மருத்துவம்

குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தையை வளர்ப்பது எப்படி??

Rate this post

ஒரு ஆரோக்கி யமான பச்சிளம் குழந்தை என்பது அதன் எடை மற்றும் எத்தனை வாரங்கள் என்பதை வைத்தே முதலில் நாம் கணிக்கிறோம். அதன் பிறகே மற்ற காரணிகளை எடுத்துக் கொள்கிறோம். குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகள் (37 வாரங்களுக்கு குறைவாக) மற்றும் எடை குறைவு குழந்தைகளுக்கு (பிறப்பு எடை 2,500 கிராமிற்கும் குறைவாக) அதிக அளவிலான கவனம் மற்றும் பராமரிப்பு மிகவும் அவசியமாகும். பச்சிளம் குழந்தைகளை பராமரிக்க வழக்கமான வழிமுறைகள் இருந்தபோதிலும் கங்காரு மதர் கேர் எனும் தாய்-சேய் தொடு முறையும் பாதுகாப்பானதாகவும் பயனுள்ள மாற்றாகவும் திகழ்கிறது. எவ்வாறு ஒரு தாய் கங்காரு, தனது குட்டியை அதன் மடியிலேயே வைத்து கொண்டு அதற்கு தேவையான உடல் வெப்பத்தினை சீராக வைத்துக் கொள்வதுடன் தொடர்ந்து பாலூட்டி வருகின்றதோ அதே போல தாய்-சேய் தொடு சிகிச்சை மூலமாக “கங்காரு மதர் கேர்” முறையில் பச்சிளம் குழந்தைகளைச் சுலபமாக பாதுகாக்கலாம். தொடர் தாய்-சேய் தொடு சிகிச்சை மற்றும் அதனால் பச்சிளம் குழந்தைக்கு கொடுக்கப்படும் தொடர் தாய்ப் பாலினாலும் வெகு விரைவாகவே மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு வந்து சேரலாம்.

ஒரு தாயின் தொடுதலுக்கு எந்த ஒரு தொழிற்நுட்பமும் மாற்றாக முடியாது. சுய- சிகிச்சையாக திகழும் கங்காரு மதர் கேர் முறை, தற்போதைய பச்சிளம் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள அதி நவீன உபகரண செயல்பாட்டிற்கு ஆதரவாக திகழ்கிறது. இந்தச் சிகிச்சை முறையில் குழந்தையின் உடல் வெப்பத்தை சீராக வைப்பதுடன், தாய்ப்பால் கொடுப்பதில் சகிப்புத் தன்மையும், பச்சிளம் குழந்தையின் எடை மற்றும் மூச்சு திறன் ஆகியவற்றை மேம்படுத்தும். தாய்க்கு தாய்பால் சுரப்பு அதிகரிப்பதுடன் குழந்தையுடனான பிணைப்பை மேம்படுத்தவும்.

செய்முறை
தாயின் மார்பு பகுதியில் குழந்தையை அணைத்து இருவரின் உடலையும் சேர்த்தவாறு வைத்து துணியால் கட்டிவிட வேண்டும். இவ்வாறு செய்வதால் தாயின் சருமத்துடன் குழந்தைக்கு நேரடித் தொடர்பு ஏற்படுகிறது. தாயின் உடல் வெப்பம் குழந்தைக்கும், குழந்தையின் உடல் வெப்பம் தாய்க்கு தொடர்ந்து செலுத்தப்படுவதால் வெப்பநிலை சமன் செய்யப்படுகிறது. மேலும் தாயின் மார்புப் பகுதி அருகே அணைத்து இருப்பதால், குழந்தை தாய்ப்பால் வாசம் அறிந்து பாலை அருந்த விழைகிறது. இதன் மூலம் குழந்தையின் எடை, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன் தாய்க்கு தாய்ப்பால் சுரப்பு திறனும் அதிகரிக்கும். குழந்தையின் வயிற்று பகுதியினை தாயின் அடிவயிற்றின் மேல் வைத்து கைகளால் குழந்தையின் கீழ் பின்பகுதியை தாங்கிப் பிடிக்க வேண்டும்

கங்காரு மதர் கேர் பல முக்கிய ஆரோக்கிய நலன்கள் கொண்டதாகும். இது குழந்தையின் இதயத் துடிப்பு மற்றும் மூச்சு திறனை சீராக வைத்து கொள்வதுடன் இரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் மற்றும் குளுக்கோஸ்
அளவுகளை ஒழுங்குபடுத்தும். ஒரு இன்குபேட்டர் செய்ய முடியாத மருத்துவ நலன்களை கங்காரு மதர் கேர் அளிக்கிறது.
அணுகுமுறை

கங்காரு மதர் கேர் முறையை மேற்கொள்ளும் முன் சில முக்கிய அணுகு முறைகளை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். குறிப்பாக, பச்சிளம் குழந்தை மருத்துவ ரீதியிலான தகுதியை நாம் உறுதி செய்யவேண்டும். இந்தச் சிகிச்சை முறையினை, வென்டிலேட்டரில் உயிர் பாதுகாப்புக்காக சிகிச்சை பெரும் குழந்தைகள், இரத்த அழுத்தம் சம்பந்தமான உடல் நலம் குன்றிய குழந்தைகள் போன்றோருக்கு தவிர்க்க வேண்டும். ஆனால், குறைந்தபட்ச சுவாச உதவிகளை பயன்படுத்தும் குழந்தைகளுக்கு கங்காரு மதர் கேர் முறையினை மேற்கொள்ளலாம்.

