தென்காசி :
தென்காசி குற்றால அருவிகளில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மெயின் அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐந்தருவியில் மட்டும் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பொன்னேரி:
பொன்னேரி அருகே தச்சூர் கூட்டுசாலையில் தனியார் சொகுசு பேருந்தும் லாரியும் மோதிய விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 4 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளியில் 9 முதல் 12ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் தொடங்கியது. மாணவி மரணத்தை தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தால் 145 நாட்களாக பள்ளி மூடப்பட்டிருந்தது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி முதற்கட்டமாக 9 – 12ம் வகுப்புக்கு நேரடி வகுப்புகள் நடைபெறவுள்ளன. பள்ளியில் உள்ள ஏ மற்றும் பி பிளாக்குகளை மட்டும் பயன்படுத்த நீதிமன்றம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

டெல்லி:
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக வலுப்பெறும் எனவும் கூறியுள்ளது.

நாகை:
காற்றழுத்த தாழ்வுநிலை எச்சரிக்கை காரணமாக நாகை மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக டிச.8 வரை மீன்பிடிக்க தடை விதித்து மீன்வளத்துறை அறிவித்துள்ளது. இதனால் 700 விசைப்படகுகளும், 3,000 பைபர் படகுகளும் துறைமுகம் மற்றும் கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

சென்னை:
ஆவின் பச்சை நிற பாலுக்கு தட்டுப்பாடு என்ற தகவலில் உண்மையில்லை என அமைச்சர் நாசர் விளக்கம் அளித்துள்ளார். பொதுமக்களின் தேவைக்கு ஏற்ப பச்சை நிற பால் பாக்கெட்டுகள் விநியோகம் செய்யப்படுகிறது. பச்சை நிற ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு என அன்புமணி கூறியிருந்த நிலையில் அமைச்சர் நாசர் பதிலளித்துள்ளார்

புதுச்சேரி:
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 6ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் புகழாரம் சூட்டினார். பணிந்து நின்றுதான் பணிசெய்ய வேண்டும் என்பதில்லை; துணிந்து நின்றும் பணி செய்யலாம் என்பதனை நிருபித்த பெண் ஆளுமை மரியாதைக்குரிய முன்னாள் முதலமைச்சர் செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்களின் நினைவு தினமான இன்று அவரது நினைவை போற்றுகிறேன் என கூரினார்.

செங்கல்பட்டு:
சித்தாமூர் அருகே குறும்பிறையில் புதிய கல்குவாரி அமைக்க விவசாயிகள், மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். புதிய கல்குவாரியால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என கூறி குறும்பிறை கிராமத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை:
சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதிமுக நிர்வாகிகள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்களும் ஜெயலலிதா நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

சென்னை:
புழல் மகளிர் சிறையில் வெளிநாட்டு பெண் கைதிகள் 2 பேர் தாக்கியதில் பெண் காவலர் கோமளா காயம் அடைந்துள்ளார். கைதிகளிடையே ஏற்பட்ட தகராறை தடுக்கச் சென்றபோது பெண் காவலர் கோமளாவை தாக்கி கீழே தள்ளிவிட்டுள்ளார். காவலர் கோமளா புகாரின்பேரில் புழல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை:
வடசென்னை அனல் மின்நிலையத்தில் பழுது காரணமாக 600 மெகா வாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 2-வது நிலையின் 1-வது அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

திருமலை:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இன்று சுவாமி தரிசனம் செய்தார். அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி குடியரசு தலைவரை வரவேற்று வராக சுவாமி மற்றும் ஏழுமலையான் தரிசனம் செய்து வைத்து தீர்த்த பிரசாதங்களை வழங்கினார்.

சென்னை:
பூந்தமல்லி அடுத்த பாப்பான்சத்திரத்தில் தனியார் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற வேன் மீது மற்றொரு வேன் மோதி விபத்துக்குள்ளானது. இதில் வேனில் சென்ற தொழிலாளர்கள் 10 பேர் காயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே 17 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்த கூலி தொழிலாளி கைது செய்யப்பட்டுள்ள்ளார்.கடந்த 3 ஆண்டாக காதலிக்க வற்புறுத்தி கடத்திச்சென்று கட்டாய பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். தொழிலாளி ஜெய்குமாருக்கு உடந்தையாக இருந்த அவரது தயார் சாந்தி கைது செய்யப்பட்டார்.

சென்னை:
ஜி20 மாநாடு ஆலோசனை கூட்டத்திற்கு ஈபிஎஸ்க்கு தான் அழைப்பு வந்துள்ளது, ஓபிஎஸ்க்கு இல்லை சென்னை மெரினாவில் ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின் ஜெயக்குமார் பேட்டியில் தெரிவித்தார். அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் என்ற அடிப்படையில் ஈபிஎஸ்க்கு ஒன்றிய அரசு அழைப்பு விடப்பட்டது.