திருப்பூர் மாவட்டம் :  பொங்கலூர் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நடைபெற்ற புகையில்லா தேனீ வளர்ப்பு பயிற்சி முகாம்-விவசாயிகளுடன் அனுபவங்களை பகிர்ந்து கொண்ட வேளாண் கல்லூரி மாணவர்கள்

திருப்பூர் மாவட்டம் பொங்கலூரில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தில் இன்று புகையில்லா தேனீ வளர்ப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த பயிற்சி முகாமில் வேளாண் அறிவியல் நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் இளையராஜா, நூற்பூழுவியல் துணை பேராசிரியர் முனைவர் கலையரசன் ஆகியோர் முகாம் பயிற்சி முகாமில் கலந்து கொண்ட 50க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு புகையில்லாமல் தேனி வளர்ப்பு முறை குறித்து பயிற்சி அளித்தனர். தேன் எடுக்கும் கருவி, தேன் அடையெடுக்கும் கருவி, தேன் எடுக்க பயன்படுத்த வேண்டிய உபகரணங்கள் குறித்தும் விவசாயிகளுக்கு விவரித்தனர். பொதுவாக தேனீ வளர்ப்பில் தேன் எடுக்க தேன் கூட்டில் புகையிட்டு தேனீக்களை மயக்கமடைய செய்து தேன் எடுக்கும் போது தேனீக்கள் உயிரிழக்க வாய்ப்பு உள்ளதாலும், கூடை விட்டு வெளியேற வாய்ப்புள்ளதாகும் தண்ணீர் அல்லது சர்க்கரை கரைசலை பயன்படுத்தி புகையில்லாமல் எப்படி தேன் எடுப்பது என்பது குறித்த பயிற்சி வழங்கப்பட்டது. கூடுதலாக பயிற்சி முகாமிற்கு வந்த விவசாயிகளுக்கு கிராம தங்கள் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக மாணவர்கள் சார்பில் இனக்கவர்ச்சி பொறி வலை, நுண்ணுயிர் உரங்கள், தென்னை டானிக் பயன்பாடு குறித்த கண்காட்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் அறிமுகப்படுத்தியுள்ள தொழில்நுட்பங்கள் குறித்தும் விவசாயிகளிடையே கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் பார்த்தீனிய செடிகளை எப்படி உரமாக்குவது என்பது குறித்தும் வேளாண் கல்லூரி மாணவர்கள் விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனர்.