கல்வி

குயிண்டஸ் கர்டியஸ் (Quintus Curtius)

Rate this post

பண்டைய தமிழர்களின் கடல் வணிகத்தை மூன்று பெரும் காலகட்டமாக பிரிக்கலாம். முதல் காலகட்டம் என்பது கி.மு. 3000ம் முதல் கி.மு. 700 வரையான, வரலாற்றுக்கு முந்தைய காலகட்டம். இரண்டாம் காலகட்டம் என்பது வரலாற்றுத் தொடக்கத்துக்கு சற்று முந்தைய கி.மு. 700 முதல், சங்க காலத்தின் இறுதிக்கட்ட காலமான கி.பி. 300 வரையான 1000 ஆண்டுகள். மூன்றாவது காலகட்டம் என்பது சங்க காலத்திற்கு பிந்தைய காலமான கி.பி. 300 முதல்,

பிற்கால பாண்டியர்களின் இறுதிக் காலமான கி.பி. 1300 வரையான 1000 ஆண்டுகள்.

அதற்குப்பிறகு நமதுதமிழர்களின் வணிகம்என்பது முகமதியர் ஆதிக்கம் ,அயல்நாட்டவர் ஆதிக்கம் ,நாயக்கர் ஆதிக்கம் ,மராட்டியர் ஆதிக்கம் என பல்வேறு ஆதிக்க சக்திகளின் கீழ் சிக்கி சீரழிந்தது .பல்வேறு அரிய தொழில் நுட்பங்களை நமது தொல் தமிழ்ரமூலம் வழிவழியாக வந்தது இந்தகாலகட்டத்தில் தான் அழிவுற்றது .

நமது வரலாறு என்பது சங்ககாலத்தை எல்லையாக கொண்டு கட்டமைக்கப்பட்டுவிட்டது . தமிழர்களின் உண்மையான சிறப்புகள் அதற்க்கு முந்தியவை .அதிகம் உண்டு

ஏனோ சொல்லும் போதெல்லாம் சங்ககாலத்தை தமிழர் வரலாற்றின் எல்லையாக குறிப்பிடுகிறோம் அவ்வாறே சிந்துவெளியும் நமது வரலாற்றின் எல்லை அல்ல .
சங்க இலக்கியங்கள் என்பது அந்த காலகட்டத்திற்கு முன் 1000 ஆண்டுகள் தமிழர் வாழ்ந்த விதத்தை விவரிக்கும் பல ஆயிரம் பாடல்களில் குறிப்பிட்ட சில மட்டும் தொகுக்கப்பட்டது ஆகும் .

இன்னமும் முழுமையாக ஆழமாக செல்லவேண்டும் இதற்க்கு தக்க ஆதாரங்களைத் திரட்டவேண்டும் .

முதல் காலகட்டம் என்பது கி.மு. 3000ம் முதல் கி.மு. 700 வரையான, வரலாற்றுக்கு முந்தைய காலகட்டம். இந்தக்காலத்திய பண்டைய எகிப்து ,மெசபடோமியா சுமேரிய ரோம் மற்ற பண்டைய நாகரீகங்களுடன் தமிழர் தொடர்பு இருப்பது தெரிகிறது ஆனால் நமது பக்க தரவுகள் இன்னமும் வேண்டும் .

அப்போது நமதுதொல் தமிழர்களால் தயாரிக்கப்பட்ட மிக நேர்த்தியான வாட்கள் உலகம் எங்கும் வியந்து நோக்கப்பட்டது போட்டிபோட்டுக்கொண்டு வாங்கப்பட்டன .

உலக நாகரிகங்களில் இரும்புப் பண்பாடு என்பது மனித இனப் பரிணாம வளர்ச்சிப் படிநிலைகளில், புதிய கற்காலத்துக்குப் பிறகு செம்பு உலோகப் பண்பாட்டுக்கும், வெண்கல உலோகப் பண்பாட்டுக்கும் அடுத்து மூன்றாவதாக உருவானப் பண்பாடாகும்.

ஆனால், இரும்புக் காலத்துக்கு தென்னிந்தியா நுழைந்தது என்பது உலகலாவிய தனித்துவமிக்க ஒரு பண்பாட்டு வளர்ச்சி நிகழ்வாக உள்ளது

தென்னிந்தியாவில் புதுக் கற்காலத்தின் இறுதிக்கட்டத்தில் இரும்பு தோன்றிவிட்டது என்று ஒரு பொதுவான கருத்து முன்வைக்கப்படுகிறது. பெருங் கற்படைப் பண்பாட்டுச் சுவடுகள் வெளித்தெரியத் தொடங்கிய கி மு .1500 அளவிலான காலகட்டக் புதுக் கற்காலத்தின் இறுதிக்காலம் என்று ஒரு பொது வரையறையை அடையலாம்.

