Spirituality

ஸ்ரீ நடராஜ பெருமானின் தோற்ற விளக்கம்

Rate this post

 

சிவ வடிவங்களிலே முக்கியத்துவம் வாய்ந்த தத்துவ விளக்கத்தை காட்டுவது நடராஜ வடிவம்,தத்துவார்த்த சமயங்களில் சைவமே முதன்மையானது.

நடராஜரின் தோற்றத்தில் பஞ்ச பூதங்கள், அஷ்ட மூர்த்திகள், அனைத்து தெய்வ அம்சம் அண்ட சராசரங்கள், தெய்வ தத்துவங்களும் அடக்கம்.

திருமுகம்:

எல்லையற்ற அழகும் இனிய தண்ணளித்திறனும் கொண்டு தலைமைப்பாட்டினைக் குறிக்கும்.

பனித்தசடை:

சடை சிவநெறிக்குரிய தவ ஒழுக்கச் சிறப்பையும் காட்டுகின்றது.ஞானத்தை உணர்த்தி உயிர்களை ஞானமார்க்கத்தில் செல்ல போதனை செய்வது

கங்கை:

இறைவன் பேராற்றலையும் (முடிவிலாற்றலுடைமை ) வேகங்கெடுத்தாளும் வித்தகத்தையும் விளக்குவது.

பிறைசூடுதல்:

சரண் என அடைந்தவரைத் தாங்கித் தாழ்வு நீக்கிப் பாதுகாக்கும் வள்ளல்தன்மை. ஆன்மாக்களின் வினைகளை போக்கி அபயம் அளிக்கின்றது.

குனித்த புருவம்:

பரதக் கலையின் மெய்ப்பாடு உணர்த்துவது. தன்பாற்போந்து குறையிரந்து முறையிடும் அடியார்களின் விண்ணப்பங்களைக் கூர்ந்து நோக்கி ஊன்றிக் கேட்டருளும் கருணைத் திறத்தினைக் காட்டுவது.

குமிண்சிரிப்பு:

அடைக்கலம் புகுந்தோரை, என்று வந்தாய் என்று அருளோடு வரவேற்று, பிழைபொறுத்து வாழ்வளித்து மகிழ்விக்கும் மாட்சியைக் குறிப்பது.

பவளமேனி:

இறைவன் தீ வண்ணத்தான் நெருப்பை யொத்தவன். நெருப்புத் தன்பால் எய்தும் பொருள்களை எல்லாம் தூய்மையாக்கிப் புனிதம் அடையச் செய்வது போல, இறைவனும் தன் அடியார்களின் மாசுக்களை நீக்கி – மலநீக்கி மாண்புறச் செய்யும் அருள் திறத்தைக் குறிப்பது.

பால்வெண்ணீறு:

எப்பொருளும் இறுதியில் எய்தும் நிலை சாம்பல்தானே! நீறு மற்றொன்றாக மாறி அழியாது. ஆகவே பால்வெண்ணீறு தூய இயல்பினையும் அழியாத் தன்மையையும் குறிக்கின்றது. தொழுதெழுவார் வினைவளம் நீறெழ இறைவன் நீறு அணிகின்றார். மேலும் செந்நிற மேனியில் வெண்ணீறு அணிந்த கோலம் எவர் நெஞ்சையும் கவர்ந்து பிணிக்கும் பான்மையுடையது.

நெற்றிக்கண்:

மேல் நோக்கிய நிலையில் நிமிர்ந்து நிற்கும் நெற்றிக்கண் சிவபிரானின் தனிப்பெரும் முதன்மையை உணர்த்துவது. இது சிவபெருமானுக்குரிய சிறப்பு அடையாளம்.

நீலகண்டம்:

ஒருவரும் உண்ணாத நஞ்சு உண்டும் இருந்தருள் செய்யும் இறைவனின் நயத்தக்க நாகரிக நலனையும் பெருங்கருணைத் திறத்தையும் காட்டுவது.

