India

குஜராத்தில் தேசிய விளையாட்டு போட்டி- பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

Rate this post

36-வது தேசிய விளையாட்டு போட்டி குஜராத்தில் உள்ள ஆமதாபாத், காந்தி நகர், சூரத், வதோதரா, ராஜ்கோட், பவநகர் ஆகிய 6 நகரங்களில் நடைபெறுகிறது.

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் கண்கவர் கலை நிகழ்ச்சியுடன் பிரமாண்டமான தொடக்க விழா இன்று நடந்தது. இவ்விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு போட்டியை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்து விழாவில் பேசினார்.

விழாவில் குஜராத் ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத், முதல்வர் பூபேந்திர பட்டேல், மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாக்கூர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டார்கள்.

தேசிய விளையாட்டு போட்டியில் நீச்சல், தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, ஆக்கி, கைப்பந்து உள்பட 36 விளையாட்டுகளில் இருபாலருக்கும் போட்டிகள் நடைபெற்றது.

கோகோ, யோகா, மல்லர் கம்பம் ஆகியவை அறிமுக போட்டியாக இடம் பெற உள்ளன. மொத்தம் 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்கள், சர்வீசஸ் ஆகியவற்றை சேர்ந்த சுமார் 7 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர். இன்று முதல் அக்டோபர் 12-ம் தேதி வரை இப்போட்டி நடைபெற உள்ளன. குஜராத் மாநிலம் இந்த போட்டியை நடத்துவது இதுவே முதல்முறையாகும்.

கடைசியாக 35-வது தேசிய விளையாட்டு 2015-ம் ஆண்டு கேரளாவில் நடந்தது. அதன் பிறகு தேசிய விளையாட்டு போட்டி கோவாவில் கடந்த 2020-ம் ஆண்டு நடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

கொரோனா பரவல் காரணமாக காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்ட இப்போட்டியை நடத்த போதிய வசதியின்றி கோவா ஒதுங்கியது. 7 ஆண்டு இடைவெளிக்கு பிறகு இந்த ஆண்டு தேசிய விளையாட்டு திருவிழா மீண்டும் அரங்கேறியுள்ளது.

Comment here