ஐரோப்பாவில் இரும்புத் தொழில் தொடங்குவதற்கு வெகு முன்பே தென்னிந்தியாவில் இரும்புத் தொழில்நுட்பம் செய்யப்பட்டு வந்ததாக அறிஞர்கள் கருதுகின்றனர்; .

கற்கால மக்கள் பெரிதும் குன்றுகளிலும், மலைச்சரிவுகளிலும், வளமிக்க செறிந்த காடுகளின் ஓரங்களிலும் வாழ்ந்தனர்; இரும்பினைக் கண்டறிந்த பிறகே, ஆதி மனிதர் காட்டினைத் தம்முடைய வாழிடமாகக் கொண்டிருக்கலாம் என்று தேன்றுவதே பொருத்தமாகக் தோன்றுகிறது;

இரும்புக் கருவிக் கால நாகரிகமே, குன்றுகளில் வாழ்ந்த மக்களைக் காடுகளில் சென்று வாழுமாறு தூண்டியது; மிகப் பழைய காலம் முதலே இரும்பைப் பயன்படுத்தி வருவதற்குரிய தடயங்கள் இந்தியாவில் கிடைத்துள்ளன. மேலும், துருபிடிக்காத வகையில் இரும்பைச் செய்யும் சிறப்புமிக்க ஒரு முறையையும் அவர்கள் அறிந்திருந்தனர்” என்று தென்னிந்தியாவில் இரும்புக் காலம் தோன்றியது குறித்து உலோகத் தொழில் கலையியல் வல்லுநர் போராசிரியர் கெளலாந்து குறிப்பிடுவது கவனிக்கத்தக்கதாக உள்ளது

உயர்தர இரும்பு செய்ய உயர்தர இரும்புத்தாது தேவை .மாக்னடைட், ஹேமடைட், லிமோனைட், சிட்ரைட் ஆகிய நான்கு வகை இரும்புத் தாதுக்களில் இருந்து இரும்பு கிடைக்கிறது. இவற்றுள், மாக்னடைட் தாதுவில் இருந்துதான் மிக அதிக சதவீத இரும்பு கிடைக்கிறது. இது இயற்கையாகவே நல்ல கருப்பு நிறம் கொண்டதாகும். ஹேமடைட் வகை தாதுவிலும் இரும்பு நிறைய இருக்கிறது. இது இயற்கையாக சிவப்பு நிறம் கொண்ட தாதுவாகும். லிமோனைட் தாது மற்ற தாதுக்களைவிட குறைவான இரும்பையும், பழுப்பு நிறத்தையும் கொண்டது. சிட்ரைட், மஞ்சள் நிறம் கொண்ட இரும்புத் தாதுவாகும்.மாக்னடைட் தாது அதிக வெப்பம் தாங்கிக் கற்களையும், சாணைக் கற்களையும் செய்ய பயன்படுத்தப்படுகிறது. இத்தாதுவைக் கொண்டு, பல்வேறு துறையினர் பல்வேறு பயன்பாட்டைக் கொண்ட பொருட்களைத் தயாரிக்கின்றனர். இதுவே தேனிரும்பு என்று தமிழில் அழைக்கப்படுகிறது

தமிழ்நாட்டில், முதல்தரமான மாக்னடைட் இரும்புத் தாதுக்கள் சேலம் அருகே அமைந்துள்ள கஞ்சமலை, கோதுமலை, தருமபுரி மாவட்டத்தில் அரூர் வட்டத்தில் அமைந்துள்ள தீர்த்தமலை, நாமக்கல் மாவட்டத்து கொல்லைமலை, திருச்சி மாவட்டத்து பச்சமலை ஆகிய பகுதிகளில் மிகுதியாகக் கிடைக்கின்றன. இங்கு கிடைக்கும் இரும்புத் தாதுக்கள் உலகிலேயே சிறந்தவை என்பதால், உலகளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளன. திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலையை அடுத்து அமைந்துள்ள வேதியப்பன் மாலைக்குன்றுப் பகுதிகளில் கிடைக்கும் இரும்பும், தருமபுரி மாவட்ட தீர்த்தமலை இரும்புத்தாதுவும் படிவுப் படுக்கைகளாகக் கிடைக்கின்றன,

இரும்பு உருக்கும் தொழிலுக்கு இன்றியமையாத துணைப்பொருளான சுண்ணாம்புக்கல்லும் இன்றைய சேலம், தருமபுரி, நாமக்கல் மாவட்டப் பகுதிகளில் பெருமளவு கிடைக்கிறது. இது, இப்பகுதிகளில் இரும்பு உருக்கும் தொழில் தொன்மையான காலத்தில் இருந்தே மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும் என்ற கருத்துக்கு வலுகூட்டுவதாக உள்ளது.

