Spirituality

திருக்கன்றாப்பூர் மாதினையோர் கூறுகந்தாய் மறைகொள் நாவா (ஆறாம் திருமுறை )

Rate this post

சிவ சிவ

திருநாவுக்கரசர் நாயனார் தேவாரம் தொடர் முற்றோதல்.

*திருக்கன்றாப்பூர்*

மாதினையோர் கூறுகந்தாய் மறைகொள் நாவா (ஆறாம் திருமுறை )

பாடல் எண் : 1 விளக்கம்

பார்வதி பாகனே! வேதம் ஓதும் நாவனே! பிறை சூடியவனே! தேவர்கள் தலைவனே! என்று புகழ்ந்து நாடோறும் மனம் இளகி உருகி, வஞ்சகமில்லாத அன்பு மிகுந்து, முப்பொழுதும் வாசனை மிக்க நீரும் பூவும் கொண்டு மறவாது வாழ்த்திப்புகழ்ந்து அன்போடு தொழும் அன்பருடைய மனத்தினுள்ளே கன்றாப்பூரில் நடப்பட்டமுளை வடிவினனாய் உள்ள பெருமானைக் காணலாம்.

பாடல் எண் : 2 விளக்கம்

பொழுது விடிந்த அளவில் திருநீற்றை மெய்யில் பூசி, வெளுத்த கீளொடு கூடிய கோவணத்தை அணிந்து, கீழ்மையை உடைய வல்வினையால் ஏற்பட்ட நோயினைத் தீர்ப்பவனே! சென்று சேர வேண்டிய நல்லகதிக்கு வழிகாட்டும் சிவனே! உடுக்கை போன்ற இடையை உடைய பார்வதி பாகனே! சுடுகாட்டில் கூத்து நிகழ்த்தும் ஒளி உருவனே! என்று நறுமண மலர்களைத் தூவி வழிபடும் அடியவர்கள் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணலாம்.

பாடல் எண் : 3 விளக்கம்

யாவரேயாயினும் நெற்றியில் திருநீறு அணிந்து, உருத்திராக்கம் பூண்டு இருப்பவரைக் கண்டால், திருவேடத்தின் பெருமையை நினைத்து, வெறுப்பில்லாமல், அவர்களைக் கண்ட போதே விரும்பி அடிமைத் திறத்தை நினைத்து, விரும்பிநோக்கி `இவர்கள் நம்மால் வழிபடத்தக்க தேவரா என உள்ளத்தை இருவகையாகச் செலுத்தாமல் இறைவனிடத்துச் செய்யும் செயல்களையே அடியவரிடத்தும் விரும்பிச் செய்து, அங்ஙனம் செய்யும்பொழுது மனத்தில் இருதிறக் கருத்து நிகழாத வகையில் இறைவனையும் அடியவரையும் ஒரே நிலையில் மனத்துக்கொண்டு தொழும், அடியவர் உள்ளத்தில் கன்றாப்பூர் நடுதறியைக் காணலாம்.

பாடல் எண் : 4 விளக்கம்

யாம் பொருள் இல்லாதேம் இக்காலம் நம்மால் ஒன்றும் இயலாத காலம்` என்று மனத்தில் தளர்ச்சியுறாமல், பிச்சை ஏற்கவருவோர் எல்லோருக்கும் பிச்சையிட்டு, நல்லவழியில் பிறழாமல் நின்று, இறைவன் பெருங்கருணையாளன் ஆதலை அறியும் அறிவு மிக்கு, பயன் கருதாமல் செய்யும் அன்பை மேற்கொண்டு, பொய்யை விடுத்து, மெய்யுணர்வு விளங்கப் பெறாத தேவர்களைக் காக்க விடம் உண்ட பெருமான் திருவடிக்கண் மனத்தை வைத்துக் கலக்கம் இன்றித் தொழும் அடியவர் உள்ளத்தினுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணலாம்.

