வரலாறு

கண்டளீஸ்வரர் என்கிற உத்தமசோழேஸ்வரர்- தென்னேரி

Rate this post

பல்லவர் காலத்தில் அமைக்கப்பட்ட மிகப் பெரிய தடாகங்களில் ஒன்று, வாலாஜாபாத் அருகில் தென்னேரி (திரையன் ஏரி) – திரளயதடாகம்.
மாமன்னர் இரண்டாம் புலிகேசியின் தலைநகரம் அழிவுக்குப் பிறகு , மீண்டுவந்த அவரது மகனான சாளுக்கிய விக்கிரமாதித்தன் மிகப் பெரும் பழி நோக்கோடு காஞ்சிபுரத்தின் மீது படையெடுத்தபோது பல்லவர் கோன் பரமேஸ்வரவர்மன் படை ஒருங்கிணைத்த இடம் இந்த தென்னேரி. விவசாயத்திற்கும் மற்ற தேவைகளுக்கும் பெரும்பாலும் ஏரி பாசனத்தையே நம்பி இருக்கும் தொண்டை நாட்டில் உள்ள இந்த ஏரி , வடக்கு தெற்காக 5 கிலோமீட்டருக்கு மேலாகவும் ,கிழக்கு மேற்கில் ஒன்றரை கிலோ மீட்டருக்கு குறையாமலும் உள்ள இந்த மிகப்பெரும் ஏரி ஏறக்குறைய ஐயாயிரத்திற்கும் மேலான ஏக்கர் நிலத்திற்கு பாசனமளித்து உயிருட்டிக் கொண்டிருக்கிறது….

இவ்வேரி கிழக்குப் புறத்தில் கடினமான கரைகளுடனும், பல மதகுகளை கொண்டுள்ளது. கரைக்கு அருகே அமைந்துள்ள சாலையில் பயணிக்கும் பொழுது மதகுகளிலிருந்து வரும் நன்னீர் லேசான மெல்லிசையை மீட்டிக் கொண்டிருப்பதை காண பல பறவைகள் அங்கு வந்து முகாமிட்டு அமர்ந்திருப்பதை காணமுடியும். அருகிலுள்ள கழனிகளில் தனியாக ஏர் உழுது கொண்டிருக்கும் விவசாயிக்கு துணையாக , பலகொக்குகளும், நாரைகளையும் விளையாடிக் கொண்டிருக்கின்றன…..

பேருந்து நிலையத்தில் இறங்கி கிழக்குப் புறமாக செல்லும் தார் சாலையில் பயணிப்பதற்கு முன்பு,வலதுபுறத்தில் இன்றும் கமல மலர்களும் , அல்லி மலர்களும் பூத்துக் குலுங்கும் ஒரு அழகிய குளமும், அருகில் இளைப்பாறுவதற்கு ஏற்ற வகையில் அமைந்திருக்கும் மிகப்பெரிய ஆலமரமும், விழுதுகளில் ஊஞ்சலாடி கொண்டிருக்கும் சிறுவர்களும் நம்மை பழங்கால நிகழ்வுக்கு கொண்டு சென்று சிறிய ஏக்கப் பெருமூச்சு விட செய்கின்றன…

இந்த ஊரின் அழகை காண யாகத்தில் முளைத்த கச்சி வரதர் , பிரதி மாசி மாதம் இங்கு வந்து தடாகத்தில் உலவி விட்டுச் செல்வாரென்றால் நாம் என்ன சொல்ல ….. அத்தகைய சிறப்பு பெற்ற இவ்ஊரில் மாமன்னர் ராஜகேசரி “ராஜராஜ சோழன்” காலத்தில் கற்றளியாக மாற்ற பட்டிருக்கலாம் என்று அனுமானிக்க படுகின்ற
உத்தமசோழேஸ்வரர் என்றும் கண்டலேஸ்வசரர் என்றும் அழைக்கப்படும் ஈசனுக்கு ஒரு அழகிய கற்றளி உள்ளது….