கஞ்சமலைப் பாறைகளின் வயது ஏறத்தாழ 450 கோடி ஆண்டுகள் பழைமை வாய்ந்தது என ஆய்வின் மூலம் அறியப்பட்டுள்ளது. கஞ்சமலை, கோதுமலை, தீர்த்தமலை, கொல்லிமலை, பச்சமலை ஆகியவை அமைந்துள்ள நில அமைப்பானது கவனிக்கத்தக்க ஒன்றாகும். இம்மலைகள் கிழக்குத் தொடர்ச்சி மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைகளும் சந்திக்கும் புள்ளியில், பெரும்பான்மையாக இரு மலைத்தொடர்களின் தொடர்பு அற்றும், ஒன்றுக்கொன்றும் தொடர்பற்ற தனித்தனி குன்றுகளாகவும், சிறிதே இரு மலைத்தொடர்களின் அறுபட்ட தொடர்பைக் கொண்டும் இருப்பதைக் காணலாம். இதனாலேயே, எண்ணிக்கை மிகுதியான சிறு சிறு பள்ளத்தாக்குகளால் நிரம்பியதாக இப்பகுதி காட்சி அளிக்கிறது.

மேற்குறிப்பிட்ட இடங்களன்றி, தமிழகம் முழுவதும் பரவலாக இரும்புத் தாது கிடத்துள்ளதை, கொடுமணல்,ஆதிச்சநல்லூர், இன்றைய கிருஷ்ணகிரி மாவட்டத்து குட்டூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட அகழாய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன. இவைகளைப் பற்றி விரிவாக பிறகு காணலாம் .

பொதுவில், இரும்புத் தாதுக்கள் பூமிக்கடியிலும், மலைக் குன்றுகளிலும் கிடைத்தாலும், இரும்பை நேரடியாக எடுத்துவிட முடியாது. ஏனெனில், இரும்புத் தாதுக்களில் இரும்பைத் தனிமைப்படுத்தி எடுக்க அதிக அளவு வெப்பம் தேவைப்படும் (1450 APPRAX.) அதனால், அந்த வெப்பத்தை உண்டாக்கக்கூடிய எரிபொருள் மரமாகவோ, நிலக்கரியாகவோ, வேறு எந்தப் பொருளாகவோ இருக்கலாம்.

இந்த எரிபொருள் பெரும்பாலும் இரும்புத்தாதுக்கள் கிடைக்கும் இடத்தின் பக்கத்திலேயே இருந்திக்க வேண்டும். ஏனெனில், எரிபொருளை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்குக் கொண்டு செல்வதில் நடைமுறைச் சிக்கல் இருப்பதால், இரும்புத் தாதுக்கள் கிடைக்கும் இடத்துக்கு அண்மையிலேயே கிடைக்கும் எரிபொருளையே பண்டைக் காலத்தில் மக்கள் பயன்படுத்தியிருக்க வேண்டும்.

ஒருபுறம் பெரிய தொழிற்சாலைகள் அமைத்து இரும்பு உருக்கும் தொழில் நடைபெற்றது போலவே, ஆங்காங்கே அடர்காடுகளின் நடுவேகூட சிறு உருக்கு உலைகள் மூலம் இரும்பை உருக்குவது குடிசைத்தொழிலாக செய்யப்பட்டு வந்ததை தருமபுரி, பென்னாகரம், கிருஷ்ணகிரி, ஒசூர், மேட்டூர் வட்டங்களில் ஆங்காங்கே காணக் கிடைக்கும் இருப்பு உருக்கிய கசடுகளின் எச்சங்களில் இருந்து அறிய முடிகிறது.

பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதி ஆண்டுகளில்கூட, இவ்வாறு சிறுசிறு அளவில் நடைபெற்று வந்ததைக் கண்ணுற்று புச்சனன் ஆய்வாளர் விவரித்துள்ளார் ஆனால் இவை அனைத்தும் நம்மை ஆண்ட ஆங்கிலேயர் ஆட்சியில் முற்றிலுமாக அழிக்கப்பட்டது .

