தாய்லாந்து மற்றும் இலங்கையிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.2 கோடி மதிப்புடைய 4 கிலோ தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல். 2 இலங்கை பயணிகள் உட்பட 4 கடத்தல் பயணிகளை சுங்க அதிகாரிகள் கைது செய்து விசாரணை.

சென்னை விமான நிலையத்தில் கடத்தல் தங்கத்தை, சுங்கச் சோதனை இல்லாமல் வெளியில் எடுத்து செல்வதற்காக கடத்தல் ஆசாமிக்கு துணை போன, கறுப்பு ஆடான, ஏர் இந்தியா விமான நிறுவன ஊழியர் ஒருவரையும் சுங்கத்துறை கைது செய்து விசாரணை.

தாய்லாந்து மற்றும் இலங்கை நாடுகளில் இருந்து பெருமளவு கடத்தல் தங்கம், சென்னைக்கு வருவதாக சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் தனிப்படை அமைத்து, இலங்கை மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் அனைத்து விமான பயணிகளையும் தீவிரமாக கண்காணித்தனர். சந்தேகப்படும் பயணிகளின் நிறுத்தி சோதனை இட்டனர்.

அப்போது தாய்லாந்து நாட்டிலிருந்து சென்னை வந்த தாய் ஏர்லைன்ஸ் விமான பயணிகளை சோதனையிட்டனர். சென்னையைச் சேர்ந்த 2 பயணிகள் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவர்கள் இருவரையும் நிறுத்தி,அவர்கள் உடைமைகளையும், பயணிகளையும் சோதனையிட்ட போது, அவர்கள் உடைமைகளிலும் உள்ளாடைகளுக்கும்,மறைத்து வைத்திருந்த தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்தனர். இதை அடுத்து அந்த 2 பயணிகளையும் கைது செய்து, தங்கத்தையும் பறிமுதல் செய்தனர்.

இதற்கு இடையே இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து சென்னை வந்த, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது இலங்கையைச் சேர்ந்த 2 ஆண் பயணிகள் சுற்றுலா விசாவில் சென்னைக்கு வந்திருந்தனர். அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவர்களை தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை இட்டபோது, அவர்களுடைய உள்ளாடைகளுக்குள் வைத்திருந்த பார்சல்களில் தங்கப் பசை இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இதை அடுத்து அவர்கள் இருவரையும் சுங்க அதிகாரிகள் கைது செய்தனர்.

சுங்க அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில், தாய்லாந்து மற்றும் இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட 1.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு இரண்டு இலங்கை பயணிகள் உட்பட 4 பேரை கைது செய்தனர்.

இந்த நிலையில் சென்னை சர்வதேச விமான நிலையத்தின் புறப்பாடு பகுதியில் இருந்து, வெளியேற முயன்ற ஏர் இந்தியா ஊழியர் ஒருவர் மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி சோதனை இட்டனர். அப்போது அவருடைய ஆடைக்கள் மற்றும் கைப்பைக்குள் பெருமளவு தங்க கட்டிகள் இருந்ததை கண்டுபிடித்தனர். அவரிடமிருந்து சுமார் 2.5 கிலோ தங்கத்தை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். விசாரணையில் வெளிநாட்டில் இருந்து கடத்தி வந்த கடத்தல் தங்கத்தை, கடத்தல் ஆசாமிகளுக்கு உதவும் நோக்கத்தில், அவர்களிடமிருந்து பெற்ற இந்த தங்க கட்டிகளுடன், புறப்பாடு பகுதிக்கு சென்று, அங்கிருந்து இவர் வெளியேற முயன்றது தெரிய வந்தது. இதை அடுத்து சுங்க அதிகாரிகள் ஏர் இந்தியா ஊழியரை கைது செய்து, எந்த விமானத்தில் வந்த கடத்தல் ஆசாமியிடம் இருந்து இந்த தங்கத்தை பெற்றார்? இவர் எவ்வளவு நாளாக இதை போல் தடத்தில் ஆசாமிக்கு துணையாக செயல்பட்டு கறுப்பு ஆடாக சென்னை விமான நிலையத்தில் பணியாற்றுகிறார்? என்று மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில், ரூ.2 கோடி மதிப்புடைய 4 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதோடு, கடத்தல் ஆசாமிக்கு துணை போன ஏர் இந்தியா ஊழியர் ஒருவர் உட்பட 5 பேரை சுங்கத்துறையினர் கைது செய்து மேலும் விசாரணை நடத்துகின்றனர்.