இயல்தமிழ்

குழந்தைகளின் தோற்றம் பற்றி நமது அருளாளர்கள் விவரிக்கும் விதத்தை

Rate this post

இன்று குழந்தைகள் தினம் என்று நமது நாட்டில் கொண்டாடப்படுகிறது .

Online tamil news

நாம் சற்றி மாறுபட்டு அத்தகைய குழந்தைகளின் தோற்றம் பற்றி நமது அருளாளர்கள் விவரிக்கும் விதத்தைஇப்போது காணப்போகிறோம் .

இவைகளையெல்லாம் தமது ஞானத்தின் மூலமே அவர்கள் உணர்ந்ததாக
கொள்ளவேண்டும் .

துதித்தற்கு எளிதாகி,நெடிய கடலாற் சூழப்பட்ட இந்த உலகத்தில்,
யானை முதலாக, எறும்பு இறுதியாகிய குறைவில்லாத கருப்பைகளினின்றும்
உள்ள நல்வினையால் தப்பியும்,….
மனிதப் பிறப்பில் தாயின் வயிற்றில் அதனைஅழித்தற்குச் செய்யும் குறை வில்லாத புழுக்களின் போருக்குத் தப்பியும்,……

முதல் மாதத்தில் தான்றிக்காய் அளவுடைய கரு இரண்டாகப்
பிளவுபடுவதனின்றும் தப்பியும்,…..

இரண்டாம் மாதத்தில் விளைக்கின்ற விளைவினால் உருக்கெடுவதினின்றுதப்பியும்……

மூன்றாம் மாதத்தில் தாயின் மதநீர்ப் பெருக்குக்குத் தப்பியும்,….

நான்காம் மாதத்தில் அம்மதநீர் நிறைவினால் உண்டாகும், பெரிய இருளுக்குத்தப்பியும்,…..

ஐந்தாம் மாதத்தில் உயிர் பெறாது இருத்தலினின்று தப்பியும்,….

ஆறாம் மாதத்தில் கருப்பையில் தினவு மிகுதியால் உண்டாகிய
துன்பத்தினின்றும் தப்பியும்,…..

ஏழாவது மாதத்தில் கருப்பை தாங்காமையால் பூமியில் காயாய்
விழுவதனின்று தப்பியும்,….

எட்டாவது மாதத்தில் வளர்ச்சி நெருக்கத்தினால் உண்டாகும் துன்பத்தினின்றும்தப்பியும்,…..

ஒன்பதாவது மாதத்தில் வெளிப்பட முயல்வதனால் வரும் துன்பத்தினின்றுதப்பியும்,…..

குழந்தை வெளிப்படுதற்குத் தகுதியாகிய பத்தாவது மாதத்தில்,
தாய்படுகின்றதனோடு தான்படுகின்ற, கடல் போன்ற துயரத்தினின்று தப்பியும்…….,

பூமியிற் பிறந்த பின்பு, வளர்ச்சியடையும் வருடங்கள் தோறும் தாய் தந்தையர்முதலியோர் நெருக்கியும், அழுத்தியும் செய்கின்ற எத்தனையோ பல
துன்பங்களில் தப்பியும் …….
காலைப் பொழுதில் மலத்தாலும், உச்சிப் பொழுதில்பசியாலும், இராப்பொழுதில் தூக்கத்தாலும், ஊர்ப்பயணங்களாலும் உண்டாகின்ற துன்பங்களினின்று தப்பியும் …..

என்று திருவாத ஊரர் எனும் மாணிக்க வாசகர் விவரிக்கிறார் .

மாணிக்கம் போன்ற சொற்களை சொல்லுவதால் அவர் மாணிக்க வாசகர் என்று போற்றப்பட்டார் .

திருவாசகத்திற்கு உருகார் எவர் எனும் அளவிற்கு ஞானத்தை பற்றியும் யோகத்தை பற்றியும் கருணையுடன் அவரது பாடல்களில்நமக்கு விளக்கியுள்ளார் .

