தஞ்சாவூர்: பாபநாசம் அருகே திருவைகாவூரில் கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த இளைஞர் தினேஷின் உடலை தேடும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. நீரில் மூழ்கி உயிரிழந்த தினேஷின் உடலை தேடும் பணி 2-வது நாளாக தொடர்கிறது. மாடு மேய்ச்சலுக்காக சென்ற இளைஞர் தினேஷ், கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தார்.
சென்னை: தொழில் முனைவோர்களுக்கான வழிகாட்டு மென்பொருள் தளத்தினை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பெண்களால் நடத்தப்படும் புத்தொழில் நிறுவனங்களுக்கான சிறப்பு சலுகை குறித்த கையேட்டினையும் வெளியிட்டார். புதிய காவல் நிலையங்கள், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி நிலையங்களை திறந்து வைத்தார். மீன்பிடி விசைப்படகுகள் டிரான்ஸ்பாண்டர்களை பொருத்தும் திட்டத்தினையும் முதல்வர் தொடங்கி வைத்தார்.
சென்னை: புதுக்கோட்டை வேங்கைவயலில் பட்டியலின மக்கள் கோயில் வழிபாடு நடத்த அனுமதி மறுத்து தீண்டாமை கொடுமை நிகழ்ந்துள்ளது என்று மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது. மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீரில் மனித மலத்தை கலந்து தீண்டாமை கொடுமையில் ஈடுபட்டுள்ளனர். ஆதிக்க சாதியினர் மனித தன்மையற்ற வகையில் நடந்து கொண்டதை மக்கள் நீதி மய்யம் தொழிலாளர் நல அணி வன்மையாக கண்டிக்கிறது. சாதி வன்கொடுமை தடுப்பு சட்டத்தை சரியான முறையில் கடைபிடிக்க அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கேட்டுக் கொண்டுள்ளது.
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் ஒரே இரவில் 6 வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி ஈடுபட்டுள்ளனர். செல்லப்பாண்டி, முத்துமாரி, சங்கர் உள்ளிட்ட 6 பேரின் வீடுகளின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் திருட முயன்றுள்ளனர். நள்ளிரவில் 6 வீடுகளில் கொள்ளையடிக்க முயன்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை: பிரதமரின் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க இன்று மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்கிறார். இன்று மாலை 4.45 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி புறப்படுகிறார். டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து ஸ்டாலின் ஆறுதல் கூற உள்ளார்.
சென்னை: கூடுவாஞ்சேரியில் வீட்டு மனை வாங்கி தருவதாக லட்சக்கணக்கில் மோசடி செய்த போலி ஆய்வாளர் கைது செய்யப்பட்டார். பள்ளிக்கரணையை சேர்ந்த செந்தில்குமாரிடம் ரூ.14 லட்சம் பெற்றுக்கொண்டு ஏமாற்றிய பழனிகுமார் சிக்கினார். மத்திய குற்றப்பிரிவு ஆய்வாளர் என கூறி பலரிடம் பணம் பெற்று பழனிகுமார் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் இறையூரில் நீர்த்தேக்கத்தொட்டியில் மலம் கலந்த விவகாரம் பற்றி பாலகிருஷ்ணன் நேரில் ஆய்வு நடத்தினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியினை பார்வையிட்டார். மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி உள்ள பகுதி மக்களிடம் நடந்த விவரங்கள் குறித்து பாலகிருஷ்ணன் கேட்டறிந்தார்.
வேலூர்: வேலூரில் இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்ற 20 கிலோ எடையுள்ள சந்தன மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. சந்தன மரத்தை வெட்டி கடத்துவதாக கிடைத்த தகவலின்படி போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். போலீசாரின் வாகன தணிக்கையில் சந்தன மரத்தை கடத்திச் சென்ற இருசக்கர வாகனத்தை மடக்கி பிடித்தனர்.
சென்னை: சென்னை பாரிமுனையில் நீண்டநாள் வாடகை செலுத்தாமல் நிலுவை வைத்திருந்த 143 கடைகளுக்கு மாநகராட்சி சீல் வைத்தது. வாடகை செலுத்தாத 143 கடைகளுக்கு சீல் வைத்து மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
தூத்துக்குடி: இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பிரபல போதை மருந்து கடத்தல் கும்பல் தலைவன் ஜோனதன் தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். எந்தவித ஆவணமின்றி தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு படகு மூலம் செல்ல முயன்ற வழக்கில் ஜோனதன் ஆஜரானார். தூத்துக்குடி நடுவர் நீதிமன்றம் எண் ஒன்றில் போதை மருந்து கடத்தல் கும்பல் தலைவன் ஜோனதன் ஆஜர்படுத்தப்பட்டார்.
