வரலாறு

தமிழ் வரலாற்றில் 19ஆம் நூற்றாண்டுவரை தீபாவளி – விசயநகர மன்னர்களின் காலத்தில் தெலுங்கு பிராமணர் வழியாக தமிழ்நாட்டிற்கு வந்த திருவிழா

Rate this post

தமிழ் வரலாற்றில் 19ஆம் நூற்றாண்டுவரை தீபாவளி குறித்த குறிப்புகள் ஏதும் கிடையாது. வீரமாமுனிவரின் சதுரகராதி 1732ல் வெளியிடப்பட்டது அதில் தீபாவளி என்ற சொல் கிடையாது. தமிழ் இலக்கியங்களிலும் 19ஆம் நூற்றாண்டுவரை தீபாவளி என்ற சொல் ஏதும் கிடையாது. 1842ல் இலங்கையில் வெளியிடப்பட்ட மானிப்பாய் தமிழ் – தமிழ் அகராதியில் இந்தச் சொல் இருக்கிறது. அதற்கு புராண விளக்கங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஆகவே அந்தத் தருணத்தில் இந்த விழா அறிமுகமாகியிருக்கலாம்” என்கிறார் ஆய்வாளர் பொ. வேல்சாமி.

தமிழ் மரபின்படி, நம்முடைய விழாக்கள் அனைத்துமே அறுவடைக்குப் பிந்தைய காலகட்டத்தில்தான் கொண்டாடப்படுவது வழக்கம். 19ஆம் நூற்றாண்டிலும் 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் இந்த விழா பிரபலமாக இருந்ததாகச் சொல்ல முடியாது என்கிறார் பொ. வேல்சாமி. உ.வே. சாமிநாதய்யரின் வாழ்க்கை வரலாற்று நூலான என் சரித்திரத்தில் தீபாவளி குறித்து ஏதும் பெரிதாகக் கிடையாது என்பதையும் பொ. வேல்சாமி சுட்டிக்காட்டுகிறார்.

சமண மதத்தின் கடைசி தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீரர் பாவாபுரி நகரத்தில் அரசனின் அரண்மனையில் தங்கியிருந்தபோது, அங்குள்ள மக்களுக்கு அறவுரை வழங்கினார். இரவு முழுவதும் நடைபெற்ற இந்தச் சொற்பொழிவு விடியற்காலையில் முடிவடைந்தது. இதனால் மக்கள் தங்கள் வீடுகளுக்குச் செல்லாமல் ஆங்காங்கே உறங்கிவிட்டனர். மகாவீரரும் தனது இருக்கையிலேயே வீடுபேறடைந்திருந்தார்.

மகாவீரர் விடியற்காலையில் வீடு பேறு அடைந்ததால்தான் தீபாவளியும் விடியற்காலையில் கொண்டாடப்படுகிறது. சமணம் வீழ்ச்சியடைந்த பிறகு பெருவாரியான சமணர்கள் இந்து மதத்தில் சேர்ந்தனர். சேர்ந்த பிறகும் அவர்கள் தீபாவளியை விடாமல் கொண்டாடி வந்தனர் என்கிறார் மயிலை சீனி வேங்கடசாமி.

பண்பாட்டு ஆய்வாளரான தொ. பரமசிவனும் பழந்தமிழ்நாட்டில் தீபாவளி என்ற பண்டிக்கை இல்லை என்கிறார். ‘சமூக வரலாற்றுப் பார்வையில் திருவிழாக்கள்’ என்ற கட்டுரையில் இது குறித்துப் பேசும் தொ. பரமசிவன், “தமிழ்நாட்டுத் திருவிழாக்களின் பொதுவான கால எல்லை தை மாதம் முதல் ஆடி மாதம் வரையே ஆகும். தமிழகம் வெப்ப மண்டலத்தில் உள்ள நிலப்பகுதியாகும். எனவே வேளாண் தொழில்சார்ந்த பணிகள் இல்லாத காலப்பகுதியே தமிழர்களின் திருவிழாக் காலமாகிறது. தமிழ்நாட்டின் நாட்டார் தெய்வங்கள் இந்தக் கால அளவில்தான் கொண்டாடப்படுகின்றன.

இன்று பரவலாகக் கொண்டாடப்படும் தீபாவளி, விசயநகர மன்னர்களின் காலத்தில் தெலுங்கு பிராமணர் வழியாக தமிழ்நாட்டிற்கு வந்த திருவிழாவாகும். வடநாட்டில் இது சமணசமயத்தைச் சேர்ந்த திருவிழா ஆகிறது” என்கிறார் தொ. பரமசிவன்.

ஆனால், பண்டித அயோத்திதாஸர் தீபாவளி பண்டிகை பௌத்தப் பண்டிகை; அதனை பிராமணர்கள் திருடிக் கொண்டார்கள் என்கிறார்.

Comment here