Tamilnadu

ஐந்தெழுத்தை ஓதி ஓதி இராவணன் உய்ந்தான்

Rate this post

தமிழ் மன்னர்களில் தலைசிறந்த பேரரசர் இராவணன், தமிழர்களின் அடையாளம்.

இராமாயணத்தை ஓலைச் சுவடிகள் தொடங்கி நவீன மின்னணு ஊடகங்கள்வரை கொண்டு சென்ற வடவர்கள் அவற்றினூடாக இராமனைப் புனிதப் படுத்தியும், இராவணப் பெருந்தகையை கெட்டவர் எனச் சித்தரித்தும் பரப்புரை மேற்கொண்டு வருவதால் இராவணப் பெருந்தகை பற்றிய சரியான புரிதல் நம்மிடையே இல்லாது போயிற்று.

சேர சோழ பாண்டியர்களில் சோழ மன்னர்கள் இமயமலை வரையிலும், மலேசியா வரையிலும் ஆட்சி புரிந்து வந்தனர் என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன.

கடாரம் வென்றான் என ராஜேந்திர சோழனுக்குப் பட்டம் உண்டு. கடாரம் என்பது மலேசிய நிலப்பரப்பு .

இவர்களுக்கு முன்பு இதே நிலப்பரப்பிள் முக்கால்வாசி அளவாவது ஆண்ட பேரரசர் இராவணனாகத்தான் இருந்திருக்க வலுவான காரணங்கள் உள்ளது. (ஆய்வுகள் மேற்கொள்வது அவசியம்).

பேரரசர் இராவணப் பெருந்தகைக்கு (படத்தில் உள்ள இலங்கை மட்டுமல்ல) வட இந்தியாவிலேயே ஆறு கோயில்கள் உள்ளன, அவரை வழிபடுவோரும் ஏராளமாக உள்ளனர்.

அதேவேளை இராவண வதம் என்பதை ராம லீலை (ராம் லீலா) எனும் பெயரில் வடவர்கள் கொண்டாடி வருகின்றனர். காரணம், இராமனைப் புனிதப் படுத்தி ஹீரோவாகவும், இராவணனை வில்லனாகவும் வடவர்கள் கட்டமைத்துவிட்டதால்.

ரஜினி – மம்மூட்டி நடித்த தளபதி படத்தில் கூடத் தமிழ் வெர்ஷனில் மம்மூட்டி சாவது போலவும், மலையாள வெர்ஷனில் ரஜினி சாவது போலவும் மாற்றிய பிறகே மலையாள ரசிகர்கள் ஏற்றுக் கொண்டனர்.

இரு மாநிலங்களுக்குள்ளேயே இப்படி இருக்க, தமிழர்கள் என்றால் ஆரிய வடவர்களுக்கு சொல்லவே வேண்டாம்.

மேலும் இராவணப் பெருந்தகை மிகச் சிறந்த சிவ பக்தர், சைவ நெறியாளர்.

மாறாக இராமன் பெருமாளின் அவதாரமாக வடவர்களால் கருதப்படக்கூடியவர். வைணவ நெறியாளர்.

இப்படி இருக்கும் நிலையில் சீதையை தூக்கி வந்து சிறைவைத்த இராவணப் பெருந்தகை சீதைக்கு ஒரு தீங்கும் வராது பார்த்துக் கொண்டதோடு சொல்லால் கூட சீதையை துன்புறுத்தவில்லை என சீதையே சான்றிதழ் கொடுத்தும், சீதையைத் தீக் குளித்து தன் “கற்பை” நிரூபித்த பின்பே இராமன் ஏற்றுக் கொண்டார் என்கிறது இராமாயணம் .

தன் காதல் மனைவியையே நம்பிடாத இராமன் புனிதமானவன், இராவணன் கொடூரமானவன் என்பதுதான் வடவர்களின் (அ)நியாயம்.

இராவணன் கடல் கடந்து பல நூறு கிலோ மீட்டர் பயணம் செய்து சீதையை நேரில் வந்து சிறை தூக்கிச் சென்றார் எனில் அவரது படைபலம் எத்தகையதாக இருந்திருக்க வேண்டும்?

இமயம் வரை பயணம் செய்த அனுபவம் பெற்றவராக இருந்திருக்கிறார்.

அவர் சீதையைச் சிறைப் படுத்தும் அளவுக்கு, இராமன் செய்த தவறு என்ன அந்த அளவுக்கு இராவணனைக் கோபத்திற்குள்ளாக்கிய இராமனின் நிகழ்வு என்ன என்பதைப் பார்ப்பது அவசியம். அதுபற்றிய விவரங்களை மறைத்திருக்க வேண்டும்.

ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் மட்டுமல்ல, தமிழ்ப் பேரரசன் இராவணப் பெருந்தகையின் காலமும் ஆரிய இராம வடவர்களுடனான எதிர்ப்புக் காலமாகவே இருந்திருக்கிறது.

வடவர்களை குலை நடுங்கச் செய்திருக்கிறார் இராவணப் பெருந்தகை .

அதனால்தான் நேரடியாக மோதி இராவணனை வெல்ல முடியாது என்பதால் குள்ள நரித் தந்திரத்தில் விபீஷணனை மயக்கி, சூழ்ச்சி செய்து மறைந்து நின்று அம்புகள் பாய்ச்சி வாலியை வதம் செய்து விட்டதாகத் தம்பட்டம் அடித்துக் கொண்ட ஒரு ‘வீராதி வீரன் தான்’ (!) இராமன் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

ஆனால் இராவணன் எவ்வளவு சிறந்தவர் என்பதை நால்வர்களில் ஒருவரான திருஞான சம்பந்தப் பெருமான் பல இடங்களில் ஆவணப்படுத்தியிருக்கிறார்.

நமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரம் பற்றிக் கூறும்போது,

(பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 8)

வண்டம ரோதி மடந்தை பேணின
பண்டை யிராவணன் பாடி உய்ந்தன
தொண்டர்கள் கொண்டு துதித்த பின்னவர்க்
கண்டம் அளிப்பன அஞ்செ ழுத்துமே.

பொழிப்புரை :

வண்டுகள் மொய்க்கின்ற கூந்தலையுடைய உமா தேவியால் செபிக்கப்படும் சிறப்புடையன திருவைந்தெழுத்தாகும் . முற்காலத்தில் இராவணன் திருவைந்தெழுத்து ஓதி உய்ந்தான் . அடியார்கள் தங்கள் கடமையாகக் கொண்டு , செபித்த அளவில் அவர்களுக்கு அண்டங்களையெல்லாம் அரசாளக் கொடுப்பன இவ்வைந்தெழுத்தாகும் .

என்கிறார்.

ஐந்தெழுத்தை ஓதி ஓதி இராவணன் உய்ந்தான் என்றால் உயர்நிலையை எட்டினார், அடைந்தார் என்று பொருள்.

இப்படிப்பட்ட இராவணனை, Character Assassination செய்தவர்கள் வடவர்கள்.

எனவே இராவணப் பெருந்தகை தமிழர்களின் அடையாளங்களில் ஒருவர்.

வாழ்த்துவோம், வணங்குவோம் நம் பேரரசர், சிவத்தில் சிறந்த இராவணப் பெருந்தகையை .

– வளர்மெய்யறிவான்

Comment here