பாடல் எண் : 5. விளக்கம்

மூத்தோனே! விடம் உண்ட நீலகண்டா! சந்திர சடாதரனே! உமைபாகனே! உலகத்தை வடிவாக உடையவனே! தூண்டவேண்டாத ஒளிவிளக்கே! அடியவர்கள் உறவினனே! என்று பலகாலம் கூப்பிட்டு, ஐம்புலன்களையும் உள்ளே அடக்கி, வேற்றுப் பற்றின்றித் தியானித்து, உள்ளத்தோடு தொழும் அடியவர் உள்ளத்துள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணலாம்.

பாடல் எண் : 6 விளக்கம்

செந்நீர் வெண்ணீர் நிணம் முதலியவற்றின் கசிவோடு இணைக்கப்பட்டுப் புழுக்களை உள்ளே வைத்துத் தோலால் மூடப்பட்ட இழிந்த இந்தப் புலால் மயமான உடம்பு நிலையாக இருக்கும் என்று உறுதியாக எண்ணிப் பசிப் பிணியையும் பொறுத்துக் கொண்டு பொருளைச் சம்பாதித்து, அப்பொருளால் ஏழைகள் பலருக்கும் உதவுதலைவிடுத்து, பவளம்போன்ற வாயினை உடைய பெண்களிடம் வசப்பட்டு அழிவதன் முன்னம் தேவாதி தேவனுடைய திருநாமமாகிய திருவைந்தெழுத்தைச் சொல்லி உருக்கத்தோடு தொழும் அடியவருடைய நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணலாம்.

பாடல் எண் : 7 விளக்கம்

கோழையினால் குரல்வளை அடைக்கப்பட்டு, உடம்பைவிட்டு உயிர்போன அளவிலேயே, வீட்டிலுள்ளவர்கள் ஒன்று சேர்ந்து, கண்களை மையினால் எழுதி, மாலை சூட்டிப் பிணத்தைச் சுடுகாட்டில் இடுவதன் முன்பு, பிறைசூடும் பெருமானுக்கு அடியவராகி, அன்புமிக்கு மனம் குழைந்து மெய் மயிர் சிலிர்த்து, எம்பெருமான் திருவடிகளைக் கைகளால் தொழும் அடியவர் உள்ளத்தினுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே.

பாடல் எண் : 08.விளக்கம்

மன உறுதியால் ஐம்பொறிகளையும் காவலில் வைத்து மனம் கலங்காமல், சூக்கும ஐந்தெழுத்தாகிய மானதமாகக் கணிக்கப்படும் மந்திரத்தைத் தியானித்தலால் மயக்கத்தைப் போக்கித் துன்பமாகிய வெள்ளம் நிறைந்த வாழ்க்கையாகிய கடலைக் கடந்து, முத்திநிலையாகிய கரைக்கு ஏறும் எண்ணமே மிக்கு, `சூரியன் ஒருவனுடைய பற்களை நீக்கிய பாவநாசனே! மேம்பட்ட ஒளியே! என்று துதித்து, நாள்தோறும் விரும்பி மிகத்தொழும் அடியவர் உள்ளத்தினுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணலாம்.

பாடல் எண் : 09 விளக்கம்

* * *

பாடல் எண் : 10. விளக்கம்.

வளைந்த வில்லால் முப்புரங்களை எரித்தவனே! யமனை உதைத்த, ஒலிக்கும் கழல் அணிந்த சிவந்த அடியனே! அருச்சுனனுக்குப் பாசுபதப்படை ஈந்தவனே! இராவணன் மலையைப் பெயர்க்க. வெகுண்டு, விரலை ஊன்றி, அவன் பத்துத் தலைகளும் தாள்களும் தோள்களும் வலிமை அழியச் செய்து, பின், அவனுக்கு அருள் செய்த பெருமானே! என்று உருகி மிகத் தொழும் அடியவர் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணலாம்.

🙏🏻திருச்சிற்றம்பலம்🙏🏻

Comment here