இப்போது மேலே குறிப்பிட்ட குழந்தையும் அதன் கருவில் வளரும் திறன் பற்றியும்சொன்ன செய்திகள் அவரது போற்றித் திருவகவல் எனும் நூலில் இடம் பெற்றிருக்கும் சில வரிகள் ஆகும் .

மயிலின் ஓசையை ‘அகவல்’ என்பார்கள். ஆண் மயில் தன் இணையைக் கூட
முற்படும்போது ஏற்படுத்தும் ஓர் இனிய ஓசையினையே நாம் ‘அகவல்’
என்கிறோம். அது போல, ஓர் அருளாளர் இறைவனுடன் இரண்டறக் கலக்கும்
போது தன்னுடைய அருள் ஆனந்தக் களிப்பினை / நிலையினை தமிழ் பாடல்
வழியாக வெளிப்படுத்துவதற்கு ‘அகவல்’ என்று பெயர் வைத்தனர்.

கூற்றும் மாற்றமும் இன்றியே கருதியது
சாற்றல் வரையாது என்பதே அகவல்.
இருவர் உரையாடலாக இல்லாமல் ஒருவர் மட்டுமே பேசுவதாக அமைவதுஅகவல்

இதனைப்பின்பற்றி அண்மையில் வாழ்ந்த வள்ளலார், அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடத்தில் இணைந்தஅனுபவத்தினை ‘அகவல்’ மொழியாக பாடலாக இயற்றிக் களிப்புற்றார்.

அருட்பெருஞ்ஜோதி அகவல்’ என்பது 1596 அடிகளைக் கோண்ட ஒரே பாடல்
ஆகும். இதனை வள்ளலார் ஒரே இரவில் எழுதியாக கூறுவர். தொல்காப்பியம்கூறுவதுஆசிரியப்பா மூன்றடிச் சிறுமையும் ஆயிரம் அடி பெருமையும் பெற்று வரும்,என்று கூறுகிறது அது , போன்று ஆயிரம் அடியால் வந்த ஆசிரியப்பா இதற்கு முன்னர் தமிழ்இலக்கியத்தில் எதுவும் இல்லை.

சிறந்த ஞான நூலான அவ்வையின் விநாயகர் அகவலும் மிகச் சிறப்பு பெற்றது .

அவ்வாறே மாணிக்க வாசகரின் போற்றித் திருவகவல் மிக மிக சிறப்பு கொண்டது .

இப்போது அந்தப்பாடலைப்பார்ப்[போம்

வழுத்துதற் கெளிதாய் வார்கடல் உலகினில் 10
யானை முதலா எறும்பீ றாய
ஊனமில் யோனியி னுள்வினை பிழைத்தும்
மானுடப் பிறப்பினுள் மாதா உதரத்து
ஈனமில் கிருமிச் செருவினிற் பிழைத்தும்
ஒருமதித் தான்றியின் இருமையிற் பிழைத்தும் 15
இருமதி விளைவின் ஒருமையிற் பிழைத்தும்
மும்மதி தன்னுள் அம்மதம் பிழைத்தும்
ஈரிரு திங்களிற் பேரிருள் பிழைத்தும்
அஞ்சு திங்களின் முஞ்சுதல் பிழைத்தும்
ஆறு திங்களின் ஊறலர் பிழைத்தும் 20
ஏழு திங்களில் தாழ்புவி பிழைத்தும்
எட்டுத் திங்களிற் கட்டமும் பிழைத்தும்
ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத்தும்
தக்க தசமதி தாயொடு தான்படும்
துக்க சாகரத் துயரிடைப் பிழைத்தும் 25
ஆண்டுகள் தோறும் அடைந்தஅக் காலை
ஈண்டியும் இருத்தியும் எனைப்பல பிழைத்தும்
காலை மலமொடு கடும்பகற் பசிநிசி
வேலை நித்திரை யாத்திரை பிழைத்தும் …..என்று தொடர்கிறது

தமிழில் கொட்டிக்கிடக்கும் ஞான நூல்களை போற்றுவது நமது கடமை !

-அண்ணாமலை சுகுமாரன்
Latest breaking news in tamil

 

The way our benefactors describe
 the appearance of children in tamil text. 

Comment here