அரியலூர் – பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஒருவரை காலில் விழுந்து மன்னிப்பு கேட்க கூறியதாக ஒருவர் கைது.

தலைமறைவாக உள்ள திமுக ஊராட்சி செயலாளர் உள்ளிட்ட 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

அரியலூர் மாவட்டம் வாளரைக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் அன்பரசன் (பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்) இவரது மகளுக்கு கடந்த 9ஆம் தேதி மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது. இதற்கு சீர்வரிசை எடுத்து வரும்போது வன்னியர் தெருவில் வெடி வெடித்துள்ளனர். மேலும், குடிபோதையில் தகாத வார்த்தையால் பேசியதாகவும் கூறப்படுகிறது. அப்பொழுது முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும், திமுக ஊராட்சி செயலாளருமான கண்ணன் போலீசாருக்கு போன் செய்து கூட்டத்தை கலைத்தனர். அப்போது பட்டியல் இனத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியதாக கூறப்படும் நிலையில் காவல் நிலையம் முன்பு திருநாவுகரசு வன்னியர் இன மக்கள் முன்பு காலில் விழுந்து மன்னிப்பு கேட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் திருநாவுக்கரசின் அண்ணன் அன்பரசன் பாஜக தெற்கு ஒன்றிய செயலாளராக உள்ளார். இதனால் காவல் நிலையம் முன்பு காலனி தெருவை சேர்ந்தவரை காலில் விழுந்து மன்னிப்பு கேட்கவச்சது தீண்டாமை அல்லவா என பதிவிட்டு ரிஜிஸ்டர் தபால் மூலம் குடியரசு தலைவர், ஆளுநர் மாவட்ட காவல்துறை உள்ளிட்ட 14 அரசு அதிகாரிகளுக்கு புகார் செய்துள்ளார். இதனையடுத்து அன்பரசன் கொடுத்த புகாரின் பேரில் மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த கண்ணன், ராஜேஷ், ராமச்சந்திரன், ரமேஷ், அருண், வேலுச்சாமி உள்ளிட்டவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இச் சட்டத்தின்கீழ் ஏழு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து ராஜேஷ் என்பவரை போலீசார் கைது செய்து ஜெயங்கொண்டம் சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள திமுக ஊராட்சி செயலாளர், கிளை செயலாளருமான கண்ணன் உள்ளிட்ட ஐந்து பேரை இரண்டு தனிப்படை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.