Spirituality

சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள் .பகுதி-52

Rate this post

எதை நினைக்கிறீர்களோ , அதுவாக ஆவீர்கள். உங்களைப் பலவீனர்கள் என்று நினைத்தால் , பலவீனர்கள் ஆவீர்கள். வலிமையானவர்களாக நினைத்தால் வலிமை மிக்கவர்கள் ஆவீர்கள். தூய்மையற்றவர்களாக எண்ணினால் தூய்மையற்றவர்கள் ஆவீர்கள். தூய்மையானவர்களாக எண்ணினால் தூயவர் ஆவீர்கள்.

எனவே நம்மை பலவீனர் என்று நினைக்க வேண்டாம். நாம் வலிமை மிக்கவர்கள். எதையும் செய்யும் ஆற்றல் பெற்றவர்கள், எல்லாம் அறிந்தவர்கள் என்று நினைக்கும்படி இந்துமதம் போதிக்கிறது.

எல்லா அறிவும் எல்லா ஆற்றலும் எல்லா தூய்மையும் எல்லா சுதந்திரமும் என்னில் இருக்கிறது. அந்த அறிவை ஏன் என்னால் வெளிப்படுத்த முடியவில்லை? ஏனென்றால் அவை மீது எனக்கு நம்பிக்கை இல்லை. நான் அதை நம்பினால் அவை வெளிப்பட்டே தீர வேண்டும். வெளிப்படவே செய்யும். இதைத்தான் நிர்க்குணக் கடவுள் கொள்கை போதிக்கிறது.

உங்கள் குழந்தைகளைச் சிறுவயதிலிருந்தே வலிமை உடையவர்களாக ஆக்குங்கள். அவர்களுக்கு பலவீனத்தைச் சொல்லித் தராதீர்கள். வெறும் புறச் சடங்குகளைக் கற்றுத் தராதீர்கள். அவர்களை வலிமையானவர்களாக ஆக்குங்கள். அவர்கள், தங்களின் கால்களிலேயே நிற்கட்டும். தைரியமானவர்களாக, எல்லாவற்றையும் வெல்பவர்களாக எல்லா துன்பங்களையும் ஏற்பவர்களாக, அனைத்திற்கும் மேலாக, ஆன்மாவின் பெருமைகளை அறிபவர்களாக அவர்களை உருவாக்குங்கள்.

பிற மதங்களிலுள்ள பக்தி, வழிபாடு போன்ற கருத்துக்களும், அவற்றைவிட மேலான வேறு பலவும் இந்துமதத்தில் உள்ளது.ஆனால் அதிலுள்ள இந்த ஆன்மாவைப்பற்றிய கருத்து தான் உயிரோட்டம் தரும் சிந்தனையாக மிகவும் ஆச்சரியமானதாக உள்ளது.அது இங்கே, இந்துமதத்தில் மட்டும் தான் உள்ளது

உலகையே புரட்சிமயமாக்கப் போகின்ற, பௌதீக அறிவையும் ஆன்மீகத்தையும் இணைக்கப் போகின்ற மகத்தான கருத்து இந்துமதத்தில் இருக்கிறது.

இந்தியாவில் இப்போதுள்ள சூழ்நிலையில் பல மதப்பிரிவுகள் தோன்றத்தான் செய்யும் என்பதை ஏற்கனவே கண்டோம். அவ்வாறே தோன்றியிருப்பதையும் நாம் காண்கிறோம். அதே நேரத்தில் இவை ஒன்றுக்கொன்று போரிட்டுக்கொள்ளாத விசித்திரத்தையும் பார்க்கிறோம். ஒவ்வொரு வைணவனும் அழியப்போகிறான் என்று சைவர்கள் சொல்வதில்லை. எல்லா சைவர்களும் நாசமாய் போவார்கள் என்று வைணவர்கள் சொல்வதில்லை. இது என் பாதை. உங்களுக்கு உங்கள் பாதை இருக்கிறது. முடிவில் நாம் இரண்டுபேரும் சேர்ந்தேயாக வேண்டும்” என்று வைணவன் கூறுகிறான். இந்தியாவில் உள்ள எல்லோருக்கும் இது தெரியும். இதுவே இஷ்டதெய்வக்கொள்கை.

Comment here