ராமேஸ்வரம்: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. இலங்கை கடற்படை 4 மீனவர்களை கைது செய்து ஒரு விசைப்படகையும் பறிமுதல் செய்து கொண்டு சென்றது.

சென்னை: வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைக்கும் பணி தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி இன்று ஆலோசனை நடத்துகிறார். அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் காணொளியில் சத்யபிரதா சாகு ஆலோசனை நடத்துகிறார்.

சென்னை: கம்ப்யூட்டரில் ட்விட்டர் சமூக வலைதளத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணமாக பயனாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கம்ப்யூட்டரில் ட்விட்டர் கணக்கை லாக்கிங் செய்யும்போது பயனாளர்களுக்கு Error என்ற தகவல் வருகிறது.

தென்காசி: குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு தொடர்வதால் 4வது நாளாக குளிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் வழக்கம்போல் மக்கள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி: அருகே எல்லம்பள்ளியில் கல்குவாரிக்கு எதிராக லாரிகளை மக்கள் சிறைப்பிடித்தனர். அனுமதித்த அளவை விட அதிக ஆழத்தில் கற்களை தோண்டி எடுப்பதாகவும், இரவில் தொடர்ந்து செயல்படுவதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது. கல்குவாரியில் வெடிவைத்து தகர்க்கும் போது விளைநிலங்களில் கற்கள் சிதறி விழுவதாகவும் மக்கள் புகார் கூறுகின்றனர்.

தமிழக ஊரகத் துறை அமைச்சர் ஐ பெரியசாமி திண்டுக்கல்லில் பேட்டி:

தற்பொழுது பதவியேற்றுள்ள திமுக அரசு உள்ளாட்சித் துறையில் பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறோம் எந்த திட்டத்தில் என்ன குறை உள்ளது என சுட்டிக்காட்டினால் அதனை விசாரித்து சரிப்படுத்தி சிறப்பாக செயல்படுத்துவோம். திமுக அரசு மக்கள் நலனில் அக்கறை கொண்ட அரசு மக்கள் அரசு, எந்தத் திட்டமாக இருந்தாலும் அதனை மக்களிடத்தில் கொண்டு போய் சேர்ப்பதில் அமைச்சர்கள் உறுதியாக உள்ளோம். சுயநலத்துக்காக இந்த அரசு உருவாக்கப்படவில்லை. இந்த அரசை கடந்த 10 ஆண்டுகால அதிமுக அரசு உடன் ஒப்பிட முடியாது என பேசினார்.