வானிலை

வெஞ்சினச் சித்திரை – அக்னி நட்சத்திரம்.

Rate this post

நாளை( 4/5/17) முதல்அக்னி நட்சத்திரம் என்கிறது பஞ்சாங்கம்
அக்னி நட்சத்திரம்என்றால் என்ன ?

அப்படி ஒரு நட்சத்திரம் இருக்கிறதா என்றால் அப்படி ஒன்றும் இல்லை
அக்னி நட்சத்திரம். இந்த வார்த்தையை இந்திய வானிலை
ஆராய்ச்சி மையம் ஏற்றுக்கொள்வது இல்லை. எனினும் இது வானியல்
கணக்கு அடிப்படையில் பார்க்கப்படுகிறது.

ஜோதிட முறையிலும், முன்னோர்களின் வானியல்
கணக்கின் படி இந்த அக்னி நட்சத்திரத்தின் காலக்கட்டங்கள்
கணிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டின் அக்னி நட்சத்திர காலம் எனப்படும்
கத்திரி வெயில் நாளைத் தொடங்கி 21-25 நாட்கள் இருக்கும் .

இந்த நாட்கள் சூரியனின் தாக்கம் நேரடியாக இந்தியாவின் மேல்
இருப்பதால் வெப்பம் கடுமையாக இருக்கும் என வானியல்
ஆய்வாளர்களும், ஜோதிட நம்பிக்கையுள்ளவர்களும்
தெரிவித்துள்ளனர்.

சூரிய வெப்பம் மிக அதிகமாக இருக்கும் காலத்தை அக்னி நட்சத்திரம்
என்கிறோம். கார்த்திகை, உத்திரம், உத்திராடம் இந்த மூன்றும்
சூரியனுக்கு உரிய நட்சத்திரங்கள்.

‘அக்னிர்ந: பாது க்ருத்திகா’ என்கிறது வேதம். அதாவது, கார்த்திகை
நட்சத்திரத்திற்கு உரிய தேவதை ‘அக்னி’. அதனால் இந்த
நட்சத்திரத்தில் சூரியன் சஞ்சரிக்கும் காலம் அக்னி நட்சத்திரம் என்று
பெயர் பெற்றது. கார்த்திகை நட்சத்திரம் துவங்குவதற்கு இரண்டு
பாதங்கள் முன்பாக அதாவது, பரணி நட்சத்திரம் மூன்றாம் பாதத்திற்குள்
சூரியன் நுழையும் காலம் முதல் கார்த்திகை முடிந்து இரண்டு
பாதம்வரை அதாவது ரோகிணி நட்சத்திரம் இரண்டாம் பாதம்வரை
சூரியன் சஞ்சரிக்கும் கால அளவினை அக்னி நட்சத்திர காலம்
என்று அழைப்பார்கள்.

இந்த சமயத்தில் சூரிய வெப்பம் அதிகமாக இருக்கும். பேச்சு வழக்கில்
கத்திரி வெயில் வாட்டுகிறது என்று சொல்வதைக் கேட்டிருப்போம்.
வெயில் அதிகமாக இருக்கும் என்பதால்தான் இந்த நேரத்தில்
பள்ளிகளுக்குக் கூட விடுமுறை அளிக்கிறார்கள்.
வெப்பத்தின் தாக்கத்தால் உறவினர்களுக்கு சிரமம் உண்டாகலாம் என்ற ஒரு காரணத்தினால்தான் அந்நாட்களில் சுபநிகழ்ச்சிகள் செய்வதை
பெரியவர்கள் தவிர்த்து வந்தார்களே அன்றி வேறு எந்த காரணமும் இல்லை.

கத்திரி என்பது வேனில் காலத்துக் கடுங்கோடை!
. கத்திரி என்பது தமிழ் மாதத் தேதி தொடர்பாக அமையும் காலப் பகுதி. அக்னி நட்சத்திரம் என்பது சூரியனுடைய சஞ்சாரம் தொடர்பாக
அமையும் காலப்பகுதியாகும்.

இவ்விரண்டும் பெரும்பாலும் சித்திரை மாத இறுதி பத்து
நாட்களும் வைகாசி மாத முதல் பத்து நாட்களும் இணைந்தபகுதியாகும்.
வள்ளுவர் கூட இத்தகைய கடும் வெய்யிலைக் குறிப்பிடுகிறார்

என்பில் அதனை வெயில்போலக் காயுமே
அன்பில் அதனை அறம்

அன்பில்லாதர்களை அறம் எனும் சக்தி
என்பில்லாத உயிர்களை வெய்யில் வருத்துவதைப்போல் வருத்தும்
என்கிறார் !

வெய்யில் மட்டும் இல்லை அனைத்து துயரங்களிலிருந்து
விடுபட செய்க அன்பு ! செய்க அன்பு !

-அண்ணாமலை சுகுமாரன்

Comment here