பழனி முருகன் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.5 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம். கேரளா, கர்நாடகாவில் இருந்தும் பழனியில் குவியும் பக்தர்கள்.விடுமுறை தினம் என்பதால் பழனியில் பக்தர்கள் வருகை அதிகரிப்பு.

திருப்பதியில் தரிசன டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம்:

ஜன. 12 – பிப். 28 வரை திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ரூ.300 மதிப்புள்ள டிக்கெட்டுகளுக்கான முன்பதிவு இன்று காலை 10 மணிக்கு ஆன்லைனில் தொடக்கம். www.tirupatibalaji.gov.in இணையதளம் மூலம் பக்தர்கள் ரூ.300 மதிப்பிலான டிக்கெட்டை முன்பதிவு செய்யலாம்.

நீத்தார் சடங்குகள் செய்யும் பெருமான் !

வரலாற்றுக்கு முற்பட்ட காலந்தொட்டு மக்கள் பலவிதப் பழக்க வழக்கங்களைக் கொண்டிருந்தனர். தெய்வ வழிபாடு, இறந்தோரைப் பலவகையான முறையில் அடக்கம் செய்தல் முதலிய சடங்குகள் அக்காலத்தில் இருந்துள்ளன.

. கல்திட்டை ,நடுகல் என பலவகை நினைவூட்டல் சடங்குகள் இருந்திருக்கின்றன தொல்காப்பியத்தில் திருமணச் சடங்கு, தெய்வ நம்பிக்கை, நிலையாமை, நடுகல் வழிபாடு முதலியன குறிப்பிடப் பெற்றுள்ளன இறந்த கணவனுக்கு பிண்டலம் வைத்தல் (புறநானூறு – 234), பற்றிய செய்தி புறநானூற்றில் சொல்லப்பட்டிருக்கிறது.

வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திருந்து நீத்தார் கடன் வழிபாடு இருந்து வருகிறது. கற்பதுக்கை, கல்திட்டை, முதுமக்கள் தாழி முதலியன இறந்தவர்க்கு அமைக்கப்பட்ட ஈமச்சின்னங்கள் ஆகும்.

“சுடுவோர் இடுவோர் தொடுகுழிப் படுப்போர்
தாழ்வயின் அடைப்போர் தாழியில் கவிப்போர்” (மணிமேகலை – சக்கரவாளக் கோட்டமுரைத்த காதை).

எனச் சீத்தலைச் சாத்தனார் இறந்த உடலை அடக்கம் செய்யும் முறை பற்றிக் கூறுகிறார்.

இவ்வாறு பண்டையகாலத்தில் இருந்து இறந்தவருக்கு ஒரு கடன் செலுத்தும் சடங்கு இன்றளவும் இருந்துவருகிறது .இறைவனே இவ்வாறு சிலருக்கு நீத்தார் கடன்கள் செய்வதாக சில கோயில்களில்சடங்குகள் இன்றளவும் இருந்துவருகிறது.

சிவனே நீத்தார் கடன் செய்யும் ஒரு விழா திருவண்ணாமலையில் நடைபெற்று வருகிறது .இது குறித்து முன்பே ஒரு முறை எழுதியிருக்கிறேன் .வல்லாள மகராஜனுக்கு அண்ணாமலையாரே குழந்தையாக பிறந்ததாக ஒரு வரலாறு உண்டு. வல்லாள மகாராஜனுக்கு பள்ளி கொண்டாடப்பட்டு என்ற ஊரில் சென்று அருணாசலேசுவரர் திதி கொடுக்கும் உற்சவம் இன்றும் மாசி மாதம் பௌர்ணமி அன்று நடந்து வருகின்றது.

அவ்வாறே இப்போது பெருமாள் அவரது பக்தர் ஒருவருக்கு திதி தரும் ஒரு வழக்கம் இன்றளவும் இருக்கிறது.