கிழக்கு நோக்கி அமைந்து இருக்கும் மிகச் சிறிய கோவில்தான் , சோழர்களுக்கு உரித்தான கட்டடக் கலை பாணியில் இரண்டு அழகிய துவாரபாலகர்கள், கோஷ்டத்தில் விநாயகர், தக்ஷிணாமூர்த்தி,மகாவிஷ்ணு நான்முகன் மற்றும் மகிஷாசுரனை வதைத்த துர்கா தேவி என அனைத்து கோயில்களைப் போலவே இங்கும் பொலிவூட்டும் சிலைகள் இருக்கின்றன, இருந்தும் சற்றே சிதைந்துள்ளது . பாதச் சுவரில் அமைந்துள்ள தூண்களும் மிகவும் அழகிய வேலைப்பாடுடன் கூடியது.

பிரஸ்தரத்தில் மேற்குப் புறத்தில் இடது கால் பெருவிரலை தன் வாயில் வைத்து விளையாடும் ஆலிலையில் தவழ்ந்து கொண்டிருக்கும் பாலகிருஷ்ணனின் திரு உருவம் ஒன்று புடைப்புச் சிற்பமாக நம்மை வசீகரிக்கின்றது.

சோழர் குல மாணிக்கம் பத்தாம் நூற்றாண்டிற்குப் பதினோராம் நூற்றாண்டிற்கும் பாலமாக இருந்த மாமன்னர் ராஜராஜ சோழ தேவரின் ஆட்சிக் காலத்தில் பல்வேறு நிவந்தங்களை இந்த திருக்கோவில் பெற்றிருக்கின்றது. அந்தப் பெருந்தகையின் மெய்க்கீர்த்திகளை தாங்கி நிற்கும் கோவில் சுவர்களும் பெருமை பெற்றது தான்…

சாலைக் கலமறுத்தருளி எனத்தொடங்கும் கோ ராஜ ராஜகேசரி வர்மனின்(985 – 1014) பதினோராவது ஆட்சியாண்டில், “கண்டராதித்த சோழ மாதேவடிகள் மதுராந்தகன் எனும் உத்தம சோழரை திருவயிறுவாய்த்த நம் பிராட்டியார் செம்பியன் மாதேவி” அவர்கள், ஊத்துக்காட்டு கோட்டத்து தன்கூற்று உத்தம சோழ சதுர்வேதி மங்கலத்து உத்தமசோழபுரம் உடையாருக்கு

நாற்பத்தேழு, ஐம்பத்தொண்பது ,
தொண்ணூறு மற்றும் நூறு பலம் கொண்ட செப்புத் திருமேனிகளை நிவந்தமாக அளித்துள்ளார் . (ஒரு பலம் என்பது 41.6 கிராம் )எடையைக் கொண்டது. எனில், முறையே இரண்டு, இரண்டரை ,மூன்றே முக்கால் மற்றும் நான்கு கிலோ எடையுள்ள செப்புத்திருமேனிகளையும், மேலும் சில திரு விளக்குகளையும் அளித்துள்ளார்…

மேலும் இவரது பன்னிரண்டு,பதினேழு, மற்றும் இருபதாவது ஆட்சி ஆண்டுகளில் பல நிவந்தங்களை இந்தத் திருக்கோவில் பெற்றுள்ளது.

வீரத்தையே துணையாகவும், தியாகத்தை அணிகலனாகவும் கொண்ட சக்கரவர்த்தி உடையார் ஸ்ரீ கோராஜகேசரி வீரராஜேந்திர சோழ தேவரின்(1063 – 1070) நான்காவது ஆட்சியாண்டில், ஜயசிங்குலகால வளநாட்டு குருகாடிகிழார் திருவேகம்பம் ஆடலவல்லாரான அதிகாரிகள் பல்வேறு இடத்தில் கைக்கொண்டு,தொன்னுற்று இரண்டு செம்மறி ஆடுகளையும், சாவா மூவா பேராடுகளையும், திரு நந்தா விளக்கு ஏற்ற நிவந்தமாக அளித்துள்ளனர்.

இந்த திருக்கோவிலின் விமானம் செங்கல் கட்டுமானமே, இந்தக் கோவில் மட்டுமல்லாமல் முதலாம் குலோத்துங்கன் காலத்தைச் சேர்ந்த ஆபத்சகாயேஸ்வரர்( திருவனந்திஸ்வரமுடைய நாயனார்) என்ற கோவிலும் , ஒரு கல்யாண வெங்கடேச பெருமாள் கோவிலும் மேலும் பண்டைய சப்தமாதர்களும் உள்ளனர்.

 

Comment here