சென்னை: மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் இந்த மாத இறுதிக்குள் இணைக்க வேண்டும் என மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர், மின்துறையை தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சிகளை ஒன்றிய அரசு எடுத்து வருகின்றது. புதிய மின்சார திருத்த சட்ட மசோதாவை முதலமைச்சர் ஏற்றுக்கொள்ள மாட்டார். இடைத்தேர்தலில் எவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற போகிறோம் என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என கூறினார்.
சென்னை: ஈசிஆர் சாலை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் கல்பாக்கம் – மாமல்லபுரம் வரை உள்ள சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஜி20 மாநாட்டில் பங்கேற்க வரும் வெளிநாட்டு அதிபர்கள், தலைவர்கள் பிப்ரவரி 1ம் தேதி செங்கல்பட்டுக்கு வருகை தருகின்றனர். மாமல்லபுரம் கடற்கரை கோயில், ஐந்துரதம் உள்ளிட்ட புராதன சின்னங்களை சுற்றி பார்க்க ஒன்றிய, மாநில சுற்றுலாத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி, ஆரோவில் போன்ற பகுதிகளுக்கும் செல்ல நேரிடும் என்பதால் மாமல்லபுரம் – கல்பாக்கம் சாலை சீர் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
சென்னை: மயிலாப்பூரில் ரூ.5 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட தொழிலதிபர் 3 மணி நேரத்தில் மீட்கப்பட்டார். மனைவி அளித்த புகாரின் பேரில் 3 மணி நேரத்தில் கடத்தப்பட்ட ஜெயராமன் மீட்கப்பட்ட நிலையில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். கடத்தலில் ஈடுபட்ட தேவராஜ், திவாகர், ஸ்டீபன் ராஜ், பாலாஜி, ஹேமநாதன், தினேஷ் ஆகியோரிடம் போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.
சென்னை: முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிக்கு ஜனவரி 23 வரை விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஜனவரி 23 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. sdat.tn.gov.in இணையதளம் மூலம் லட்சக்கணக்கானோர், ஆன்லைனில் பதிவு செய்துள்ளனர். முதலமைச்சர் கோப்பைக்கான போட்டி 5 பிரிவுகளில் நடத்தப்படுகிறது. மொத்த பரிசுத்தொகை ரூ.25 கோடி ஆகும். சிலம்பம், கபடி, கிரிக்கெட் உள்ளிட்ட 15 விளையாட்டுகள் நடைபெற உள்ளது.
சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஏப்ரல் 14ம் தேதி திருச்செந்தூரில் நடைப்பயணத்தை தொடங்குகிறார். கடலூரில் அண்ணாமலை பங்கேற்ற பாரதிய ஜனதா கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கட்சி வளர்ச்சிக்காக நிதி சேகரிக்கவும், பூத் கமிட்டியை வலுப்படுத்தவும் பாஜக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
சென்னை: அண்ணா சாலையில் பழைய கட்டடத்தை இடிக்கும் பணியின் போது, சுவர் இடிந்து விழுந்து பெண் உயிரிழந்த விவகாரத்தில் இருவர் கைது.ஜே.சி.பி. உரிமையாளர் மற்றும் ஓட்டுநர் கைது; கட்டடத்தின் உரிமையாளர் பாத்திமா, பொறியாளர் மற்றும் ஒப்பந்ததாரர் ஆகியோருக்கு வலை.
சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.
சென்னை: ஓட்டேரி நல்லா கால்வாயில் ட்ரோன் இயந்திரங்களைக் கொண்டு கொசு மருந்து தெளிக்கும் பணியை அமைச்சர் சேகர்பாபு, மாநகராட்சி மேயர் பிரியா கொடியசைத்து தொடங்கிவைத்தனர்.
Leave A Comment