செங்கல்பட்டு அருகே, நென்மேலி எனும் கிராமத்தில் அமைந்து உள்ள ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் கோவில், சக்தியும் அமைதியும் கொண்ட தலமாகப் போற்றப்படுகிறது. செங்கல்பட்டிலிருந்து திருக்கழுக்குன்றம் செல்லும் சாலையில், சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது.

இந்தக் கோவிலில் உள்ள உற்சவ மூர்த்தி, சிரார்த்த ஸம்ரட்சண நாராயணர் எனும் திருநாமத்துடன் அழைக்கப்படுகிறது . இந்த கிராமத்திற்கு புண்டரீக நல்லூர், பிண்டம் வைத்த நல்லூர் என்றும் இந்தகோயிலின் திருக்குளம், அர்க்ய புஷ்கரணி, ஜீயர் குளம் என்றும் அழைக்கப்படுகிறது.

ஆற்காடு நவாப் காலத்தில் திவானாகப் பணிபுரிந்த ஸ்ரீயாக்ஞ வல்கியரைக் குருவாகக் கொண்ட சுக்ல யஜுர் வேதத்தை சேர்ந்தயக்ஞ நாராயண சர்மா – சரஸ வாணி தம்பதி, இந்தக் ஆலயத்தின் பெருமாளின் மீது, அதீத பக்தி கொண்டிருந்தனர்.

இவர்கள் மன்னனுக்கு சேரவேண்டிய வரி வசூலிக்கும் பதவியில் இருந்தனர் இவ்வாறு சேர்க்கப்பட்ட அரசுக்கு செலுத்த வேண்டிய வரிப் பணத்தை, அவர்கள் இந்த ஆலயத்தின் திருப்பணிகளுக்கு செலவு செய்து விட்டனர்.மன்னரிடம் அனுமதி பெறாமல் அவர்களேஇத்தகைய செலவு செய்துவிட்டனர்.

.இந்த செய்தியை அறிந்த ஆற்காடு நவாப் மிக்க கோபம் கொண்டார் . அவருக்கு தண்டனை தந்து கைது செய்து கொண்டுவருமாறு ஆணையிட்டார் .இத்தகைய கொடிய அரச தண்டனையை ஏற்க விரும்பாமல், அவர்கள் இருவரும் திருவிடந்தை ஆலய திருக்குளத்தில் குதித்து தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டனர். எனினும், தங்கள் ஈமக் கடன்களை செய்ய வாரிசு இல்லையே என மன வருத்தத்துடன் அவர்கள் இறந்தனர்.

ஆனால், அவர்களின் மனவருத்தத்தை தீர்க்கும் வகையில், இந்த ஆலயத்தின் பெருமாளே, தம்பதிக்கு ஈமகடன்கடன்ளை செய்ததாக, கோவிலின் தல வரலாறு கூறுகிறது.

அவர்களுக்குமட்டும் இல்லாது இந்த ஆலயத்திற்கு வரும் பொதுமக்களுக்கும் அவர்களது பிதுர்களுக்கு திதி தரும் வழக்கம் இங்கே நிலவி வருகிறது .மறைந்த திவானின் வேண்டுகோளுக்கு இணங்க, சந்ததிகள் இல்லாதவருக்கும், திதி செய்ய இயலாதவர்களுக்கும், பெருமாளே திதிசெய்து வைப்பதாகச் சொல்கிறது ஸ்தல புராணம். தினமும், பகல், 12 மணி முதல், 1 மணி வரை உள்ள காலம், பித்ருக்களின் காலமாக கருதப்படுகிறது.

இவ்வாறு இறைவனும் மக்களுக்காக இரக்கம் கொண்டு இறங்கிவந்து அவர்களுக்கு இறுதி சடங்குகள் செய்வதாக ,சில விழாக்கள் சடங்குகள் இன்னமும் இருந்துவருகிறது .இறைவனும் சாமான்யனுக்குஅணுக்கமாக இருக்கிறார் என்பதையே இவை உணர்த்துகிறது போலும் !இதற்க்கு வரலாற்று ஆதாரம் இருப்பதாகத் தெரியவில்லை.