உடுக்கை:

தமருகம் எனப்படும் உடுக்கை, இறைவன் உலகப் பொருட்களைப் படைக்கும் சிருஷ்டியைக் குறிப்பது. பரநாதத்தைப் பரமன் தோற்றுவிக்கும் பான்மையை இது காட்டுகிறது.

நெருப்பு:

இறைவன் இடக்கரத்தில் ஏந்தியுள்ள நெருப்பு உயிர்களின் பிறவித் தளைகளின் இணைப்பினை நீக்கும் பொருட்டுச் செய்யும் சம்ஹாரத் தொழிலைக் காட்டுவது.

அபயகரம்:

அமைந்த கை காத்தல் தொழிலைக் குறிப்பது. அடியார்களுக்கு ஆறுதல் கூறித் தேற்றும் நிலை இது.

வீசியகரம்:

யானையின் துதிக்கையைப் போன்று திகழும் இவ்விடக்கை கஜஹஸ்தம் எனப்படும். இக்கையின் விரல், தூக்கிய திருவடியைக் காட்டுகின்றது. திருவடியை நம்பித் தொழுக. இது உம்மை ஈடேற்றும் என்பது குறிப்பு.

எடுத்த திருவடி:

இறைவனின் இடது திருவடி இது; அம்பிகைக்கு உரியது. துன்பக் கடலிடைத் தோணித் தொழில் பூண்டு தொண்டர் தம்மை இன்பக் கரை முகந்து ஏற்றும் திறத்தைக் காட்டுவது.

ஊன்றிய திருவடி:

இறைவனின் வலது திருப்பாதம் இது. முயலகனை மிதித்து அவன் மீது ஊன்றிய நிலை மலத்தை முழுதாக அழித்து விடாமலும், மலத்தால் உயிர்கள் பெரிதும் வருந்தாமலும், வினைப் பயன்களை உயிர்கள் நுகர இறைவன் இயற்றும் மறைத்தல் தொழிலைக் குறிப்பது.

முயலகன்:

இது ஆணவ மலத்தைக் குறிப்பது. முத்தி நிலையில் உயிர்கள் மாட்டு ஆணவமலம் அடங்கிக் கிடப்பதைப் போன்று. முயலகனும் இறைவன் திருவடியின் கீழ், மாயாதே தன் சத்தி மாய்ந்து கிடக்கின்றான்.

தெற்குநோக்குதல்:

ஆடவல்லான் தெற்கு நோக்கியே ஆடுகின்றார். யமபயத்தை நீக்கியருளி நம்மை உய்விப்பதற்காக தென்றற்காற்றின் மீதும் தென் தமிழின் மீதும் உள்ள விருப்பாலும் தெற்கு நோக்கி இறைவன் ஆடுகின்றார் எனக் கூறுகிறார் திருவிளையாடற் புராண ஆசிரியர் பரஞ்சோதி முனிவர்.

திருவாசியால் குறிக்கப்படும் இப்பிரபஞ்சத்துள்ளே அனைத்து இயக்கங்களுக்கு அவரது தாண்டவமே மூலமாக அமைந்துள்ளது.
மாயையின் தளையிலிருந்து எண்ணிறந்த உயிர்களை விடுவிப்பதையே அவரது தாண்டவம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

சிதம்பரம் விராடபுருஷன் என்னும் அண்டசராசரங்கள் அனைத்தின் வடிவான இறைவனுக்கு இருதயத் தானமாகும். அண்டத்தில் உள்ளதுவே பிண்டம் ஆகிய நமது உடலிலும் உண்டு.

நமது உடலில் உள்ள சிதம்பரத்தை விளக்குவது உபநிடதங்களில் உள்ள தஹரவித்தை. இந்த உடலில் எமது இருதயம் ( இரத்தத்தை சுற்றோட்டம் செய்யும் இருதயம் அல்ல) நடு மார்பில் சற்றே வலப்புறமாக உள்ளது. பார்வைக்கும் ஆராய்ச்சிகளுக்கும் எட்டாதது. இதனுள் உள்ள வெளி தஹராகாசம் என்று வேத உபநிடதங்களும் வியோமம் என்று ஆகமங்களும் சிற்றம்பலம் என்று திருமுறைகளும் முழங்குகின்ற சிதம்பரம். இது பராசக்தி. வெளியில் உள்ளது போலச் சட ஆகாசம் அல்ல.
அண்டசராசரத்தின் இருதயத்தானமான சிதம்பரம் நமது இதயத்தானமாகும் இதயத்தில் தான் அவரது நடனம் திகழ்கிறது.

