வரலாறு

உடன்கட்டை ஏறுதல்

Rate this post

தமிழ் நாட்டின் சில பகுதியில் தீப்பாஞ்சம்மன் என்ற பெயரில் சிறிய அம்மன் கோயில்களை பலரும் பார்த்தீருப்பீர்கள் .அவைகள் உடன்கட்டை எனும் கணவனுடன் உயிர்நீத்த மனைவிகளின் நினைவை ப் போற்றும் வகையில் அமைந்த வழிபடு இடங்களாகும்
உடன்கட்டைஎனும் சதி என்பது வடநாட்டு பழக்கம் என்ற கருத்தும். ராஜபுத்திரர்கள் இடையே மட்டும் உள்ள பழக்கம் என்றும் எண்ணினால் அது தவறு.ஆகும் .இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களால்போரின் தோல்விக்குப்பிறகு பாலியல் அடிமைகளாகப் பிடித்துச் செல்லப்படுவதைத் தவிர்ப்பதற்காகவே இந்திய ப் பெண்கள் நெருப்பில் குதித்துத் தங்களின் உயிரைப் போக்கிக் கொள்ளும் ஜவுஹார் என்னும் கொடிய வழக்கத்தை ஆரம்பித்தனர் அது உடன்கட்டை ஏறுதல் அல்ல இது அச்சத்தால் வந்த வழக்கம் .

ஆனால் தொலகாப்பியர் காலத்தகத்திற்கு முன்பே இந்தப்பழக்கம் தமிழர் பண்பாட்டில் இருப்பது தொலகாப்பிய குறிப்பில் இருந்து தெரிய வருகிறது
1. மூதானந்தம் – கணவன் இறந்த பொழுதே மனைவியும் உயிர் நீத்தல்.
ஒன்றுபட்ட அன்பினால் ஏற்பட்ட சாக்காடு.

2. பாலை நிலை – கணவன் சிதையில் ஏறி மனைவியும் எரியுண்டு இறத்தல்.
உடன்கட்டையேறும் வழக்கம்.
3. தாபத நிலை – உடன்கட்டையேறாது, பூவிழந்து, பொட்டிழந்து, மங்கல அணியிழந்து, அறுசுவை உணவு நீக்கி, வெறுந்தரையில் படுத்துறங்கிக் கைம்மை நோன்புற்று உடலை வருத்தி வாழ்வர்.

4. முதுபாலை – கணவனை இழந்து தனி நின்று புலம்பும் மனைவி.

5. தபுதார நிலை – மனைவியை இழந்து தனித்து நின்று துயருறும் கணவன்.
இவ்வாறு தொலகாப்பியத்தில் வகைப்படுத்தப்படுகிறது .

‘பல்சான் றீரே! ப ல்சான் றீரே!
செல்லெனச் சொல்லாது, ஒழிகென விலக்கும்,
பொல்லாச் சூழ்ச்சிப் பல்சான் றீரே !
அணில்வரிக் கொடுங்காய் வாள்போழ்ந் திட்ட
காழ்போல் நல்விளர் நறுநெய் தீண்டாது,

அடைஇடைக் கிடந்த கைபிழி பிண்டம்,
வெள்என் சாந்தொடு புளிப்பெய்து அட்ட
வேளை வெந்தை, வல்சி ஆகப்
புரற்பெய் பள்ளிப் பாயின்று வதியும்
உயவற் பெண்டிரேம் அல்லேம் மாதேர்

பெருங்காட்டுப் பண்ணிய கருங்கோட்டு ஈமம்
நுமக்கு அரிது ஆகுக தில்ல் எமக்குஎம்
பெருந்தோள் கணவன் மாய்ந்தென அரும்புஅற
வள்இதழ் அவிழ்ந்த தாமரை
நள்இரும் பொய்கையும், தீயும் ஓரற்றே!’ (பாடல். 246)

எத்தனை உருக்கமான செய்திகளை , அந்த நாளைய பெண்டிரின் நிலையை புறநானூறு தெரிவிக்கிறது பாருங்கள் !.

