செயற்கை நுண்ணறிவு இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் கிரியா ஊக்கியாக செயல்படும் மற்றும் 2047 ஆண்டிற்குள் வளர்ந்த நாடாக மாறும் இலக்கை அடைய உதவும்: திரு கோயல்
2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ந்த நாடாக உருவாக வேண்டுமானால், பிரதமர் திரு நரேந்திர மோடியின் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தின உரையை மேற்கோள் காட்டி, “புதுமைகளை உருவாக்காத எந்த சமூகமும் தேக்கமடைகிறது” என்று மத்திய வர்த்தகம், தொழில்துறை, நுகர்வோர் நலன், உணவு, பொது விநியோகம் மற்றும் ஜவுளித் துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் கூறியுள்ளார். செயற்கை நுண்ணறிவு உண்மையிலேயே இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் ஒரு கிரியா ஊக்கியாக இருக்கும் என்றார்.

இந்தியாவில் உற்பத்தி திட்டம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் இணைந்தால், உலகிற்கு உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பம் இரண்டையும் வழங்கும் தொழிற்சாலையாக உலக அளவில் இந்தியா மாறும் என்று அவர் கூறினார்.

பொருளாதாரத்துறையின் செயல்பாடுகளில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும் புதிய வழிகளை ஆராய்வதில் நாட்டில் இருக்கும் மிகப்பெரிய திறமை அணி நிச்சயமாக உதவும் என்று அவர் குறிப்பிட்டார்.

பல ஆண்டுகளாக, குறிப்பாக சவால் மிகுந்த கொவிட் காலங்களில் நாட்டின் அறிவியல் சமூகத்தின் முயற்சிகளுக்கு பெரும் உதவிகரமாக இருந்த அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் அற்புதமான பணிகளுக்காக அமைச்சர் பாராட்டுகளைத் தெரிவித்தார்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி நமது அன்றாட வாழ்வில் செழிப்பைக் கொண்டுவர பல்வேறு வழிகளைப் பற்றி சிந்திக்கத் தொடங்குமாறு அவர் வலியுறுத்தினார்.

விவசாயிகள், மீனவர்கள் மற்றும் எம்எஸ்எம்இ துறை சார்ந்தவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதில் செயற்கை நுண்ணறிவு எவ்வாறு முக்கியப் பங்காற்ற முடியும் என்பதை ஆராயுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.