வரலாறு

ராமனின் பெயரோ, சீதையின் பெயரோ வைக்கவில்லை! ஆனால் அனுமன் பெயர் கொண்டு ஒரு காண்டமே உள்ளது

Rate this post

இராமாயணத்தில், எந்தக் காண்டத்துக்கும், ராமனின் பெயரோ, சீதையின் பெயரோ வைக்கவில்லை! ஆனால் அனுமன் பெயர் கொண்டு ஒரு காண்டமே உள்ளது ! அது, சுந்தர காண்டம்!

இது தான் தொண்டருக்குக் கிட்டிய பெருமை!

அனுமனுக்குச் சுந்தரன் என்ற பெயர் உண்டு! அவன் பெயர் தான் இங்கு வைக்கப்பட்டுள்ளது!

அனுமனை விரும்பாதார் தான் யார்? வடை மாலை, வெற்றிலை மாலை, ராமஜெயம் எழுதப்பட்ட மாலை – இப்படி மாலை மரியாதைகள் தான் என்ன? சிறிய திருவடி, மாருதி, ஆஞ்சனேயன், ராம தூதன், சொல்லின் செல்வன், சமய சஞ்சீவி என்ற எத்தனை பட்டப் பெயர்கள் இவனுக்கு? மனத்துக்கினியான் ராமனுக்குக் கூட இவ்வளவு சிறப்புகள் கொடுத்திருக்கிறார்களா?

· சீ்தையின் உயிரைக் காத்தான் – விரக்தி/தற்கொலையில் இருந்து!

· இலக்குவன் உயிரைக் காத்தான் – கொடிய நாக பாசத்தில் இருந்து!

· பரதன் உயிரைக் காத்தான் – தீ மூட்டி மாய்த்துக் கொள்வதில் இருந்து!

· இப்படி எல்லோரையும் காத்து, ராமனையே காத்தான்! உயிர் காப்பான் தோழன் அல்லவா?

அனுமன் சிறந்த அமைச்சன், தொண்டன் மட்டும் அல்ல! மிகப் பெரிய இசைக் கலைஞன். வீணை வித்வான்! ‘மல்யுத்த வானரத்துக்கா வீணை பிடிக்கத் தெரியும்’, என்று எண்ணி, நாரத மகரிஷியே அவனிடம் போட்டி போட்டுத் தோற்றார். அதனால் தான் ஸ்ரீராமாநுஜர், ‘உருவம் கண்டு அடியவரை எடை போடக் கூடாது’ என்பதை மிக உறுதியாக விதித்தார். இப்பேர்பட்ட அனுமன் பிறந்த இடம்: திருமலை திருப்பதி, அஞ்சனாத்ரி மலை!

இப்படிப்பட்ட அனுமனை, கவிச் சக்ரவர்த்தி கம்பரின் அழகுத் தமிழ்ப் பாடல் ஒன்றினால் துதி செய்யலாம் இன்று!

அஞ்சிலே ஒன்று பெற்றான், அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்று ஆறாக, ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கு கண்டு,அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான், அவன் எம்மை அளித்துக் காப்பான்!

இது பஞ்ச பூதப் பாடல்.

அஞ்சிலே ஒன்று பெற்றான் = அஞ்சிலே ஒன்று காற்று; வாயு! அவன் புதல்வன், வாயு புத்திரன் என்று அழைக்கப்படும் அனுமன்.

அஞ்சிலே ஒன்றைத் தாவி = அஞ்சிலே ஒன்று நீர்; கடல்! அந்தக் கடலைத் தாண்டிச் சென்று அன்னையைச் சேவித்தவன் அனுமன்.

அஞ்சிலே ஒன்று ஆறாக = அஞ்சிலே ஒன்று ஆகாயம்; அந்த ஆகாயத்தின் வழியாகப் பறந்தான்! யாருக்காக? ஆரியர்க்காக ஏகி = அருமையான இயல்பு கொண்டவன் இராமன்; அவனுக்காக ஏகினான்.

அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கு = அஞ்சி்லே ஒன்று பூமி்; மண்! அந்த மண்ணிலே தோன்றிய அணங்கு (பெண்) சீதை!

கண்டு அயலார் ஊரில் = அவளைக் கண்டு, அயலார் ஊரான இலங்கை நகரத்தில்

அஞ்சிலே ஒன்றை வைத்தான் = அஞ்சி்லே ஒன்று நெருப்பு; தீ! அந்தத் தீயை அவனுக்கு வைக்கப் பார்த்தனர்; அதை அவர்களுக்கே வைத்தான் அனுமன்.

அவன் எம்மை அளித்துக் காப்பான் = அந்த அனுமன், பஞ்ச பூதங்களால் ஆன என்னையே, எனக்கு அளித்துக் காப்பான்!

அது எப்படி என்னையே எனக்கு அளிப்பான்?
அந்தராத்மா என்கிற நான்; அங்கு இதய கமல வாசம் செய்பவன் இறைவன்; அனுமனின் இதய கமலத்தில் இராமன்.
இப்படி ஆழ் மனதில் புதைந்துள்ள இறைவனையே நமக்குக் கொண்டு வந்து அளிப்பவன் தான் அனுமன். என்னை எனக்கு அளிப்பான்!

Comment here