Tamilnadu

பாவை விளக்காய் ஓர் மோகினி

Rate this post

 

நாஞ்சில் நாட்டில் அமைந்துள்ள திருவாங்கூர் சமஸ்தானம் என்று அனைவரும் கேள்விப்பட்டிருப்போம்….
இந்த சமஸ்தானத்தின் மன்னர்களால் பல காலங்களில் நிவந்தம் பெற்றது திருவிதாங்கோடு மகாதேவர் திருக்கோயில்.

“சிவாலய ஓட்டம்” கோயில்கள் வரிசையில் இந்த கோவிலும் உண்டு.
அதாவது நாஞ்சில் நாட்டில் 12 சிவன் கோயில்கள் உள்ளன. இவ்வனைத்து கோயில்களையும், சிவராத்திரியன்று சிவபக்தர்கள் மிதமான ஓட்டத்துடன் ஒவ்வொரு கோயிலையும் அடைந்து கோயிலுக்கு அருகே உள்ள குளத்தில் நீராடி ஈரத்துணியுடன் இறைவனை வழிபடுவார்கள்….

இந்தக் கோவிலில் பல சிறப்புகள் இருந்தாலும் அவற்றில் நம்மை அதிகமாக கவர்வது பாவை விளக்குகளை கொண்ட தூண்கள்….
இன்றைக்கு நாம் தொட்டதற்கெல்லாம் வரி செலுத்த வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாக்கப்பட்டு விட்டோம் என்று மன வருத்தம் இருந்தாலும், அந்தக் காலத்தில் திருவாங்கூர் சமஸ்தான அரசர்கள் முலைவரி (முலைவரி என்பது உறுப்புகளை சம்பந்தப்படுத்திய வ ரி அல்ல, பெண் தொழிலாளர்களுக்கு முலைவரி என்றும் , ஆண் தொழிலாளர்களுக்கு தலை வரி என்றும் விதிக்கப்பட்டுள்ளது – ஆராயவேண்டும்) மற்றும் தலை வரி என தொழிலாளர்கள் மீது விதித்து மக்களை வதைத்துள்ளனர் என்பதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்….

மேலும் தேவதாசிகள் பூஜை செய்யும் உரிமை பெற்ற இந்த திருக்கோவிலில் ஒவ்வொரு தூண்களும் ஒருசில தேவதாசிகள் நிவந்தமாக அளித்திருக்கின்றனர்…

சரி இவையெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும், சுற்றுப் பகுதியில் அமைந்துள்ள தூண்களில் தென்கிழக்குப் பகுதியில் ஒரு அழகிய பாவை , விளக்குடன் அமர்ந்திருக்கிறாள்….

இந்த சிலை செய்வதற்கு மாதிரியாக அமர்ந்த நங்கை நளினங்களைக் கண்டு சிற்பி தன்னை மறந்துவேறு உலகத்திற்கு சென்று இந்த அற்புதச் சிலையை உருவாக்கி இருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது.🥰🥰 மிகச் சரியான கோணத்தில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த நங்கை சாமுத்திரிகா லட்சணதிற்கு உதாரணமாக கூட கொள்ளலாம். குனிந்த நிலையிலும் தாழாத தனங்கள் , சுருங்கிய வயிற்றுடன் சம்மணமிட்டு அமர்ந்திருக்கும் இந்த அழகு ஓவியத்தின் நீண்ட கார்குழல்கள் தரையை நோக்கி பாய்ந்து ஓடுகிறது.

விளக்கைத் தன் தலையிலும், கையிலும் ஏந்தியுள்ள இந்த ஆரணங்குக்கு , அணிகலன்களும் ஏராளம்…. இடுப்பில் மணிமேகலா, கையில் வளவி, சற்று மேலே வங்கி, கழுத்தில் பல ஆபரணங்களையும் அணிந்துள்ளாள். காலிலும் சலங்கை அணிந்திருக்கக் கூடும்.

இத்தகைய மெல்லாளின் தலைக்கு மேலே இருப்பது கற்பனையின் உச்சகட்டத்தை தொடும் யாழி.
நேராக பார்க்கும் பொழுது யானை முக யாழியாக தோன்றினாலும் , இந்த யாழியை சரியான ஒரு வரையறைக்குள் கொண்டு வர இயலவில்லை.
பிடரி கொண்ட சிங்கமுகம், தந்தமும் தும்பிக்கையுமுடைய யானையின் வாயமைப்பு , உடல் முழுவதும் சிங்க தோற்றம் .
வேட்டையாட செல்லும் சிங்கத்தைப் போன்று வால் மேலே தூக்கிக் கொண்டு நிற்க, தன்னுடைய இரண்டு முன்னங்கால்களால் தும்பிக்கையை பிடித்திருப்பது போன்ற வடிவமைப்பு , அந்த தும்பிக்கை இந்த நங்கையின் தலையை தொட்டுக் கொண்டிருக்கிறது…

இங்குள்ள அனைத்து பாவை விளக்குகளும் ஒன்றுக்கொன்று வேறுபட்டது, சிறப்பு வாய்ந்தது, இருந்தாலும் வசீகரிக்கும் அழகு மட்டுமல்ல வியக்க வைக்கும் பணிவும் கொண்ட இந்தப் நங்கை ஒரு பிரத்தியேக படைப்புத்தான்…

 

Comment here