கி மு . 450-ல், க்டேசியஸ் (Ktesias) புராதன இந்தியா எனும் நூலின் தமது குறிப்பில், பெர்சிய அரசனுக்கு இந்திய உருக்கு வாள்கள் பரிசளிக்கப்பட்ட விவரத்தையும், தென்னிந்தியர்கள் கி மு . 5-ம் நூற்றாண்டிலேயே உருக்குத் தொழிலில் சிறந்து காணப்பட்டதாகவும் குறிப்பிடுகிறார்
(இந்த நூலின் பிடிஎப் என்னிடம் உள்ளது சென்ற நூற்றாண்டு ஆங்கிலம் எனவே படிக்கத்தான் சிரமமாக உள்ளது )

வார்மிங்டன்எனும் வரலாற்றாளரும் இதே கருத்தை, “இந்தியாவிலுள்ள எஃகில் இருந்து நல்ல உறுதிவாய்ந்த வாள்கள் செய்யப்பட்டன என்றும், அவை க்டேசியஸ் காலத்தில் பெரும்புகழுடன் விளங்கின என்றும், இந்தக் காலகட்டத்தில் இந்தியாவிலுள்ள இரும்பு மற்றும் எஃகு, எகிப்து நாட்டு வாணிபத்தில் சிறப்பிடம் பெற்றிருந்தது” என்றும் குறிப்பிடுகிறார். மு.பொ.ஆ. 300 அளவில் ஆப்பிரிக்கா, கிரேக்கம் மற்றும் கிழக்கத்திய நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து இரும்பு ஏற்றுமதி செய்யப்பட்டது என்பார் கே.என்.பி. ராவ்.எனும் ஆய்வாளர் .

பேரரசன் அலெக்சாந்தர்உலக வரலாற்றில் பெரும் வெற்றிகளைப் பெற்ற இராணுவத் தலைவர்களில் ஒருவராகப் போற்றப்படுகிறார். இவர் ஈடுபட்ட எந்தப் போரிலும் தோல்வியடைந்ததில்லை எனவும் சொல்லப்படுகிறது. ஆனால்
பஞ்சாப் பகுதியை ஆண்டு வந்த இந்திய மன்னன் போரஸை போராடி வென்றார். அதுவரை யானைப்படையையே பார்த்திராத அலெக்ஸாண்டரின் படைகள் முதல் முறையாக யானைப்படையை போரஸின் படையில் பார்த்ததில் பிரமித்து பயந்து முதல் முறையாக பின்னோக்கி அடியெடுத்து வைத்தனர். ஹைடஸ்பேஸ்-ஸில் கி.மு.326-ல் நடந்த இந்த போர்களில் ஆச்சர்யம் அடைந்த அலெக்ஸாண்டர் மன்னர் போரஸின் வீரத்தை கண்டு பிரமித்து போரஸிடம் நட்பு பாராட்டினார். அவருக்கு போரஸ் எனும் புருஷோத்தமன் ஒரு சிறந்த எஃகு வாளை கொடையாகக் கொடுத்தார் என்றுக் கூறப்படுகிறது .

கி மு . 327-ல், கிரேக்க மன்னன் அலெக்சாண்டர் இந்தியா மீது படையெடுத்து வந்தபோது, புருஷோத்தமன் (புருஸ்) சேலம் பகுதியில், அதாவது கஞ்சமலையில் வெட்டியெடுக்கப்பட்ட 38 பவுண்டு எஃகையே கொடையாகக் கொடுத்தான் என்று அறியமுடிகிறது.

இது குறித்து, புகழ்பெற்ற உலோகவியலாளர் ஹீத், குயிண்டஸ் கர்டியஸ் (Quintus Curtius) வியந்து தெரிவிப்பதை எடுத்துக்காட்டுகிறார்.

அது – “உலகையே வெற்றிகொண்ட மகா அலெக்சாண்டருக்கு போரஸ் (புருஷோத்தமன்) நாட்டின் (இந்தியா) மீது படையெடுத்தபோது, அந்நாட்டு அரசன் 30 பவுண்டு*16 எடையுள்ள இந்திய எஃகை பரிசாக வழங்கியதாகவும், அந்த எஃகு பரிசாகப் பெற்றுக்கொள்ளும் அளவுக்கு மதிப்புமிக்கதாக விளங்கியது என்பதையும் நாம் நம்புவதற்கு கடினமாக உள்ளது”.