நன்மைகள்
கங்காரு மதர் கேர் முறையின் சிறப்பு அம்சங்கள் வியக்க வைப்பதாக உள்ளது. இதன் மூலமாக தாய்ப்பால் அளிப்பது அதிகரிக்கிறது. மேலும் தாய்ப்பால் சுரத்தலும் தாய்ப்பாலூட்டும் காலமும் அதிகரிக்கிறது. தாய்ப்பால் சுரப்பது அதிகரித்துள்ளதால், குறைப்பிரசவ குழந்தைகள் வெகு விரைவிலேயே
மருத்துவ மனையிலிருந்து வீடு திரும்புகிறார்கள் என பல ஆய்வுகள் கூறுகின்றன.
குழந்தையின் உடல் தட்பவெட்பம் பராமரிப்பு

தாய்-சேய் தொடு சிகிச்சை முறையில் குழந்தையி=ன் உடல் வெப்பநிலை உறுதிசெய்யப்படுகிறது. குழந்தையை தொடுவதன் மூலமாக தாயின் உடல் வெப்பமானது குழந்தைக்கு செல்கிறது. தாயின் மார்பில் குழந்தையை அணைப்பதால் குழந்தை தொடர்ந்து தாயின் சுவாசத்தாலும் இதய துடிப்பாலும் தூண்டப்படுகிறது. இது இருவருக்கும் இடையே ஒரு பிணைப்பு ஏற்படுத்துவதுடன் குழந்தையின் சுவாச பிரச்சனைகளுக்கும் தீர்வு காண உதவுகிறது.

கங்காரு மதர் கேர் தொடு முறைக்கான காலக்கெடு ஏதும் இல்லை. ஒரு தாயானவள் தன் குழந்தைக்கு எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் இந்தச் சிகிச்சை முறையினை போதிய இடைவெளிகளுடன் அளிக்கலாம். அதிகபட்ச நேரம் என்று எதும் இல்லை என்ற போதிலும், குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது மேற்கொள்ள வேண்டும்.

மருத்துவமனையில் கங்காரு மதர் கேர் வசதிகள்

மருத்துவ கருவிகள் ஏதும் பயன்படுத்தாததால் கங்காரு மதர் கேர் சிகிச்சை என்பது ஒரு எளிமையான சிகிச்சை முறையாக கருதப்படுகிறது. இது மருத்துவமனைகளுக்கு சாதகமான மேன்மை தரும் சிகிச்சை முறையாகும். மருத்துவமனையோ அல்லது பச்சிளம் குழந்தை நல பிரிவோ கண்டிப்பாக பெற்றோர்களுக்கு திறந்த கதவு கொள்கையினை வைத்திருக்க வேண்டும். மருத்துவமனையில், தகுந்த இருக்கை வசதிகளுடன் கூடிய ஒரு தனி அறையிலோ அல்லது பச்சிளம் குழந்தை நல பிரிவிலோ தாய்- சேய் தொடு சிகிச்சை பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இதற்கு முழு நேர கங்காரு மதர் கேர் முறையில் பயிற்சி பெற்ற தகுதி வாய்ந்த செவிலியர்கள் மிகவும் அவசியம் தேவை. தாய்-சேய் நல பிரிவில் பணிபுரியும் ஒவ்வொரு மருத்துவரும் செவிலியரும் இந்த சிகிச்சை முறையில் நன்கு பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
இந்தச் சிகிச்சை,வயது, கல்வி, கலாச்சாரம் மத வேறுபாடின்றி குழந்தை பெற்ற ஒவ்வொரு தாயும் இந்த தொடு சிகிச்சை முறையினை கடை பிடிக்கலாம். குறிப்பாக அவர்களுக்கு பெரிய அளவிலான நோய்களின் தாக்கம் இல்லாமல் இருக்க வேண்டும். பிறந்த பச்சிளங் குழந்தைக்கு கங்காரு மதர் கேர் எனும் தாய்-சேய் தொடு சிகிச்சை மிகவும் அவசியமானதாக திகழ்கிறது. இதற்கு குடும்பத்தாரின் ஆதரவு மற்றும் பரிவு தேவைப்படுகிறது.

Comment here