சென்னை: முன்னாள் எம்.பி. மஸ்தான் மரண வழக்கில் திடீர் திருப்பமாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். மாரடைப்பால் உயிரிழந்தார் என கூறப்பட்ட நிலையில் முன்னாள் எம்.பி. மஸ்தானை கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. கார் ஓட்டுநர் இம்ரான், உறவினரான சித்ரா டாக்டர் சுல்தான் அகமது, நண்பர்கள் நசீர், தவ்பிக், லோகேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மஸ்தானின் சகோதரரின் மருமகன், கார் ஓட்டுநர் உள்பட 5 பேரும் கழுத்தை நெரித்து கொலை செய்தது விசாரணையில் அம்பலமானது.
சென்னை: கலைஞர் நினைவாக அமைக்கப்படும் பேனா நினைவுச் சின்னத்தின் மாதிரி படம் வெளியிடப்பட்டுள்ளது. பேனா நினைவுச்சின்னத்தின் கீழ் கலைஞர் கருணாநிதியின் கருத்துகள் அடங்கிய கல்வெட்டு அமைகிறது. கலைஞர் நினைவிடத்தில் இருந்து கடல் அலை வடிவத்தில் பாலம் அமைக்கப்படுகிறது. கலைஞரின் எழுத்தாற்றலைப் போற்றும் வகையில் கடலுக்குள் பேனா நினைவுச் சின்னம் அமைக்கப்படுகிறது.
திருவள்ளூர்: திருப்புகழ் திருப்படி பூஜை விழாவையொட்டி திருத்தணிக்கு சிறப்பு ரயில் சேவைகள் இயக்கபடும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அரக்கோணம் -திருத்தணி (பிஎஸ் 1, பிஎஸ் 2) சிறப்பு ரயில் டிசம்பர் .31ம் தேதி இரவு 11.10-க்கு புறப்பட்டுச் செல்லும் எனவும் அரக்கோணம் -திருத்தணி சிறப்பு ரயில் (பிஎஸ் 3, பிஎஸ் 4) ஜனவரி .1-ல் அதிகாலை 12.05 மணிக்கு புறப்பட்டு செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது
நாகை: சுருக்குமடி வலைக்கு நிரந்தர தடை கோரி 4 மாவட்ட மீனவர்கள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நாகையில் நடந்த நாகை, காரைக்கால், மயிலாடுதுறை, கடலூர் மாவட்ட மீனவர்களின் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சுருக்குமடி வலைக்கு தடை கோரிய தீர்மான நகலை முதல்வர், ஆட்சியர்களுக்கு அளிக்கவும் ஆலோசனையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
விழுப்புரம்: பாமக இல்லையெனில் சமச்சீர்கல்வியே கிடைத்திருக்காது என்று விழுப்புரத்தில் பட்டானூரில் கட்சி தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். பொதுக்குழு கூட்டத்தில் பாமக நிர்வாகிகளுடன் நிறுவனர் ராமதாஸ், கட்சி தலைவர் அன்புமணி ஆலோசித்தனர்.
இராமநாதபுரம்: பாம்பன் பாலத்தில் பராமரிப்பு பணிகள் தொடர்வதால் ஜனவரி .10 வரை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது என்று மதுரை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது. பாம்பன் ரயில் பாலத்தில் எச்சரிக்கை மணி ஓசை ஒலித்ததால் ரயில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது. சென்னை ஐஐடி வல்லுநர்கள் காலி ரயில் பெட்டிகளை பாம்பன் ரயில் பாலத்தில் இயக்கி ஆய்வு செய்தனர்.
மதுரை: ஜனவரி 1 முதல் 100 நாள் வேலை திட்ட பணியாளர் வருகையை கட்டாயம் செயலியில் பதிவு செய்ய வேண்டும் மதுரை ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். பணியாளர் வருகையினை காலை, மதியம் தவறாமல் பதிவு செய்தால் மட்டுமே ஊதியம் வழங்க இயலும் என ஆட்சியர் அனீஷ்சேகர் தெரிவித்திருக்கிறார்.
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் உணவு பாதுகாப்புத் துறையினர் அதிரடி ஆய்வு நடத்தினர். சாகுல் ஹமீது என்பவரது வீட்டில் ஆயிரம் கிலோ கெட்டுப்போன ஆட்டு இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை: மதுரை விமான நிலையத்திற்கு நிலம் எடுக்கும் பணிகள் 99 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். விவசாயிகளின் நியாயமான கோரிக்கையை ஏற்று பொங்கல் பரிசில் கரும்பு வழங்கப்பட உள்ளது. பரந்தூர் விமான நிலையம் 100 சதவீதம் கட்டாயம் வரும்; சென்னை வளர்ச்சிக்கு பரந்தூர் விமான நிலையம் அவசியம் என அமைச்சர் ராமச்சந்திரன் கூறினார்.
சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் கடம்பூரில் ரூ.300 கோடியில் தாவரவியல் பூங்கா அமைக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கடம்பூரில் 138 ஹெக்டேர் பரப்பளவில் தாவரவியல் பூங்கா அமைக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அரியவகை தாவர இனங்களை பாதுகாக்க தாவரவியல் பூங்கா அமைக்கப்பட உள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த ராயல் தாவரவியல் பூங்கா, கியூ தாவரவியல் பூங்காவுடன் இணைந்து அமைக்கப்பட உள்ளது.
Leave A Comment