மிகவும் தொன்மையான காலத்தில் இருந்தே (தென்னிந்தியாவின்) மலபார் கடற்கரைக்கும், பெர்சிய வளைகுடாவுக்கும் சிந்துவெளிக்கும், செங்கடலுக்கும் இடையே நல்ல வணிகத்தொடர்பு இருந்தது என்று. ஆகையால், தென்னிந்தியாவின் எஃகு வட இந்தியாவைச் சேர்ந்த போரஸ் நாட்டின் வழியாக ஐரோப்பிய மற்றும் எகிப்து நாடுகளுக்குச் சென்றது என முடிவு செய்வதற்கு தக்க காரணங்கள் உள்ளது எனலாம் என்கிறார் .

அவர் மேலும் குறிப்பிடுகையில், புகழ்பெற்ற “டெமாஸ்கஸ் வாள்”கள் செய்ய இந்திய இரும்பு அனுப்பப்பட்டது என்று பல சான்றுகள் மூலம் நிறுவுகிறார். சர் ஜார்ஜ் பெர்டுவுட் குறிப்பிடும்போது, “இந்திய எஃகானது மிகவும் பழைமையான காலத்தின் தொடக்கநிலையிலேயே வெகுவாகப் போற்றப்பட்டது; மேலும், டெலிடொ வாள்கள் (Toledo blades) பிற்காலத்தில் போற்றப்பட்டபோதும், இந்திய எஃகு கொண்டு செய்யப்பட்ட டெமாஸ்கஸ் வாள் தன்னுடைய முந்தைய தலைமை இடத்தை தக்கவைத்துக்கொண்டிருந்தது.

இவைகளை நான் மட்டும்தமிழ் பற்றுக் கொண்டு கூறுவதாக எண்ணவேண்டாம் .

1875-ம் ஆண்டு, சர் ஜான் ஹிக்‌ஷா (Sir John Hicksha), என்பவர் தனது ஜனாதிபதி உரையில் குறிப்பிடும்போது, “நான்காம் ஐந்தாம் நூற்றாண்டுகளின் துவக்கத்தில் இந்தியாவிலிருந்து இருப்பின் ஏற்றுமதி எல்லை அற்றதாக இருந்தது. இந்தியா, மேற்கு உலகின் முந்தைய நாகரிகச் சமூகங்களில் இருந்து எந்தவகையில் பயனடைந்திருந்தாலும், மேற்கு உலகுக்கு இரும்பையும் எஃகையும் வழங்கியதன் மூலம், அதற்கு மிகச் சிறந்த கைமாற்றை செய்திருக்கிறது”.
அவர் மேலும் குறிப்பிடும்போது, “பண்டைய எகிப்தின் கருங்கல் தூண்களை செய்யப் பயன்படும் மிக உறுதியான துளைப்புக் கருவிகள் (drills) இந்திய இரும்பு கொண்டு செய்யப்பட்டவை. மேலும், முதலில் பெர்சியர்களும், பின்னர் அரேபியர்களும் இந்தியாவிடம் இருந்தே இரும்பை உறுதியாகும் எஃகுத் தொழில்நுட்பத்தை அறிந்தனர்; இதற்கு மிகச்சிறந்த உதாரணமாக இருப்பது, இடைக்கால வரலாற்றில் புகழ்பெற்ற டெமாஸ்கஸ் வாள்களாகும்.”என்கிறார் .

ரோஸ்ஸி மற்றும் ஸ்கொலெம்மர், தங்களின் புகழ்பெற்ற “வேதியியல் ஆய்வுகள்” நூலில், “இரும்பு இந்தியாவின் தாதுக்களில் இருந்து முதலில் பெறப்பட்டது எனத் தோன்றுகிறது எனக் குறிப்பிடுகின்றனர்”. இங்கு இந்தியா எனக் குறிப்பிட்டாலும், அது பண்டையத் தமிழகமான தென்னிந்தியாவைக் குறிக்கும் என்பதை நினைவில் கொள்வோம்.

இப்போதும் கட்டுரை நீண்டுவிட்டது .அடுத்ததில் இந்தியாவின் 18 நூற்றாண்டின் ஆசியாவின் முதல் இரும்பு ஆலைப்பற்றியும் சித்தர்கள் இரும்பைவைத்து செய்த வித்தைகளைப்பற்றியும் காணலாம் நன்றி
#அண்ணாமலைசுகுமாரன்

Comment here