ராகுல் மீது ஜனநாயக விரோத நடவடிக்கையில் ஈடுபட்டால் காங்கிரஸ் தொண்டர்கள் பார்த்துக் கொண்டு இருக்க மாட்டார்கள்:

முன்னாள் எம்.பி ராமசுப்பு பேட்டி

ராகுல் மீது ஜனநாயக விரோத நடவடிக்கையில் ஈடுபட்டால் காங்கிரஸ் தொண்டர்கள் பார்த்துக் கொண்டு இருக்க மாட்டார்கள் என நெல்லை முன்னாள் எம்பி ராமசுப்பு தெரிவித்தார். நெல்லை மாவட்டம் களக்காட்டில் காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தலைமையில் நடந்த கூட்டத்தில் பங்கேற்ற அவர் அளித்துள்ள பேட்டியில்- நேரு குடும்பத்தின் தியாகத்தால் தான் நாடு வளர்ச்சி பெற்றது. ஜனநாயகத்தை காப்பாற்ற கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ராகுல்காந்தி நடைபயணம் சென்றார் என்றும், அதானி குழுமத்தின் மோசடியால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து விட்டது. இதுபற்றி ராகுல்காந்தி பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் பாராளுமன்றத்தை முடக்குகிறார்கள். ராகுல் காந்தி மீதான நடவடிக்கையால் காங்கிரஸ் கட்சியையே முடக்கி விடலாம் என்று எண்ணுகிறார்கள் என்று குற்றம் சாட்டிய அவர் நேரு குடும்பத்தின் தியாகத்தால் தான் நாடு வளர்ந்தது. உலக அளவில் இந்தியா பெயர் பெற்றது என்றார். மேலும் தமிழக மக்கள் ராகுல் காந்தி மீது பாசமும், நம்பிக்கையும் வைத்துள்ளனர் என்று குறிப்பிட்ட முன்னாள் எம்.பி.ராமசுப்பு ராகுல்காந்தி மீதான நடவடிக்கையை பொதுமக்கள் ஏற்று கொள்ளவில்லை என்று தெரிவித்தார். நாகர்கோவிலில் காங்-பா.ஜ மோதல் சம்பவத்தில் காங்கிரஸார் மீது எந்த தவறும் இல்லை. வீணாக அவர்கள் மீது பொய் வழக்கு போட்டுள்ளனர் என்றும் புகார் தெரிவித்தார். அதனைதொடர்ந்து நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் கூறுகையில், ராகுல் காந்தி மீதான நடவடிக்கையை ரத்து செய்ய கோரி நாங்குநேரியில் ரெயில் மறியல் நடத்தவும், மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளோம். அதுபோல இந்த மாதம் முழுவதும், சத்தியாகிரக போராட்டம் தொடரும். ராகுல் காந்தி மீதான நடவடிக்கையை ரத்து செய்யாவிட்டால் போராட்டங்கள் மூலம் அரசை முடக்குவோம் என்றார். அதனைத் தொடர்ந்து நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் களக்காட்டில் நடந்தது. இதில் நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது ராகுல் பிரச்சனை தொடர்பாக மத்திய அரசு கண்டித்து போராட்டம் நடத்துவது குறித்தும் ஆலோசனை நடைபெற்றது.