ஆனந்த நடராச மூர்த்தியின் மூர்த்தம் ஸ்ரீ சக்கர வடிவிலும், ஓம் பிரணவத்தையும், நமசிவாய என்னும் பஞ்சாட்சர மந்திரத்தையும் விளக்கும் விதமாக அமைந்துள்ளது.

1.வலக்கரத்திலுள்ள உடுக்கை
படைத்தல்தொழிலையும்,

2.அபய கரம் – காத்தல் தொழிலையும்,

3.இடக்கரத்தில் மேல் உள்ள அக்னி அழித்தல் தொழிலையும்,

4.முயலகனின் மேல் ஊன்றிய பாதம் – திரோதம் எனப்படும் மறைத்தல் தொழிலையும் ,

5.தூக்கிய குஞ்சிதபாதம் முக்திக்கு காரணமாகி அருளல் தொழிலை குறிக்கின்றது.

”தோற்றம் துடியதனில் தோயும் திதி அமைப்பு
சாற்றிடும் அங்கையிலே சங்காரம்- ஊற்றமாய்
ஊன்று மலர்பதத்தே உற்ற திரோதன் முத்தி
நான்ற மலர் பதத்தே நாடு”

திருவடிவே பஞ்ட்சாட்சரம் திருப்பாதம் – ந ,
உதரம் -ம ,
தோள் – சி,
முகம் – வ ,
திருமுடி -ய எனலாம்.

உடுக்கை – சி,
வீசிய கரம் -வ
அபய கரம் – ய ,
அக்னி – ந,
முயலகன் – ம
எனலாம்.

வலப்பக்கம் – சிவாய ,
இடப்பக்கம் – நம எனலாம்

திருவாசி- ஓம் என்னும் பிரணவம். பராசக்தி

சடைமுடி- ஞானம். சடை விரித்தாடுவது ஞானத்தை வழங்குவதற்காக.

வீசிய கரம் மாயையை உதறித்தள்ளுவதையும் ஊன்றிய பாதம் மலத்தினை நீக்குவதையும், தூக்கிய திருவடி அருளை அளித்து ஆன்மாக்களை ஆனந்தக்கடலில் அழுத்துவதையும் குறிக்கும்.

பஞ்ச பூதங்களை குறிக்கும் வண்ணம் ஐயனின் சிலை வடிக்கப்படுகின்றது. பஞ்ச பூதத் தத்துவராகவும் ஐயன் விளங்குகின்றார். மூக்கு காற்றையும் , முகம் பூமியையும், நெற்றிக்கண் அக்னியையும், முகத்தின் காந்தி ஆகாயத்தையும், விரி சடை நீரையும் குறிக்கின்றது.

1. இளம் பிறை : தக்கன் சாபம், காம தகனம், உயிர் வளர்ச்சி, ஒளஸதி நாதன்.

2. மயிலிறகு : கிராதார்ஜுனம், பார்த்தனுக்கு அருளிய பரம மூர்த்தி.

3. கொக்கிறகு : குண்டாசுரவதம், அரசத்தன்மை.

4.இடக்கண் : சந்திர மண்டலம், இடநாடி, இச்சா சக்தி.

5.வலக்கண் : சூரிய மண்டலம், பிங்கலை நாடி, ஞான சக்தி.

6. நுதல் விழி : அக்னி அம்சம், சுழுமுணை நாடி, காம தகனம், கிரியா சக்தி.

7.திருநீறு :

பிருத்வி தன்மை,
லய சிருஷ்டி, திரிபுரமெரித்தல், திரி சத்யம், சுடலையாடல்.

8. பிரம்ம கபாலம்:
பிரம்மச் சிரச்சேதம், பிக்ஷாடணர்.

