Uncategorized

சன்மார்க்க சங்கத்தார்கள் தழைக்கு அருள் தா தா

Rate this post

அருட்பெருஞ்ஜோதி

எவ்வுயிரையும் தன்னுயிர் போல் பாவித்து அவ்வுயிர்களின் பசியை தனக்கு வந்த பசியைப் போலவும் ,
அவைகளுக்கு உற்ற துன்பங்களை தமக்கு வந்த துன்பங்களாகவும் உணர்ந்து ,
பெற்ற தாய் தனது பிள்ளைகளை எவ்வாறு பரிந்து அரவணைப்பாளோ அதுபோன்று இவ்வுலக உயிர்கள் அனைத்தையும் தாம் சேர்ந்து பெற்ற பிள்ளைகளாகக் கண்டு உபகரிக்கும் தாய்மைகுணம் நிறைந்த சுத்த சன்மார்க்க சங்கத்தார்கள் …. ,

மனிதநேயம் கடந்த ஆன்மநேய கொண்டவர்களாதலால் ….
இவ்வுலகில் ஆறறிவு கொண்ட அனைத்து ஜீவர்களும்( நம்மையும் சேர்த்து ) அவரவர்கள் செய்த வினைப்படிதான் இயங்குகின்றார்கள் என்றும் …

அவரவர்கள் செய்கின்ற நற்செயல்களும் தீயசெயல்களும் அவர்களது முன்வினைப் பயனால்தான் செய்கின்றார்கள் என்றும்…

அறியாமையால் அவர்கள் செய்கின்ற பிழைகள் அனைத்தும் அவர்களது கர்மப்பலனால் செய்ய நேருகின்றது என்றும்…

எல்லாம் வல்ல இறைவனது அருள் அசைவின்றி இங்கு ஓர் அணுவும் அசையாதெனில் ,
ஜீவர்கள் தனக்கு வழங்கப்பெற்ற அறிவு சுதந்திரத்தைக்கொண்டு நன்மை தீமைகளை ஆராய்ந்து தீயவை ஒதுக்கி நன்மையை செய்யாமல் ,
அருள்நியதிக்கு மாறான செயல்களை செய்து தீவினைக்கு ஆட்பட்டதனால் தற்பொழுது அவர்கள் அவ்வினைப்பயனை அனுபவிக்கும் பொருட்டு அறியாமையினாலும் அஜாக்கிரதையினாலும் பல்வேறு துன்பங்களை அனுபவிக்கவும் பல்வேறு தவறான செயல்களை செய்திடவும் நேருகின்றது என்பதை உணர்ந்து …

அவ்வாறு அவர்கள் செய்கின்ற செயல்கள் அனைத்தும் அவர்கள் முன்வினைப்படியே செய்கின்றார்கள் என்பதை உணரக்கூடிய ஆற்றல் பெற்ற ஆன்மநேய உணர்வுடைய சுத்த சன்மார்க்க சங்கத்தார்கள்….

அவர்கள் அறியாமையில் முன்செய்த பிழைகளையெல்லாம் கருத்தில் கொண்டு அவரவர்கள் சார்ந்திருக்கும் சமயத்தின் பெயரால் மதத்தின் பெயரால் மார்க்கங்களின் பெயரால் அவர்களை குற்றம் சொல்லாமல் ,
அவர்கள் செய்கின்ற செயல்களில் அவர்களது முன்வினை பலன் நிறைந்திருப்பதை உணர்ந்து , அவர்களையும் எந்தவிதத்தினாலாவது நம்மவர்களாக்கிக்கொள்ள முயற்சி மேற்கொள்ள வேண்டுமே தவிர…

அவர்களைக் குற்றம் சொல்லுவதும் அவர்கள் முன் செய்த குற்றங்களை தற்பொழுதுவரை குறை பார்த்து வசை பாடுவதும் ,
நம்மைவிட சிறந்தவர்கள் யாருமில்லை என்று சன்மார்க்கத்தின் பெயரில் அகங்காரம் கொள்ளுவதும் ,

சுத்தசன்மார்க்கத்திற்குரிய அடிப்படை தயாகுணம் இல்லாமல் கொடுப்பவர்கள் வாங்குபவர்கள் என்று பேதம் கொண்டு ஜீவகாருண்யம் என்ற பெயரில் லட்சம் பேர்களுக்கு பசியாற்றிவித்தாலும் அது நமது தயவுடைய சுத்த சன்மார்க்க ஆன்மநேயத்திற்கு உரியது அல்ல என்பதை தயவுடன் உணர்தல் வேண்டும்.

