Spirituality

தாயமங்கலம் முத்துமாரியம்மன்

Rate this post

தாயமங்கலம் முத்துமாரியம்மன் தாயாக நின்று காக்கும் தாயமங்கலம் முத்து மாரியம்மன் பற்றி இன்று அறிந்து வணங்குவோம்

தாயாக நின்று காக்கும் தாயமங்கலம் முத்து மாரியம்மன்! சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே இருக்கிறது தாயமங்கலம் முத்துமாரியம்மன கோயில். இந்தப் பகுதியிலிருக்கும் 22 கிராம மக்களுக்கும், தாயாகவும், மாங்கல்ய பாக்கியம் தந்து மங்கல வரம் அருளும் நாயகியாகவும் திகழ்கின்றாள் முத்துமாரி. இந்த ஊர் ‘தாய்மங்கலம்’ என்றே அழைக்கப்பட்டு, காலப்போக்கில் தாயமங்கலம் என மருவியது.

இங்குள்ள தெய்வம் கன்னித்தெய்வமாக இருப்பதால், திருமண வரம் வேண்டுபவர்கள், தாலிப்பொட்டினை அம்மன் காலடியில் சமர்ப்பித்து, வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

தல வரலாறு:

முற்காலத்தில், ராமநாதபுரத்தைச் சேர்ந்த வணிகர்கள், இப்பகுதியில் விளையும் விளைபொருள்களைக் கொள்முதல் செய்து, மதுரை மாநகருக்குக் கொண்டு போய் விற்பனை செய்வது வழக்கம். அப்படிச் சென்ற வணிகர்களில் ஒரு வியாபாரி மதுரை மீனாட்சியம்மன் மீது மாறாத பக்திகொண்டவர். அவருக்கு நெடுநாள்களாகவே குழந்தை இல்லை. ஒவ்வொரு முறையும் மதுரைக்கு வியாபார நிமித்தமாக செல்லும் அவர், தவறாமல் மீனாட்சியம்மையையும், சொக்கநாதரையும் வழிபட்டு, தனது உள்ளக்குமுறலைக் கொட்டித் தீர்த்துவிட்டு வருவார்.

அப்படி ஒருமுறை, அவர் மதுரையிலிருந்து தனது சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அவர் வந்த வழியில், சிறுமியான ஒரு பெண்குழந்தை பாதை தெரியாமல் அழுதுகொண்டிருந்தது. இதைப் பார்த்த அவருக்கோ மனம் மிகவும் வேதனைப்பட்டது. சிறுமியிடம் ”உன்னுடைய பெயர் என்னம்மா? ஏன் எவரும் இல்லாத இந்தக் காட்டு வழியில் அழுது கொண்டிருக்கிறாய்” என விசாரித்தார்.

தனது பெயர் முத்துமாரி என்றும், தனது தாய் தந்தையிடமிருந்து பிரிந்துவிட்டேன் என்றும் எங்கு போவதென வழிதெரியவில்லை என்றும் கூறி தேம்பினாள். ”கவலைப்படாதே அம்மா! உன்னை நான் பத்திரமாகப் பார்த்துக்கொள்கின்றேன்” எனக்கூறி அந்தச் சிறுமியை தன்னுடன் அழைத்துப்போனார். மதுரை மீனாட்சியே இந்தக் குழந்தையை தனக்குத் தந்ததாக எண்ணினார். ஆனால், அவரது சந்தோஷம் நீண்ட நேரம் நிலைக்கவில்லை.

அவர்கள் சென்ற வழியில் ஆறு ஒன்று குறுக்கிட்டது. பயணக்களைப்பாக இருந்ததால், சிறுமியை கரையில் உட்கார வைத்துவிட்டு ஆற்றில் இறங்கி குளிக்கப் போனார். ஆனால், குளித்து முடித்துவிட்டு கரைக்கு வந்து பார்த்தால், குழந்தையைக் காணவில்லை. இதனால் ரொம்பவே மனம் வெறுத்துப்போன அந்த வணிகர் தன் மனைவியிடம் நடந்ததையெல்லாம் கூறி வருந்தினார். இரவு உணவைகூட சாப்பிடாமல், படுக்கப்போனவர் அப்படியே கண்ணயர்ந்து விட்டார்.

அவரது கனவில், ‘சிறுமியாக வந்தது நான்தான் என்றும் ஊருக்கு அருகாமையிலிருக்கும் கள்ளிக்காட்டில், நான் உறைய இருக்கிறேன் என்றும் கோயில் கட்டி வழிபடுபவர்களுக்கு, வேண்டும் வரங்களை அருளுவேன் என்றும் கூறி மறைந்தாள் முத்துமாரி. படுக்கையில் இருந்து எழுந்த வியாபாரி, தன் மனைவியிடம் எல்லாவற்றையும் கூறினார். மறுநாள் பொழுது விடிந்ததும் முதல் வேலையாக ஆற்று மணலில் அம்மன் சிலையை அமைத்து வழிபடத்தொடங்கினார். இவரைத் தொடர்ந்து ஊர் மக்களும் வழிபட்டனர். நாளடைவில் அந்தப்பகுதி மக்களின் கண்கண்ட தெய்வமானாள் முத்து மாரியம்மன்.

இந்தக் கோயிலில் அம்பாள் நின்ற கோலத்தில், நான்கு கரங்களுடன் கேட்கும் வரங்களை வழங்கும் கற்பக விருட்சமாகத் திகழ்கின்றார். அம்மன் சந்நிதி தவிர சின்னக்கருப்பு, பெரிய கருப்பு, காளி ஆகிய தெய்வங்களுக்கும் தனித்தனி சந்நிதிகள் உள்ளன.

அம்மை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், செவ்வாய் வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோயிலுக்கு வந்து வணங்கி இங்கிருந்து தீர்த்தம் பெற்றுச்சென்றால் நோய் குணமாகும் என்பது இங்குள்ள மக்களின் நம்பிக்கையாக இருக்கிறது. இதுதவிர திருமண வரம், குழந்தைபாக்கியம் வேண்டியும் ஏராளமான பக்தர்கள் வருவதையும், பிரார்த்தனை நிறைவேறி நேர்த்திக்கடன் செலுத்துபவர்களையும் இங்கு காணலாம்.

Comment here