்வார்கள்.

இதற்குஇது மாண்டது என்னாஅ, அதற்பட்டு
ஆண்டொழிக் தன்றே மாண்டகை நெஞ்சம்;

எனது சிறந்த மாசற்ற மனமும், இதற்கு இது சிறப்புடையது என்று ஆராயாமல் அவள் கண்வலையில் சிக்கிகொண்டு, அவள் இருக்கும் கடற்கரைச் சோலையிலையே தங்கிவிட்டது.

என்று எத்தனை இயல்பாக தனது மனதின் போக்கையும் ,தமிழ்நாட்டு நெய்தல் நிலத்தின்
மாண்பையும் ஒரு ஆரிய மன்னன் ஆன யாழ்ப்பிரமதத்தன்விவரிப்பது வியப்பை அளிக்கிறது உவப்பையும் தருகிறது .

சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன் ஆரியமன்னர் ஒருவர் தமிழ் பாடல்ஒன்று இயற்றிருப்பதையும் ,நெய்தல் நிலமக்கள் அப்போது பரதவர் என்று அழைக்கப்பட்டிருப்பதையும் அறியமுடிகிறது .

சுவடிகளில் எழுதப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு வந்த இந்நூல் பிற்காலத்தில் அழிந்துபோகும் நிலை எய்தியபோது, பல சுவடிகளைச் சோதித்து முதன்முதலில் திருக்கண்ணபுரத்தைச் சேர்ந்த திருமாளிகைச் சௌரிப் பெருமாளரங்கன், தான் இயற்றிய புத்துரையுடன் 1915-ஆம் ஆண்டு பதிப்பித்து வெளியிட்டார். இதன் பின்னர் வேறு பலரும் வெளியிட்டுள்ளனர்

அண்ணாமலை சுகுமாரன்

Comment here