9. ஊமத்த மலர் : அஷ்ட மூர்த்தம்.

10.கங்கை : ஜலமய மூர்த்தம், கங்காதரர், பாவ விமோசனம்.

11.நுண் சிகை : தக்ஷிணா மூர்த்தி, ஞானம்.

12.கொன்றை மலர்: கற்பக வல்லி பிரணவ அதிதேவதை

13. குழை – இடது காது, சக்தி அம்சம், அர்த்தநாரீஸ்வரர், பிரக்ருதி.

14:தோடு – வலது காது, சிவ அம்சம்.

15. நீலகண்டம் – அமிர்தம் கடைதல்,சமன்பாட்டு நிலை, தீதகற்றல், அமரத்துவம், தியாகராஜ மூர்த்தம்.

16.தோள்கள் – திரிவிக்ரம நிலை, திசைகள், காற்று.

17: துடி(உடுக்கை ) : தோற்றம், ஆக்கல் தொழில், துடியாடல்.

18. தீயகல் : சம்ஹாரம், அழித்தல் தொழில், தீ-எரியாடல்.

19.திருவாசி சுடர் – த்வனி, பீஜ மந்திரங்கள்

20.அபய கரம் – காத்தல் தொழில், சுப மூர்த்தம். (see it is glitering)

21.அரவணி – நாக சக்தி, ஜீவாத்மா, குண்டலிணி.

22.ஸ்தித பாதம் – ஊன்றிய திருவடி, காலாந்தகர், மறைத்தல் தொழில், பதி நிலை, நிலம், வினைப்பயன் ஊட்டல்.

23.முயலகன் – கோயிற் புராணம், தாருகா வனம், மும்மலம் (ஆணவம், கன்மம், மாயை)

24.கமல பீடம் – தகராலயம், இதய கமலம், சகஸ்ராரம்.

25. குஞ்சித பாதம் : சிதம்பர மகாத்மியம், அருளல் தொழில். ஆன்மாக்களுக்கு முக்தி இன்பத்தை அருளுவதாகும்.

26.சிலம்பு – வேதங்கள் (இடது), கேளா ஒலி

27. கழல் – வீரட்டம், பிறப்பறுத்தல், பதிநிலை, புருடன்.

28.வீர கண்டாமணி – வீரம், திருவுரு, வெற்றித் திறன்.

29.ஊமத்தம் பூ – விருப்பு வெறுப்பற்ற தன்மையை குறிப்பதாகும்.

30.இறைவன் முக்கண்களாக சூரியன், சந்திரன், அக்கினி ஆகிய முச்சுடர்களைக் கொண்டு விஸ்வரூபனாக எங்கும் நிறைந்து அணுவினும் சிறியனாக நுட்பமுடையவராவார், அது மட்டுமின்றி இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞானசக்தி ஆகிய முச்சக்திகளையும் கொண்டு விளங்குகிறார்.

திருச்சிற்றம்பலம்

நான்காம் திருமுறை

கோவில்

பாடல் எண் : 4

குனித்த புருவமுங் கொவ்வைச்செவ் வாயிற் குமிண்சிரிப்பும்
பனித்த சடையும் பவளம்போன் மேனியிற் பால்வெண்ணீறும்
இனித்த முடைய வெடுத்தபொற் பாதமுங் காணப்பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவ தேயிந்த மாநிலத்தே.

பாடல் பொருள்
வளைந்த புருவங்களையும் , கொவ்வைக்கனி போன்ற சிவந்த வாயிலே முகிழ்க்கும் புன்னகையையும் , கங்கையால் ஈரமான சடைமுடியையும் , பவளம் போன்ற சிவந்த திருமேனியில் அணிந்த பால் போன்று வெண்மையான வெண்ணீற்றுப் பூச்சினையும் , பேரின்பம் நல்கும் தூக்கிய திருவடிகளையும் காணும் வாய்ப்பினைப் பெறுவதாம்பட்சத்தில் இவ்வுலகில் மனிதராய்ப் பிறப்பெடுத்தலும் விரும்பத்தக்க செயலாகும் .

திருச்சிற்றம்பலம்

Comment here