நமக்குப் பசி நேரிட்டு அப்பசியின் பொருட்டு உணவு வழங்குகின்ற வரிசையில் நாமும் நீண்ட நேரம் கால்கடுக்க நிற்கின்ற பொழுது நம்மை அடையாளப் படுத்த போட்டோவோ அல்லது காணொளியையோ மற்றவர்கள் எடுக்கின்ற பொழுது நமது மனம் எந்த அளவிற்கு கூச்சமும் வருத்தமும் அவமானமும் கொள்ளுமோ அதை நன்றாக நாம் உணர்ந்து ,
அவர்களுக்கு உணவு கொடுக்கின்ற மேலான இடத்தில் நாம் இருப்பதனால்… அவர்களின் வலியை நமது வலியாக உணர்ந்து அவர்களை நீண்ட நேரம் வரிசையில் காத்திட வைக்காமல் நன்முயற்சியினால் உடனே அவர்களுக்கு பசியாற்றி அந்த இடத்திலிருந்து அவர்களை அனுப்புவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதே தயவுடைய நம்மவர்களின் பக்குவ மேன்மையாகும்.

சுத்த சன்மார்க்க சங்கத்திற்கு உரிய அருமை சகோதர சகோதரிகள் கட்சியின் பெயரிலோ
மற்ற சமய மத மார்க்கத்தின் பெயரிலோ மற்றவர்கள் செய்கின்ற அல்லது செய்த குற்றங்களைக் கொண்டு அவர்களை இழிவாக பேசுவது வலைதளங்களில் பதிவுகள் செய்வது இதுபோன்ற நிகழ்வுகள் அனைத்தும் சுத்த சன்மார்க்க சங்கத்தில் ஜீவ தயவை மேம்படுவதற்கான பயிற்சியிலும் முயற்சியிலும் இருக்கின்ற அருமை சகோதர சகோதரிகளின் பக்குவத்திற்கு உகந்தது ஆகாது என்று அறிந்து…

சுத்தசன் மார்க்கத்தின் வழி அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருடைய அருளைப் பெறுவதற்கான முயற்சியில் பயணிக்கின்ற நாம் அனைவரும் நம்முடைய தரத்தையும் பக்குவத்தையும் உயர்த்திக் கொள்வதற்கான முயற்சிகளில் மட்டுமே நமது கவனத்தை செலுத்துதல் வேண்டும் . நம்முடைய தயவு எந்தவிதத்திலும் பாழ் போகாத வண்ணம்…
தயவானவைகளையே நமது குறிக்கோளாக மனத்தினால் எண்ணுவதும் ,
தயவான இனிய சொற்களையே வாய்மொழியால் பேசுவதும் ,
தயவுடைய நற்குணசெயல்களையே செய்கையினால் செய்வதுவும் சிறப்பாகும்.

நமது பெருமான் கூறுவது போன்று உயிர்க்கொலை புரிவோர்களுக்கு ஆபத்துக் காலத்தில் அவர்களுக்கு பசியாற்றி வைத்தல் செய்வது மட்டுமே நமது உரிமையாய் கடமையாய் கொண்டும் ,
அவர்களுக்கு நல்ல அறிவு புகட்டுவதாகக் கருதி கடுமையான இழிவான வார்த்தைகளை நாம் எந்த விதத்திலும் எக்காரணத்தைக் கொண்டும் எத்துணையும் பயன்படுத்தக் கூடாது என்பதை தயவுடன் அறிதல் வேண்டும்.

நாம் சுத்த சன்மார்க்கத்தை பற்றியதன் காரணம் நம்முடைய ஜீவ தயவை அணுஅணுவாக பெருக்கி கடவுளுடைய பெரிய தயவை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் என்பதை சத்தியமாக அறிந்து அதன்படி நாம் நம்முடைய கரணத்தை பஞ்சேந்திரியகளின் வழியில் செல்லவிடாமல் நம்முடைய அறிவின் வழி அவற்றை இழுத்து பிடித்து நடத்துதல் வேண்டும்.

இந்த பதிவை ஏதோ அகம்பாவத்தினால் நான் பதிவு செய்ததாக கருதாமல் சுத்த சன்மார்க்கத்தின் வளர்ச்சியில் சுத்த சன்மார்க்க சங்கத்தார்களின் வாழ்வின் வளர்ச்சியில் நம் ஒவ்வொருவருக்கும் உரிமையும் அக்கறையும் உண்டு என்று கருதியே இந்தப் பதிவை என்னுடைய சக சன்மார்க்க சங்கத்து அருமை சகோதர சகோதரிகளுக்கு தயவுடனும் பணிவுடனும் நமது தந்தை திருவருட்பிரகாச வள்ளல் பெருமான் துணைக்கொண்டு இங்கு பதிவு செய்து உள்ளேன். இதில் பிழை ஏதும் தோன்றுமாயின் தயவுடைய சன்மார்க்க சங்கத்தார் இவ்வெளியேவனின் அறிவு தாழ்வினை தயவுடன் பொறுத்தருள வேண்டுகின்றேன்.

தயவான நன்றிகள்
வள்ளற்பெருமான் துணையில்
வள்ளல் அடிமை
வடலூர் இரமேஷ்.

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க. வள்ளல் மலரடி வாழ்க வாழ்க.
சற்குரு நாதா சற்குரு நாதா சன்மார்க்க சங்கம் தழைக்க அருள் தா தா !
சற்குரு நாதா சற்குரு நாதா சன்மார்க்க சங்கத்தார்கள் தழைக்கு அருள் தா தா !

Comment here