பெருங்கோப்பெண்டு என்பவர் பூதப்பாண்டியன் தேவியர் ஆவார். பூதப்பாண்டியன் போரில் மாண்டான். ‘எமக்குப் பொய்கையும் தீயும் ஒரு தன்மைத்து’ எனக் கூறிக் கணவன் இறப்புக்குப் பின் தீப்பாய்தற்கு முற்பட்டாள். ‘நின் கணவனுடன் நீயும் சென்று வருக! என்று கூறாது, என்னைத் தடுத்து நிறுத்தும் சான்றோர்களே! வெள்ளரி விதைபோன்ற நெய்யற்ற நீர்ச்சோறு, எள்ளுத்துவை, புளி கூட்டிச் சமைத்த வேளைஇலை ஆகியவற்றை உண்டு,
பாயின்றிப் பருக்கைக் கற்கள்மேல் படுத்து, கைம்மை நோற்கும் பெண்டிர் அல்லேம் யாம்! ஈமப் படுக்கை உங்களுக்கு அரிதாகத் தோன்றலாம் என் கணவன் இறந்து பட்டனன். ஆதலால், எமக்கு அத்தீயே தாமரைக் குளத்து நீர்போல இன்பம் தருவதாகும்’ என்று கூறிப் பாலை நிலையில் நின்று, சிதையிற் பாய்ந்து எரிந்து கருகி இறந்து விட்டாள் பெருங்கோப்பெண்டு.என்கிற அரசி .!

தமிழக வரலாற்றிலும்குறிப்பாக சோழர் வரலாற்றில் உடன்கட்டை ஏறிய அரசிகளைப்பற்றிய செப்பேடு குறிப்புகள் உண்டு .

மாமன்னர் ராஜராஜனைப் பெற்றவள் வானவன் மாதேவியாரும் உடன்கட்டை ஏறினாள். என்ற குறிப்பு உண்டு “..

.அரக்கர்களால் தேவர்களுக்கு ஏற்பட்ட துயரைத் துடைக்க சுந்தரச்சோழன் விண்ணுலகெய்தினான்… எனது கணவர் சுந்தரர் அழகு மிக்கவர். ஆதலின் தேவப்பெண்களெல்லாம் அவரை விரும்புவர். அதற்கு நான் உடன்படேன்… வீரராகிய தன் கணவர் இறந்துபட அப்ஸரப் பெண்களெல்லாம் அவரை அங்கே அணைத்து விடுவார்களோ என்று பயந்து அவர் அருகிலேயே எப்பொழுதும் உடன் இருக்கச் சென்றாள்” என்று திருவலங்காட்டுச் செப்பேடுச் செய்யுட்கள் குறிப்பதாக செப்பேட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அத்தோடு மட்டுமா, மாமன்னர் ராஜேந்திரன் மாண்டதும் அவரின் ஒரு மனைவியான வீரமாதேவி என்பவர் உடன்கட்டை எரிய வரலாறும் கல்வெட்டாக கிடைத்துள்ளது .
கணவன் இறந்ததும் ஒருங்குடன் உடன் மாய்ந்த பெண் டிர் புதைக்கப்பட்ட இடத்திற் கோட்டம் கட்டும் வழக் கம் பண்டைக்காலத்தில் இருந்தது. இன்னர் இன்ன இடத்திலே புதைக்கப் பட்டுளார் என்பதையும் அக் கோட்டங்கள் அறிவித்தன. இச்செய்தியைப் பின்வரும் மணிமேகலை பாடல் அறிவிக்கும்:

அருந்தவர்க் காயினும் அரசர்க் காயினும் ஒருங்குடன் மாய்ந்த பெண்டிர்க் காயினும் நால்வேறு வருணத்துப் பால்வேறு காட்டி இறந்தோர் மருங்கிற் சிறந்தோர் செய்த குறியவும் நெடியவும் குன்று கண்டன்ன சுடுமண் ஓங்கிய நெடுநிலக் கோட்டம்.’

இந்தகட்டுரை ஒரு விவாதப்பொருளுக்காக எழுதியதல்ல! .வரலாற்றில் இடம்பெற்ற சில செய்திகளையும் , தமிழர் பண்பாட்டில் நிலைபெற்றிருந்த
வழக்கங்களைப்பற்றிய இலக்கிய குறிப்புகளை நினைவூட்டலுக்கு மட்டுமே .
அண்ணாமலை சுகுமாரன்

Comment here