பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு நடிகர் விஜய் பரிசுத்தொகை வழங்கும் நிகழ்ச்சிக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து மாணவர்களை அழைத்துச்செல்லாததால் ஏமாற்றம் அடைந்திருப்பதாக மாணவி வேதனை தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் இருந்து நடந்து முடிந்த 10ம் வகுப்பு ,12 ம் வகுப்பு தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் நிகழ்ச்சி இன்று சென்னையில் நீலாங்கரையில் உள்ள தனியார் மகாலில் நடைபெற்றது.

இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் இருந்தும் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களின் தகவல்கள் சேமிக்கப்பட்டு , அவர்களுக்கு அடையாள அட்டை வழங்குவதற்காக புகைப்படம் வாங்கியுள்ளனர். மேலும் அவர்களை அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகளும் ஒரு சில தினங்களுக்கு முன்பு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இன்று நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து ஒருவரை கூட அழைத்துச் செல்லப்படவில்லை என மாணவர்களின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் சுமார் 36 பேர் அழைத்து செல்ல வேண்டிய நிலையில் ஒருவர் கூட அடுத்து செல்லப்படாதது ஏமாற்றத்தை அளித்தது என மாணவர்கள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.